22 January 2010

காதலிப்பவர்கள் மட்டும் கவனியுங்கள்...

Posted by Gunalan Lavanyan 6:30 AM, under | 2 comments

அந்த ஓடைக்குப் போனால்
அதில் நான் இறங்குவதேயில்லை...
கால்களால் எப்படி இறங்குவது
அது தேவதை குளித்த தீர்த்தம்!

தேவதை ஓடுகிறாள்
காற்சலங்கை கழன்று வீழ்கிறது
செத்துவிட்டது இசை.

அரிசிமாவில் கோலம் போட்டு
எறும்புக்கு காட்டுகிற கரிசனத்தில்
கொட்டும் பனியில்
ஒளிந்திருந்து பார்க்கிற
எனக்கு கொஞ்சம் காட்டக்கூடாதா?
கடைக்கண் பார்த்து...



அவள் ஆண் சாமி
கோயில்களுக்குப் போவதில்லை!
‘என் புருஷனை மயக்கிவிடாதே’ என்று
பெண் சாமிகள்
சண்டைக்கு வருகின்றன
ஆதலால்...

பழத்திலேயே
தக்காளிதான் அழகு!
அதுதான்
அவளைப் போலவே இருக்கிறது...

- சா.இலாகுபாரதி

21 January 2010

சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!

Posted by Gunalan Lavanyan 9:53 PM, under | 1 comment

ஐனாக்ஸ் – மயிலாப்பூர்
(சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!)

இந்தியாவிலேயே மிக அதிகமான திரைகளைக் கொண்ட நிறுவனம் ஐனாக்ஸ் லீஸுர் லிமிடெட் (Inox leisure ltd). இந்தியா முழுக்க 19 நகரங்களில் 101 திரைகளை ஐனாக்ஸ் கொண்டிருக்கிறது. மிக அதிகமான ஐனாக்ஸ் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களில்தான் இருக்கின்றன. சென்னையிலும் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலில்தான் ஐனாக்ஸ் இருக்கிறது. மொத்தம் நான்கு ஸ்க்ரீன்கள். முக்கியமான எல்லா மொழிப் படங்களும் காட்சியிடப்படுகின்றன.

ஐனாக்ஸில் பிலிம் சுருள்களின் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் முறையைவிட பிலிமில் ஓடும் படங்கள்தான் கிளாரிட்டியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் கூறுகிறது. பிலிம் மூலம் படம் திரையிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு செலவு சற்று அதிகம் என்றாலும், பார்வையாளர்களுக்கு துல்லியமான காட்சியை இதனால் தரமுடிகிறது என்று கூறுகிறார் சென்னையின் பொது மேலாளர் விவேக் வெட்டாத் (Vivek vettath). தவிர துல்லியமான ஒலி எழுப்பும் DDs சவுன்ட் எஃபெக்ட்ஸ் இங்கு உள்ளது.

லாபியிலிருந்து தியேட்டர் வரை முழுக்க கார்பெட், ஏசி. ஐனாக்ஸுக்கே சொந்தமான கான்டீன் என்று உயர்தரமான ஒரு தியேட்டராக ஐனாக்ஸ் திகழ்கிறது.

ஐனாக்ஸ் பிட்ஸ்
  • ஐனாக்ஸ் வருபவர்கள், சிட்டி சென்டரில் ஃபுட் கோர்ட், லேன்ட்மார்க், வியர்ஸ் ஷாப்பிங் என்று போகும் வசதி.
  • தியேட்டருக்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்ட்டி புரொஜக்டர்தான் மூலம்தான் இங்கு படங்கள் திரையிடப்படுகின்றன.
  • சர்வதேச ஆலோசகர்களின் பரிதுரைப்படி அமைக்கப்பட்ட ஆடிடோ ரியம்.
  • நான்கு தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் மொத்தம் 900-க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து படம் பார்க்க முடியும்.
  • வென்டர் டிக்கெட் புக்கிங் வசதி இந்தியாவிலேயே ஐனாக்ஸில் மட்டுமே இருக்கிறது. தவிர ஆன்லைன் புக்கிங், டிக்கெட் ஹோம் டெலிவரி வசதியும் இருக்கிறது.

டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120

- சா.இலாகுபாரதி

சென்னைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்!

Posted by Gunalan Lavanyan 8:09 AM, under | 2 comments

மாயாஜால் - கிழக்கு கடற்கரைச் சாலை



திருவான்மியூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கத்திய பாணியில் பல வசதிகளுடன் கூடிய முதல் திரையரங்கம்; 10 ஸ்க்ரீன்கள். எந்த நேரத்திலும் படம் பார்க்கக்கூடிய வசதி. டிஜிட்டல் கியூப் டெக்னாலஜியில் திரையிடப்படும் படங்கள். டிடிஎஸ் சவுன்ட் சிஸ்டம். ஸ்டெப்ஸ் டைப்பில் வசதியான இருக்கைகள் என்று நவீன ‘மாயலோகம்’தான் மாயாஜால்.

தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என மக்கள் அதிகமாகப் பார்க்கிற மொழிப் படங்கள் ஸ்க்ரீன் செய்யப்படுகின்றன. இந்தியாவில் முதன்முறையாக போனிலேயே டிக்கெட் புக் செய்யும் வசதி இங்கிருக்கிறது. இது மொபைல் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதுபோல மிகச் சுலபம். 044-43436565 என்ற நம்பரை டையல் செய்தால் கம்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட குரல் டிக்கெட் புக்கிங்குக்கு வழிசொல்லும். தவிர, ஆன்லைன் புங்கிங், ஹோம் டெலிவரி வசதியும் உண்டு.



ஸ்க்ரீனிங்ஸ், ப்ளேயிங்ஸ், ஷாப்பிங்ஸ், ஈட்டிங்ஸ், ஸ்விம்மிங்ஸ், டிரிங்கிங்ஸ், ஸ்லீப்பிங்ஸ் என்று வாழ்க்கையைக் கொண்டாட நினைப்பவர்களுக்கு இவை அத்தனையும் இங்கு உண்டு. சுருக்கமாக ஒரு சொர்க்கபுரிதான் மாயாஜால்.
நாள்முழுக்க இங்கேயே செலவழிக்கும் அளவுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள். இன்டோர் கேம்ஸ், கிரிக்கெட் கிரவுன்ட், ஷூட்டிங் ஸ்பாட், ரிசார்ட் என்று
27 ஏக்கரில் ஒரு வளர்ந்த நவீன கிராமம். 1500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும் வசதி.



செட்டிநாடு முதல் சைனீஸ் புட்ஸ் வரை எல்லா வகையான உணவும் கிடைக்கும் புட்கோர்ட்டும் இருக்கிறது. சென்னைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்.

மாயாஜால் பிட்ஸ்
  • கமல் நடித்த ‘தசாவதாரம்’ படம் தினமும் 48 காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்பட்டிருக்கிறது.
  • எந்திரன் படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப் பட்டிருக்கின்றன.
  • சர்வதேச அளவில் விளையாடப்படும் ‘பெயின்ட்பால்’ கேம் இங்கு ஸ்பெஷல்.
  • 100க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.
  • மாயாஜால் ரிசார்ட்டில் உள்ள பாருக்குள் நுழைந்தால் காட்டிற்குள் நுழைந்த ஒரு ஃபீலிங்கோடு மது அருந்த முடியும்.
  • வீட்டுக்குத் தேவையான ஹவுஸ் ஹோல்ட் திங்க்ஸும் இங்கு பர்ச்சேஸ் செய்யலாம்.


டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120 

20 January 2010

இதய நோயாளிகள் இதைப் படிக்கவேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

Posted by Gunalan Lavanyan 10:12 PM, under | 1 comment

அபிராமி மெகா மால் – புரசைவாக்கம்


தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அபிராமி மாலில்தான் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சீட்டிலிருந்தே பட்டன் அழுத்தினால், தேடி வந்து ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ் ஆர்டர் எடுப்பார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் டிஜிட்டல் புரொஜக்ஷன் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 4 தியேட்டர்கள். இதில் ஸ்ரீ அன்னை அபிராமி, சீன கலாசார பாரம்பரியத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்தாள் முழுக்கமுழுக்க சீனாவிலேயே படம் பார்க்கும் மனநிலை வந்துவிடும். இதேபோல் சொர்ண சக்தி, எகிப்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட திரையரங்கம். இப்படி கலாசார முறைப்படி தியேட்டர் அமைக்கப்பட்டு இருப்பது இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறை. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காருக்கு லிஃப்ட். இப்படி நிறைய முதன்முறை சிறப்புகள் அபிராமியில் உண்டு.



மாலுக்கு ஷாப்பிங் வருபவர்கள் படம் பார்க்கலாம். படம் பார்க்க வருபவர்கள் ஷாப்பிங் செய்யலாம். இங்கு உள்ள ஃபுட் கோர்ட்டில் எல்லாவித உணவுகளும் கிடைக்கும். கிஸ்ஸிங் கார்; கிட்ஸ் வேர்ல்ட், ஃபிஷ் வேர்ல்ட், ஸ்னோ வேர்ல்ட் என அல்டிமேட் என்டர்டெய்ன்மென்ட் இங்கு உண்டு. மெகா ஸ்னோ வேர்ல்டில் நுழைந்தால் இடி, மின்னல், புயல், ஐஸ் மழை என குளிர் பிரதேசங்களில் மட்டுமே ஏற்படும் அபூர்வக் காட்சிகளைப் பார்க்கமுடியும். ப்யூரிஃபை செய்யப்பட்ட மினரல் வாட்டரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் வேர்ல்ட் இந்த ஸ்னோ வேர்ல்ட். இந்த ஐஸை சாப்பிடவும் செய்யலாம். அவ்வளவு சுத்தம்.



மெகா மாலின் மற்றுமொரு ஸ்பெஷல் Horror House இது திட்டமிடப்பட்ட திகில் வீடு. குழந்தைகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இந்தப் பேய் வீட்டுக்குள் அனுமதி இல்லை. உள்ளே போய் வருபவர்கள் பேய் அறைந்த மாதிரிதான் வெளியே திரும்புவார்கள். அவ்வளவு திகில். உண்மையைப் போல அமைக்கப்பட்ட பொய்தான் இந்த Horror House. சாகஸக்காரர்களுக்கு சரியான இடம்.

அபிராமியில் இன்னொரு ஸ்பெஷல், 4D தியேட்டர். 2D, 3D கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன 4D என்கிறீர்களா? இந்தத் தியேட்டரில் திரையிடப்படும் படங்கள் மொத்தம் 18 நிமிடங்கள்தான் ஓடும். படத்தில் ஹீரோ வில்லனை
ஒரு குத்து விட்டால் படம் பார்க்கும் நமக்கும் குத்து விழும். அழகான தேவதை ஒருத்தி ஜாஸ்மீன் சென்ட் அடித்துக்கொண்டால் நம்முடைய மூக்கை மல்லிகை வாசனை துளைக்கும். படத்தில் மழை வந்தால் நாம் நனைந்துவிடுவோம். இதுதான் 4D. இந்தப் படங்களை இஸ்ரேலிலிருந்து வரவழைக்கிறோம் என்கிறார் தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

அபிராமி மெகா மால் பிட்ஸ்
  • நுழைவாயில் முதல் டாய்லெட் வரை எங்கு திரும்பினாலும் ஏசி மயம். சென்டர்லைஸ்டு செய்யப்பட்ட ஏசி.
  • அபிராமியில் இரண்டு தியேட்டர்கள் 5 ஸ்டார் வசதிகள் கொண்டது.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக (1992-ல்) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அறிமுகப்படுத்தப்பட்ட தியேட்டர்.
  • மால் முழுக்க சுற்றிப்பார்க்கவும் சாப்பிடவும் பேக்கேஜ் வசதி இருக்கிறது.
  • அபிராமி தியேட்டர் ஆரம்பித்த 33 வருடங்களில், திரையிடப்பட்ட படங்களில் 240 படங்கள் 100 நாட்களைக் கடந்து வெற்றிபெற்ற படங்கள்.


டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.70, ரூ.90, ரூ.120

‘உம்மா உம்மம்மா’வுக்கு ஜாலி!

Posted by Gunalan Lavanyan 6:01 AM, under | No comments





சத்தியம் காம்ப்ளெக்ஸ் – ராயப்பேட்டை

தியேட்டருக்குள் நுழைந்தால் ஸ்டார் ஹோட்டலில் கால் வைப்பதுபோல் பிரமிப்பு. ‘குளுகுளு’ சென்டர்லைஸ்ட் ஏசியோடு, திரும்பிய பக்கமெல்லாம் எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் அப்டேட்டாகும் சினிமா விளம்பரம். டாய்லெட்டில்கூட சின்னச் சின்ன டிஸ்ப்ளேஸ். இப்படி விளம்பரத்திலும் பல புதுமைகளைக் கையாள்கிற சத்தியம், நவீன வசதிகளோடு இயங்கும் இந்தியாவின் முன்னணி திரையரங்கம்.


சென்னையின் பிரதான இடமான அண்ணா சாலையிலிருந்து மிக அருகாமையில் இருப்பது தியேட்டரின் ப்ளஸ். இது ஒரு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோ லிவுட் என்று எல்லா மொழிப் படங்களும் ரிலீஸாகும் அதே தினத்திலேயே திரையிடப்படுவது அடிஷனல் ப்ளஸ்.

சத்தியமில் உள்ள 6 தியேட்டர்களும் ஃப்லிம் சுருள் இல்லாமல், 2D டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. இங்கு 3D-Rdx அனிமேஷன் படங்கள் திரையிடக்கூடிய அளவில் நவீன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சவுண்ட் எஃபெக்ட்ஸில் DDsஸைவிட அட்வான்ஸ் டெக்னாலஜியை சத்தியம் கையாள்கிறது.

சத்தியமில் டிக்கெட்டுக்காக கியூவில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைன் புக்கிங், போன் புக்கிங் மூலம் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்யமுடியும். எந்த சீட் வேண்டும் என்பதைக்கூட ஆன்லைனில் தீர்மானிக்கமுடியும். அப்படியே சூடாக ஸ்னாக்ஸ், ஹாட் டிரிங்ஸ், ஜில்லென்று கூல்டிரிங்ஸ்கூட ஆன்லைனில் ஆடர் செய்யலாம். படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது இவையெல்லாம் இருக்கையைத் தேடி வந்துவிடுவது கதையைவிட்டு வெளியே போகாமல் இருக்க பார்வையாளர்களுக்கு சூப்பர் சாய்ஸ்.

 

தியேட்டருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம். படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே போனால்கூட கவலையில்லை. அந்த ஒருமணி நேரத்தை விளையாடியே கழிக்கலாம். ஆமாம்! ‘ப்ளர்’ என்ற கேமிங் இங்கு உண்டு. இதில், ஸ்னோ பவுலிங், இன்டர்னெட் கேம்ஸ், வீடியோ கேம்ஸ், கார் ரேஸ், ஷூட்டிங் என்று குட்டீஸ் முதல் தாத்தாஸ் வரை யாரும் விளையாடலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக ‘மேஜிக் ஹேட்’. உம்மா குழந்தை, உம்மம்மா குழைந்தைக்கெல்லாம் இது ஜாலி டைம்பாஸ்.

விளையாடிவிட்டு அசதியாக இருந்தால் ‘எக்ஸ்டஸி’க்கோ ‘ப்ளர் கஃபே’வுக்கோ போய் சாக்லேட், ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், டிஃபன் என்று எதையாவது வயிறு முட்டத் மேய்ந்துவிட்டு ஹாயாக சினிமா போகலாம்.

இனி, பொழுதுபோகவில்லை என்று யாராவது சொல்லமுடியுமா?

சத்தியம் பிட்ஸ்
  • ‘S’ - விளம்பரங்களுடன் வெளிவரும் சத்தியமின் இலவச மேகஸின்.
  • இலவச பார்க்கிங் வசதி இங்கு உண்டு.
  • விரைவில் ஏழாவது ஸ்க்ரீன் வரப்போகிறது.
  • சினிமா ரசிகர்களுக்காகவே டெபிட் கார்ட் மாதிரி fuel card.
  • ப்ளரிலும் கேமிங்குக்கு தனி ரீசார்ஜ் கார்ட்.

  டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.100, ரூ.110, ரூ.120

- சா.இலாகுபாரதி

19 January 2010

காதலிக்காதவர்கள் படிக்கவேண்டாம்!

Posted by Gunalan Lavanyan 11:33 PM, under | No comments

அன்பிற்கினியவளே,

இப்போதும் நான் உன் கூந்தலைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுயெப்படி நான் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உன் பார்வையைப் போலவே, உன் ஸ்பரிஸத்தைப் போலவே, உன் சிரிப்பைப் போலவே உன் கூந்தலும் புதுப் பொலிவோடும் புது அழகோடும் எனக்குக் காட்சித் தருகிறது; தெரியவில்லை.

நக்கீரர் காலத்திலிருந்தே கேட்டுவருகிறார்கள், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால் கூந்தலுக்கு மணம் வருகிறதா..? அல்லது இயற்கையிலேயே கூந்தலிலிருந்து வாசனை வழிகிறதா?’ என்று.

இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீ பிறப்பாய் என்று தெரிந்திருந்தால், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால்தான் கூந்தலில் மணம் கமழ்கிறது’ என்று நக்கீரர் சொல்லியிருப்பாரா?
உன் கூந்தலிலிருந்து வழியும் வாசனை எப்படி வருகிறது என்பதில் எனக்கும் சந்தேகம்தான். ஆனால், (ஷாம்)பூவால்தான் வருகிறது என்பது மட்டும் இல்லை என்று எனக்கு நிச்சயம் தெரியும்.


அன்றொருநாள் பார்த்தேன், வாசனையற்ற பூக்களைச்  சூடிக்கொண்டு தெருவலம் வந்துகொண்டிருந்தாய். தெருவில் இருப்பவர்களின் பார்வை மொத்தமும் உன் கூந்தலைச் சுற்றிதான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி ஒரு வாசனையை நான் வாங்கிய எந்த வாசனை திரவியங்களிலிருந்தும் நுகர்ந்தது இல்லை. பார்த்த எந்தப் பூக்களிலிருந்தும் சுகித்தது இல்லை. வாசனையற்ற பூ, கூந்தலிலோ இயற்கையிலேயே மணம் இல்லையாம்! பின் எப்படி மணங்கமழும் கூந்தல்?!

நீ பூக்காரியிடம் பூ வாங்கும்போது பார்த்திருக்கிறேன். உன் கூந்தலின் ஓரம், ஓர் இடம் கிடைக்காதா என்று பூக்களெல்லாம் பிரயாசைப்பட்டு பெருமூச்சு விடுவதை.
அப்படி எத்தனை வயதுதான் ஆகிறது உன் கூந்தலுக்கு..? பதினெட்டு வயதாகிய உன்னைப் போலவே உன் கூந்தலும் இன்னமும் வயதுக்கு வராதது போலவே இருக்கிறதே!

நான் முதன்முதலாய் உன் கூந்தலுக்குதான் அறிமுகம்! மழைநாள் ஒன்றில் குடையின்றி மரங்களடர்ந்த சாலையில் மழையோடு பேசிக்கொண்டு நடந்து வந்தாய். மெல்லிய காற்றில் உன் கூந்தல் மழைச்சாரலோடு கைகுலுக்கி கட்டியணைத்தபோதுதான் தெரிந்துகொண்டேன் உன் தோழிதான் மழை என்பதை.

அப்போதுதான் ரோஜா தோட்டத்திலிருந்து பூ பறித்துவிட்டு நான் வெளியே வந்துகொண்டிருந்தேன்... தோழியோடு இருந்த மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே தோட்டத்தின் வாசலைப் பார்த்தது உன் கூந்தல். நான் நின்றுகொண்டிருந்தேன். என் கையில் கூடை இருந்தது. கூடையில் ரோஜா இருந்தது. இப்போது நான் ரோஜாவைப் பார்த்தேன், உன் கூந்தலையும் பார்த்தேன். கூந்தல் ரோஜாவைப் பார்த்தது, ரோஜா கூந்தலைப் பார்த்தது. மழை சிரித்தது. ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினேன் உன் கூந்தல் பெற்றுக்கொண்டது. நானும் சிரித்தேன். தோழர்களாகிவிட்டோம் நான், மழை, உன் கூந்தல்.

பிறகொரு நாள் நீ கோலப் போட்டியில் மயில் கோலம் வரைந்து கொண்டிருந்தாய். உன் கூந்தல், உன் பின்னங்களில் தூரிகையாகியிருந்தது. உன் கூந்தல்தான் எத்தனை அழகாய் வரைகிறது தெரியுமா? இப்போதெல்லாம் நான் உன் கூந்தலைப் பார்க்கும்போது நிறைய பேசுகிறேன். அதிகமாய் உன்னைப் பற்றிதான். ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் என் பேச்சை நிறுத்தி, நீ இவளை காதலிக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டது. மௌனமாகவே இருந்தேன். அதுவாகவே தெரிந்துகொண்டது. பிறகுதான் அந்தப் பேருந்துப் பயணத்தின்போது என் சட்டையில் சிக்குவதுமாதிரி சிக்கி உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

அப்போதுதான் உன் முகத்தைப் பார்த்தேன். ஆயிரம் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்த்ததுபோல அத்தனைப் பிரகாசம் உன் கண்களில். நீ குறுநகை பூத்தாய். நான் சிறுநகை பொழிந்தேன். கூந்தல் சிரித்தது. உன் உதடுகளிலிருந்து வழிந்தது... ‘கொஞ்சம் இருங்களேன்...”
இப்போது நான் அதிகமாகவே இருக்கிறேன் உன் இதயத்தில்.
எப்போது சந்திப்போம்?

மிகுந்த அன்புடன்

சா.இலாகுபாரதி.

17 January 2010

ரெட் சல்யூட்

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments


தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு ரெட் சல்யூட்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை,  அதன் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை, மக்கள் மனதில் விதைத்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேரூன்றி, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்ட தலைவர். தொடர்ந்து மக்களுக்காக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அவற்றை நிறைவேற்றியும் வைத்தவர்.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முதன்மையானவர். மேற்குவங்கத்தில் தொடர்ந்து 5 முறை 23 வருடங்கள் (1977 முதல் 2005 வரை) முதல் அமைச்சராக இருந்து மக்கள் பணி ஆற்றியவர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த நபரும், இதுவரை - இப்படி தொடர்ந்து ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பு வகித்தது இல்லை என்பது மக்கள் தலைவர் ஜோதிபாசு அவர்களுக்கு கிடைத்த மணிமுடி. அப்படிப்பட்ட தலைவரின் மரணச்செய்தி நம்மை நீங்காத துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மாபெரும் போராட்டக்காரர், மூத்த மார்க்சியவாதி, தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு நமது வலைப்பூ வீரவணக்கம் செலுத்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும், மேற்குவங்க மக்களுக்கும் மற்றும் தலைவரின் அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

- தலைவர் ஜோதிபாசு பற்றிய சிறப்புச்செய்திகள், புகைப்படங்கள் நாளை...

இனி நிம்மதியா சிரிங்க!

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 2 comments

ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன் உயிர்தப்ப, அவரின் தாடை எலும்பு நொறுங்கி, முகம் வீங்கிவிட்டது. வாய் திறக்க முடியவில்லை. முகம் கோரமாகிவிட்டது. 'ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியாகிவிட்டதே... மகனது வாழ்க்கை அவ்வளவுதானா?' என்று கண்கலங்கிவிட்டனர் ரமேஷின் பெற்றோர்.
ஆனால், ''மருத்துவம் இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ரமேஷின் பெற்றோர் கண் கலங்க வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகச் சீரமைப்பு மருத்துவர் செந்தில் முருகன்.
'ரமேஷின் பிரச்னையை எப்படி சரிப்படுத்தலாம்' என்று அவரிடம் கேட்டால், மளமளவென்று வருகிறது பதில்.


''இதுபோன்று விபத்தில் அடிபட்டு முகம் காயமடையும்போது தாடை நொறுங்கியிருக்கும். வாய் திறக்க முடியாது; சாப்பிட முடியாது. மிகுந்த அவஸ்தையாக இருக்கும். இதற்கு முன்பெல்லாம் கம்பி கட்டி சிகிச்சையளித்து வந்தோம். பற்களுக்கு இடையே கம்பி விட்டு, மேல் தாடை, கீழ்த் தாடையை சேர்த்து வைத்துக் கட்டுவோம். இப்படிச் செய்வதால் நான்கைந்து வாரங்களுக்கு வாயைத் திறக்க முடியாது; உணவருந்த முடியாது.
ஆனால், ப்ளேட்டிங் என்றொரு நவீன முறை இருக்கிறது. டைட்டானியம் என்றொரு மினி பிளேட் கொண்டு உடைந்த எலும்புப் பகுதியைச் சேர்த்துவைத்து ஸ்க்ரூ செய்துவிடுவோம். இந்த சிகிச்சையில் எப்போதும் போல் வாய் திறக்கலாம்; மிக எளிதாகவும் குணம் பெறலாம். என்றாலும், இதிலும் ஒரு சின்னப் பிரச்னை உண்டு. இந்த சிகிச்சையில் பொருத்தப்படும் டைட்டானியம், மெட்டல் ஆதலால், இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அதனை எடுக்க நேரிடலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக ரிசார்பிள் பிளேட்ஸ் (Rechargeable plates) வந்துவிட்டன. இவற்றை வாயிலிருந்து எடுக்கத் தேவையில்லை. நம் உடம்பில் உள்ள fluids மூலமாகத் தானாகவே இவை கரையும் தன்மை வாய்ந்தவை"" என்ற மருத்துவரிடம்,
'முகச்சீரமைப்பு வேறு எதுயெதெற்கெல்லாம் செய்யப்படுகிறது' என்றோம்.
"குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடான உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு போன்றவற்றுக்கு முகச் சீரமைப்பு சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. கருவுற்ற காலத்தில் தாய்க்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொடுப்பது போன்ற காரணங்களால்தான் இந்த அண்ணப் பிளவு, உதடுப் பிளவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்க முடியாது. பேச்சு சரியாக வராது. முகம் விகாரமாக இருக்கும். இதற்கான சிகிச்சையாக ஐந்தாறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். முதலில், உதடுப் பிளவுக்கு சிகிச்சை பிறகு அண்ணப் பிளவு. அப்புறம் இடுப்பெலும்பை எடுத்துப் பொருத்தும் ஒட்டறுவை சிகிச்சை என்று அறுவை பல நிலைகளில் நிகழ்த்தப்படும்.
ரிசல்ட் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கவனமுடன் செய்யப்படும் இந்த சிகிச்சைகளால் குழந்தைக்கு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாக மீட்டுத்தர முடியும்" என்ற மருத்துவர் செந்தில் முருகன், "முகச்சீரமைப்பு இன்றைக்குப் பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பொடி வைத்துப் பேசினார்.
'எப்படி' என்றோம். சொல்லத் தொடங்கினார்.
"பெண்களுக்குத் திருமண வாழ்வு இன்றியமையாதது. இதில் முகம் பெரும் பங்கு வகிக்கிறது. பற்கள் சற்று எடுப்பாக இருந்தாலே சுயநல ஆண்களால் பெண்கள் நிராகரிக்கப்படும் நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. எடுப்பாக இருத்தல், தாடை சிறியதாக அல்லது பெரிதாக உள்ளது. முகம் கோணலாகக் காணப்படுவது என்று எந்தவொரு குறைபாட்டையும் சரி செய்து. பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை முகச்சீரமைப்பு நிபுணர்கள் கொண்டுவருகிறார்கள்.
களிப்பில் ஆரம்பிக்கும் சிகிச்சை, அறுவை வரை உள்ளது. யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறோம். செலவும் மிகமிகக் குறைவுதான்" என்ற மருத்துவர், "இப்போது புதிதாக நோயாளிகளிடம் ஒரு பிரச்னையை நாங்கள் சந்திக்கிறோம். மேல் தாடை சிறியதாகவும் கீழ்த் தாடை பெரியதாகவும் இருக்கும்போது ஒருவருக்கு முகம் Dish face மாதிரி இருக்கும். இதற்கு Micrognathia என்று பெயர். இக்குறைபாட்டுக்கு எலும்பு விரிவாக்க சிகிச்சை மிகச் சிறந்தது. Distractor என்னும் கருவி கொண்டு தாடை எலும்பைத் தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்து இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து சிகிச்சை செய்யப்படும். இப்போது இந்த Distraction Osteogenesis என்கிற புதிய முறை வந்துவிட்டதால் எல்லாமே எளிதாகிவிட்டது. நோயாளிகள் இனி நிம்மதியாகச் சிரிக்கலாம்" என்றார்.

-சா.இலாகுபாரதி
2006, 9 ஜூலை கல்கி இதழில் வந்த கட்டுரை.