Showing posts with label பாப்கார்ன். Show all posts
Showing posts with label பாப்கார்ன். Show all posts

01 May 2011

ஃபோட்டோகிராஃபர்களும் அன்னா ஹசாரேவும்

Posted by Gunalan Lavanyan 9:15 AM, under | No comments

புகைப்படக் கலையில் ஆர்வமும் தாகமும் உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக இயங்கி வருகிறார்கள். இப்படியொரு அமைப்பை முதன் முதலில் தென்னிந்தியாவிலேயே பெங்களூருவில்தான் தொடங்கி யிருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள BWS (Bangalore Weekend Shoot) நண்பர்களின் இயக்கத்தை ஃபிளிக்கர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பார்த்த சென்னை நண்பர்கள் சிலரும் CWC (Chennai Weekend Clickers) என்று ஆரம்பித்து இயங்கிவருகிறார்கள். இதனால் ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் சந்தித்து ஒரே காட்சிகளைப் பல்வேறு கோணங்களில் சுட்டுத்தள்ளுகிறார்கள். அவர்களுடைய சங்கமத்தையும் பங்களிப்பையும் பார்க்கும்போது புகைப்படக்கலையில் ஆர்வமும் ஆசையும் உள்ள யாருக்கும் அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றத்தான் செய்யும்.

அப்படி, இந்த ஞாயிறு CWC நண்பர்களை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள BWSலிருந்து முரளிதரன் அழகர் வந்திருந்தார். தமிழர்தான். மென்பொருள் துறையில் உயர்பதவியில் இருக்கும் முரளிதரனுக்கு புகைப்படக் கலையில் வேட்கை அதிகம். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு அமைப்பு இயங்கிவருவதாகத் தெரிவித்தார். உடனே அந்த நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். சென்னை வரும்போது நிச்சயம் அறிமுகப்படுத்துவதாகக் கூறினார்.


அப்படித்தான் இந்த மே தினத்தில் ஜனத்திரளில் மெரினா கடற்கரையில் CWC சங்கமத்தை அறிமுகப்படுத்தினார். பல்வேறு துறைகளில் இயங்கிக்கொண்டு புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ள பலரை அப்போது சந்திக்க முடிந்தது. எல்லாரும் சின்ன குழந்தைகளாக மாறி கேமாராவை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னொருபக்கம் காந்தி சிலைக்கு அருகில் மனிதச் சங்கிலி அமைத்து இருந்தார்கள். எல்லாருடைய கைகளிலும் தேசிய கொடி. அவர்களைப் பார்த்ததும் இன்னைக்கு என்ன நாள் என்றே சற்று குழப்பமாக இருந்தது. கண்ணை ஸூம் பண்ணி பார்த்தால் இந்திவாலாக்கள், சிங், தமிழர், தெலுங்கர், மலையாளி, மார்வாடிகள் என்று எல்லா தரப்பு மக்களும் கைகோர்த்து நின்று கொண்டு, பாரத் மாதாக்கி ஜெய்! அன்னா ஹசாரேக்கி ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்... என்று கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்கும்போது இன்னொரு சுதந்திரவேள்வி ஆரம்பித்துவிட்டதா என்று தோன்றியது; மெய்சிலிர்த்தது! ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி மனிதச் சங்கிலி நடத்தினார்கள்.

I am in CWC group


அன்னா ஹசாரே பற்றி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கை வைத்திருக்கின்றன. நான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதால், அன்னா ஹசாரே பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இன்று அம்பலப்பட்டு நிற்கும் பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததில் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments


புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.



பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

புட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி

தமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு


















பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.

இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.



ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.

13 April 2011

பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி

Posted by Gunalan Lavanyan 1:14 AM, under | No comments

வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் போவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் இல்லாததால் கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால், தேர்தலில் வாக்களிப்பதற்காக பெரும்பான்மையான மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். பணி நிமித்தமாக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் பலர் வோட்டு போடுவதற்காக பஸ் பிடித்தி ஊருக்குத் திரும்ப கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். 

இதனால், செவ்வாய் அன்று (ஏப்ரல் 12) இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் நெரிசலில் மூழ்கியது. பேருந்தில் ஏறுவதற்குக் கூட இடம் இல்லாமல் 100 அடி சாலையில் மக்கள் நடந்தபடியே இருந்தனர். சிலர் லாரிகளிலும், பலர் சரக்கு வாகனங்களிலும் ஏறி பயணித்தனர். டாடா குட்டி யானை ஓட்டுனர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு பயணிகளிடம் வசூல் வேட்டை நிகழ்த்தத் தொடங்கிவிட்டனர். விழுப்புரம் - ரூ.200, திருவண்ணாமலை - ரூ.200, திருச்சி - ரூ.375, கும்பகோணம் - ரூ.350, மதுரை - ரூ.500 என்று வசூல் வேட்டை தொடர்கிறது.

அரசு போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளுக்கு சரியான ஏற்பாடு செய்யாததால் மக்கள் இப்படி பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

நிர்வாணம் இல்லையா? பூனம் பாண்டே பேட்டி

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 1 comment


இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். நிர்வாணமாக காட்சி தரவும் நான் தயார் - இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு முன் இப்படித்தான் அறிவித்து இருந்தார் இந்தி நடிகை பூனம் பாண்டே.



இந்த நிலையில் இந்தியாவும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையை கைப்பற்றிவிட்டது. ஆனால் பூனம்தான் பூரண நிர்வாணத்துக்கு தாவவில்லை. இதுபற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டனர். ஆனால், அதுகுறித்து தற்போதுதான் பூனம் விளக்கம் ளித்துள்ளார்.



இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு பூனம் பாண்டே அளித்த ஒரு பேட்டி:

பத்திரிகையாளர்: இந்தியா கோப்பையை வென்றதும் உங்களை எங்கேயுமே பார்க்க முடியவில்லை... நீங்களும் நிர்வாணமாகவில்லையே ஏன்?

பூனம் பாண்டே: என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்துதான் தனியாக ஓர் இடத்தில், வீரர்களுக்கு மட்டும் நிர்வாணமாகக் காட்சியளிக்க அனுமதிக்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ஆனால் அதை பிசிசிஐ ஏற்கவில்லை. என்னால் நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடமுடியாது. அது குற்றம். (பேசும்போது அது தெரியவில்லையாக்கும்.)

உண்மையில் நான் வேடிக்கைகாகத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் பலரும் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, என்னை மிரட்டினர். அதனால், செல்போனைக் கூட சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த நிலையில்தான் என் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டனர். இதனால்தான் நான் தலைமறை வானேன். ஆனால், மும்பையை விட்டு எங்கும் ஓடவில்லை.




பத்திரிகையாளர்: அப்படியானால் நீங்கள் விளம்பரத்துக்காகத்தான் அப்படி பேசினீர்களா..?

பூனம்: அப்படிச் சொல்லமுடியாது. நான் ஒரு டிவி சேனலுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். ஒரு பத்திரிக்கையின் அட்டைப் படத்துக்காக என்னை நிர்வாணமாக போஸ் கொடுக்கக் கேட்டனர். பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினர். ஆனால் அப்படிச் செய்தால் அது பப்ளிசிட்டி என்பதால் அதை நான் ஏற்கவில்லை. ஆனால், இப்போது இந்த விவகாரத்தால் எனக்கு ஒரு திரைப்படமும், நிறைய டிவி ஷோ வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

பத்திரிகையாளர்: அதுசரி, இந்த சமாச்சாரத்தால் உங்களுடைய லவ்வர் பாய் ஓடிட்டாராமே?

பூனம்: ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், சிங்கிளாகத்தான் இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச விரும்பவில்லை.

ஐயோ... ஐயோ...

12 April 2011

விண்வெளி வீரர் யூரி கெகாரின்

Posted by Gunalan Lavanyan 11:20 PM, under | 1 comment


ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோடு (2011 ஏப்ரல் 12) 50 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள் 1961ஆம் ஆண்டு யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து சாதனைப் படைத்தார். விண்வெளிக்குச் சென்றுவந்த முதல் மனிதன் யூரி கெகாரிதான்.

யூரி கெகாரின்


கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோட 50 ஆண்டுகள் நிறை வடைவதை ரஷ்யா ஆரவாரத்தோடு கொண்டாடிவருகிறது. 

1961க்கு முன்புவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யாதான் முதன் முறையாக இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது. ரஷ்யாவின் சாதனையைப் பார்த்து அமெரிக்கா வாய்மேல் விரல் வைத்து வேடிக்கைப் பார்த்தது. விண்வெளிக்கு சென்றது மட்டும் இல்லாமல், பூமியையும் சுற்றி வந்து யூரி கெகாரின் சாதனைப் படைத்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருந்தாலும்,இதற்கெல்லாம் முன்னோடியாக கெகாரினின் விண்வெளிப் பயணத்தை, ரஷ்யா கொண்டாடி வருகிறது. கிரம்லின் மாளிகையில் ஐம்பது துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுடன் இந்த நாள் நினைவு கூறப்பட்டது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வானியலாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், விண்வெளி ஆராய்ச்சி என்பது ரஷ்யாவின் முன்னணி இலக்குகளில் ஒன்றாகத் திகழ்வதாக தெரிவித்தார். இதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகளை ரஷ்யா செய்யும் என்றும் கூறினார்.

கெகாரின் தன்னந்தனியாக ஒற்றையடிப்பாதையில் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் இன்று பலருக்கும் நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் கெகாரின் ஒரு மைல்கல்.

11 April 2011

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

Posted by Gunalan Lavanyan 7:15 PM, under | 1 comment


ஏப்ரல் 13: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிற தினம். நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுக்கிற நாள். யாரைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் பிரச்னைகள் தீரும் என்று தீர்மானிக்கக் கூடிய நிலையில் தமிழக அரசியல் நிலை இல்லை. ஒருத்தர் அயோகியன் என்றால், இன்னொருத்தர் பரம அயோகியனாக இருக்கிறார். அதனால், பரம அயோக்கியனைவிட அயோகி யனை தேர்ந்தெடுப்பதே மேல் என்ற முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.



நம்முடைய வரிப்பணத்தை அரசுக்கு செலுத்துகிறோம். நம்முடைய வரிப் பணத்தில் இருந்துதான் தேர்தல் நடக்கிறது; அரசியல்வாதிகளின் கொள்ளை நடக்கிறது. நம்முடைய வரியிலிருந்துதான் நமக்கு வேண்டிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது.சில அரசியல்வாதிகள் அவர்களுடைய தேவை களையும் நமது வரி பணத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே நம்முடைய பணத்தை செலவழிக்கிற அதிகாரத்தை வேறொருவரிடம் கொடுக் கப்போகிற தினம் ஏப்ரல் 13.

ஒருநாள் இன்பத்துக்காக அரசியல் தரகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, 5 ஆண்டு காலம் அல்லல்பட வேண்டாம்.


  • கடந்த காலங்களில் யார் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
  • யார் மக்களுக்கு தீங்கு விளைவித்து இருக்கி றார்கள்?
  • யார் மக்களை பிச்சையெடுக்க வைத்திருக்கிறார்கள்?
  • விலைவாசி பிரச்னைகளுக்கு யார் காரணம்?
  • பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்?
  • இலங்கைத் தமிழர் படுகொலைகளுக்கு யார் காரணம்?
  • ரௌடிகள் அட்டகாசத்துக்கு யார் காரணம்?
  • எல்லா துறைகளிலும் மக்களைச் சுரண்டும் ஆட்சி யாருடைய ஆட்சி?
  •  நடிகர்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறவர்கள் யார்?
  • எந்த அரசியல் தலைவர் சிறந்த நடிகராக மக்களை ஏமாற்றுகிறார்?
  • எந்த நடிகர் சிறந்த அரசியல் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இப்படி பல்வேறு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு பதில் தேடுங்கள். அப்போது, எந்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியும்.

ஏப்ரல் 13 உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயிக்கும் நாள்!

நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை! வாக்களிப்பது நம் கடமை!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

06 April 2011

பதவியிலிருந்து கேப்டன் விலகல்

Posted by Gunalan Lavanyan 8:23 AM, under | No comments


இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் அதிரடி ஆட்டக்காரர் சங்ககாரா விலகினார்.  உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விடம் தோல்வியடைந்ததையடுத்து, சங்ககாரா கேப்டன் விலகிக் கொண்டார்.

sangakara


ஜெயவர்தனேவுக்குப் பிறகு 2009இல் கேப்டன் பொறுப்புக்கு வந்த சங்ககரா (33) செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசினார்:

”இரண்டு ஆண்டுகளாக, இலங்கை அணியின் கேப்டனாக இருந்ததற்கு, பெருமைப்படுகிறேன். உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வரை மகிழ்ச்சிதான்.

ஆனால், கோப்பையை கைப்பற்றாமல், தோல்வியடைந்தது, மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதனால், அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் ’டுவென்டி-20' போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் புதிய கேப்டனை நியமித்து, 2015 தொடருக்குள் சிறப்பாக தயார் செய்ய முடியும்” என்று கூறினார்.

05 April 2011

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா?!

Posted by Gunalan Lavanyan 8:53 AM, under | 1 comment

உலகக் கோப்ப போட்டிகள் முடிந்ததும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது சச்சின் வெளியிட்டிருக்கும் செய்தியே வேறாக இருக்கிறது.

sachin tendulkar


நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை கைப் பற்றியதையடுத்து சச்சின் மிகவும் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்கும் இந்தக் கனவை முழுமையாக அனுபவிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். அதனால் இப்போது ஓய்வு பெறுவதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றும் சச்சின் கூறியிருக் கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் களிடம் சச்சின் பேசியது வருமாறு:

”தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் என் மனதில் இல்லை. ஓய்வு பெற விரும்பினால், அப்போது வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போதைக்கு என் கவனம் முழுவதும் உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்.” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

சச்சின் எங்கே ரிடயர்ட் ஆகிவிடுவாரோ என்று வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவரது ரசிகர்களுக்கு, சச்சின் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா

Posted by Gunalan Lavanyan 8:18 AM, under | No comments

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு மார்ச் மாதம் 28-ம் தேதி நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இப்போது வெண்டிலேட்டரில் சுவாசிக்கும் பாபாவின் உடல்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் இல்லை. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாபாவுக்கு 85 வயதாகிறது.

30 March 2011

நம் வழி தோனி வழி!

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 1 comment


பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.







இந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...


இதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.

ஆனால், நடைபெற்றுவரும் 2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதியிலேயே ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து பழிதீர்த்துக்கொண்டது. இப்போது அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் வலுவான நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறது.

புதனன்று நடைபெற்ற அரையிறுப் போட்டியின் கதாநாயகனே எல்பிடபிள்யூதான்! இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால், சச்சின் 85, சேவாக் 38, ரெய்னா 36, கம்பீர் 27 ரன்கள் எடுத்து அணி 260 ரன்கள் சேர்க்க உதவினர். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒருகட்டத்தில் அதோகதிதான் என்று இருந்தபோது, நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேபோல பந்துவீச்சில் யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நெஹ்ரா இன்று பந்துவீசப் போகிறார் என்று தெரிந்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனி தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்று பேசினார்கள். ஆனால், எப்போதும் தோனி பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் செய்து பார்க்கும்போது அது வெற்றியையே அதிகம் தந்திருக்கிறது. சில நேரங்களில் தோல்வி ஏற்படும்போது துவண்டுபோகாமல் எப்போதும் புதிய அனுகுமுறையும், புதிய முயற்சியும் செய்து பார்ப்பதில் தோனி வல்லவர். அதை இந்த முறையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையோடு இருப்போம்!

நம் வழி தோனி வழி!

24 March 2011

ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!

Posted by Gunalan Lavanyan 11:01 PM, under | 2 comments


வியாழன் அன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே இந்தியா வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது.



கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்த ஆஸ்திரேலியா பல முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு காணப்பட்டது. அது இந்த 2011 உலகக் கோப்பையிலும் பிரதிபலித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நடந்த காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலிருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழையாமல், ஆஸ்திரேலியா வெளியேறியது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 57 ரன்னும், டெண்டுல்கர் 53 ரன்னும், கம்பீர் 50 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அதேபோல இந்தப் போட்டியில் ஜாக்கிர் கான், அஸ்வின், யுவராஜ் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரிப்பை கட்டுப்படுத்தினர்.

போட்டியின் ஒருகட்டத்தில் தோனி பெவிலியன் திரும்பிய பிறகு இந்தியா வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது யுவாராஜுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பிரட்லீயின் பந்துகளை பவுண்ட்ரிக்கு விரட்டியடித்தார். ஒருகட்டத்தில் யுவராஜ் பவுண்ட்ரிக்கு பந்தை விரட்டியபோது, ஃபீல்டிங்கில் இருந்த பிரட்லீ பந்தை தடுக்க முயன்றபோது வேகமாக வந்த பந்து, லீயின் புருவத்தை பதம் பார்த்துவிட்டது.

இதனால், பிரட்லீயின் புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், முதல் உதவி செய்துகொண்டு ஆக்ரோஷமாக வந்து பந்து வீசிய பிரட்லீயின் பந்தை ரெய்னா விளாசித் தள்ளினார். இதனால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

தி.மு.கவை தோற்கடிக்கும் அ.தி.மு.க

Posted by Gunalan Lavanyan 10:34 PM, under | No comments

அதிமுக தேர்தல் அறிக்கை

தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தோற்கடிக்கும் அளவுக்கு அ.தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரிதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் திமுகவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. காரணம் எந்த இடத்திலும் திமுகவுக்கு சளைத்தது அல்ல அதிமுக என்பதை நிரூபிப்பதற்குத்தான். அது தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து உயர்நிலைப் பள்ளி (11, 12) மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.




மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை, காலணி. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கேபிள் டி.வி., அரசே ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் கேபிள் துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தவிர அது இல்லாவிட்டால் இது என்று இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் என மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. 

அதேபோல, வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை, ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ.12 ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாத காலமாக உயர்வு, திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு, மேலும் 4 கிராம் தங்கம், 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரமைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்துக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத் தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும் எனவும் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


திமுக தேர்தல் அறிக்கையில்...

ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த கவர்ச்சி திட்டங்கள்:


ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி. 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம். அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத் தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர் களுக்கு இலவச லேப்டாப்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதிதாக மனநல மருத்துவமனைகள். ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. குடும்பத்தில் முதல் பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை. அரசு பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதமாக உயர்வு. கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை. அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம். எல்லா மாவட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம். முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்வு. கோவை மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி.  மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும். உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும். சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும். சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை. பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக் கப்படும்.  சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை. சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரயில் அமைக்க நடவடிக்கை.

இந்த இரண்டு அறிக்கையில் எந்த அறிக்கை ஜெயிக்கப் போகிறது என்று மே 13 வரை காத்திருந்த பார்ப்போம்...

மஹாவீரரை போற்றுவோம்!

Posted by Gunalan Lavanyan 10:27 AM, under | No comments


இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார் வர்த்தமானர்.

ராஜ வாழ்க்கையையும், பிற செல்வங்களையும் இளமை யிலேயே துறந்தார். விருப்பு, வெறுப்புகளையும் வென்றதால்,  மஹாவீரர் என்று அழைக்கப்படுகிறார். ஜைன சமயக் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்த  மஹாவீரர், நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள் ஒவ்வொரு வருக்கும் தேவை எனப் போதித்தார்.

"எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது; உண்மைகளை மட்டுமே பேச வேண்டும்; முறையற்ற வழியில் எந்தப் பொருளையும் ஏற்கலாகாது; அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் ஆகாது; பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும்'' என்று அறிவுறுத்திய மஹாவீரர் பிறந்த தினம் ஏப்ரல் 16.

மஹாவீரரை போற்றுவோம்!

26 October 2010

ஹைக்கூ கவிதைப் போட்டி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | No comments

24 April 2010

கண்டுகொள்ளுமா தமிழக அரசு...?

Posted by Gunalan Lavanyan 4:10 PM, under | 3 comments




(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)

சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், செடிகள் பற்றிய அரிய வகைப் புத்தகங்கள் என்று வேறெங்கும் கிடைத்திராதப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களை யாரும் பயன்படுத்த முடியாது. ஆய்வுக்கும் உபயோகப்படுத்த முடியாது. காரணம், ஸ்கேன் செய்யப்பட்டோ, லேமினேஷன் செய்யப்பட்டோ புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கவில்லை. வெளியான ஆண்டில் எப்படி வெளியிடப்பட்டதோ அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், நிறைய நூல்கள் அக்கு அக்காக வருகின்றன. அதனால், சில நூல்களை கையால் கூடத் தொட அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம். புத்தகங்கள் அந்த அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், நூலகப் பணியாளர்களிடம் கேட்கும்போது அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கேன் செய்தால் நூல் மேலும் சிதிலமாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன அறிவியல் உலகில் புத்தகங்களை லேமினேன் செய்தோ, ஸ்கேன் செய்தோ பாதுகாப்பதற்கெல்லாம் வழிவகைகள், வாய்ப்புகள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது சில நவீன உத்திகளை வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியும் செய்ய முடியும். அரசாங்கத்தால் முடியாததுதான் என்ன? அதைச் செய்யுமா இந்த அரசு? உங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்து, இந்தச் செய்தியை பிரபலமாக்கி அரசின் கவனத்தை ஈர்க்க உதவலாமே! இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம் அடுத்தத் தலைமுறைக்கு... வாக்களியுங்கள் நண்பர்களே... உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இடுங்கள். முடிந்தால் கன்னிமரா செல்லுங்கள். சந்திப்போம்.

09 March 2010

வன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை!

Posted by Gunalan Lavanyan 10:59 PM, under | No comments

சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன.  ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின் இந்நாள் – முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை: (ஓர் பார்வையாளனாகவும், மாணவச் சமுதாயம் சாதிப்படிநிலைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறைக் கொண்ட ஒரு சமூகவாதியாகவும் மட்டுமே இருந்து இந்த அறிக்கையை முழுமையாக  உங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டு, மாணவர் சமுதாயத்துக்கு துணை நில்லுங்கள்… சாதிய அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுங்கள்…)

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர் மீது
நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல், வன்கொடுமை குறித்து
உங்கள் கவனத்திற்கு...

தமிழக கலைப்பாரம்பரியத்தில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்டது சென்னை அரசு கவின்கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாசு மருவற்ற பல கலை ஆளுமைகள் முதல்வர்களாகவும் முதல்வர் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

தற்சமயம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் ‘அடியாள்’ என்றும் ஜாதி வெறி செயல்பாடுகளுக்குப் பலசமயம் துறை ரீதியான தண்டனை அனுபவித்தவர் என்று பெயரெடுத்தவர் திரு.மனோகரன். ஓவியக் கல்லூரியில் பயிலும் சசிக்குமார் என்கின்ற முதுகலை முதல் ஆண்டு மாணவர் சுய ஆர்வத்தால் தமிழின் பெருமை மிகு அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடித்துள்ளார். மேலும், இத்திருக்குறள் சுடுமண் சிற்பங்களை செம்மொழி மாநாட்டு நேரத்தில் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். எழுதி முடிக்கப்பட்ட அனைத்து சிற்ப குறள் பலகைகளையும் சுடும் முயற்சிக்கு கல்லூரியில் ‘சூளை’ அமைத்துத்தர கல்லூரி முதல்வரை அணுகி இருக்கிறார். மாணவர்களுக்கு அவசியமான ‘சுடுமண் சூளை’ கல்லூரியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ரு.மனோகரன் அவர்கள் ‘சூளை’ அமைத்துத் தருவதாகவும் சிற்பம் செய்ய களிமண் வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிக்குமார் என்ற மாணவர் 26.2.2010 மாலை மனோகர் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இச்சூழலில் மாணவர்களின் உரிமையை கேட்கும் கமல்ஹாசன், எஸ்வேந்திரன் என்ற இரண்டு மாணவர்களை (சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு எஸ்வேந்திரன் வரவில்லை, கமலஹாசன் அந்த இடத்திலேயே இல்லை) இச்சம்பவத்தை காரணமாக வைத்து இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அம்மாணவர்களின் மீது புகார் கொடுத்த கல்லூரி முதல்வர், தன்னுடைய சமுதாயம் சார்ந்து இயங்கும் காவல்துறை அதிகாரிகளின் துணைகொண்டு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட எஸ்வந்திரன் தமிழக கலைச்சூழலில் கடந்த பத்து வருடங்காலமாக இயங்கிவரும் ஓவியரும் சிற்பியுமாவார். இவரது கைது அப்பட்டமாக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளது. இவர் உடன் பிறந்த தம்பி ஆனந்தகுமார் சிற்பக்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். சம்பவம் நடந்த இரவு சுமார் 11 மணி அளவில் சிற்பப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல்துறை ஆய்வாளர் ‘முருகேசன்’ தலைமையில் வந்த காவல் துறையினர் கல்லூரியிலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இது சக மாணவர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.
இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி தன்னுடைய அண்ணன் எஸ்வந்திரன்தான் வாகனத்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்தார் என்று எழுதி வாங்கிக்கொண்ட காவல்துறை இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட எஸ்வந்திரன், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை காலை அங்குவந்த மனோகரன், ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பொய் புகார் எழுதிக்கொடுத்தனர். அச்சமயம் அங்கிருந்த மாணவர் ஆனந்தகுமாரை மனோகரன் மேற்படி காவலர்களின் முன்னிலையில் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தற்காலிக முதல்வர் மனோகரன், சாதி ரீதியாகவே எப்போதும் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த குடந்தை அரசு ஓவியக் கல்லூரி, சென்னை அரசு ஓவியக்கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் மாணவர்களை சாதி ரீதியாக மிரட்டி, அச்சுறுத்தியதன் காரணமாக துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது.

பாதிப்பிற்குள்ளான மாணவர் எஸ்வந்திரன், ஆனந்தகுமார், கமலஹாசன் மூவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரி தற்காலிக முதல்வர் மனோகரனும் காவல்துறையினரும் கைகோர்த்து நிகழ்த்திய வன்கொடுமையான மனித உரிமை மீறலுக்கும் வன்முறைக்கும் பின்புலமாய் இருப்பது மனோகரனின் சமூகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (செயலர், சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை) என்பது தெரிய வருகிறது. தனக்கு மூத்த ஆசிரியர்கள் பலர் முதல்வராக வருவதை மீறி, தன் இனம் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துணையுடன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததும் தன்னை இனி எவரும் கேள்வி கேட்க முடியாது என மாணவர்களை பலசமயம் மிரட்டும்போது குறிப்பிட்டுள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதிப்பற்றாளர் என்பதற்கு சான்றாக சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளில் முதல்வர் பொறுப்புகளில் உள்ள அவரின் இனத்தைச் சார்ந்த மனோகரன் (சென்னை), சந்திரசேகரன் (கும்பகோணம்) ஆகியோர் சாதி ரீதியான வன்முறைகளை நிகழ்த்தி இருப்பது கலைக்கல்லூரி வரலாற்றில் அதிர்ச்சியளிக்கு இருண்ட காலமாகும். இச்சூழல் தொடர்ந்தால் வளரும் மாணவர் சமுதாயம், இதுவரை சாதி பாகுபாடு பார்க்காமல் இருந்த ஓவியக்கல்லூரிகளின் நிலைமாறி சாதியக் குழுக்களாக, பிரிந்து வன்முறை சூழலுக்குத் தள்ளப்படும் அவலம் நிகழும். இவ்வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலமாக இருந்து காவலர்களை ஏவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் அவரின் அடி வருடிகளாக செயல்படும் மனோகரன், சந்திரசேகரன் ஆகியோரின் சாதிய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் மாணவர்களின் பல்லாண்டுகால நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கைகோர்க்க அழைக்கிறோம்.
மேலும், இந்திய கலைச்சூழலில் மிக முக்கிய ஆளுமையான ஓவியர் சந்ரு அவர்களையும் இச்சம்பவத்தில் உள்நோக்கத்துடன் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளை பதிவுசெய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.
இவண்
அரசினர் கவின்கலைக் கல்லூரிகளின்
இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள்

02 March 2010

சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்!

Posted by Gunalan Lavanyan 9:47 PM, under | No comments

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்?

செவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்ட ஒரு நடிகையுடன் நித்யானந்தா சல்லாபித்துக்கொண்டு இருந்தார் அந்தக் காட்சியில். (சுவாமியின் லீலையை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.... http://www.envazhi.com/?p=16649)

பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பார்க்கவே முடியாத அளவுக்கு அருவெறுப்பும் அபாசமும் நிறைந்த அந்தக் காட்சிகள் நித்யானந்தாவின் பக்தகோடிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த வேடதாரியின் காம ரூபம், இந்த ஒரு நடிகையோடு மட்டும்தானா? இன்னும் எத்தனைப் பேரோ… எத்தனை பக்தைகளோ… ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பாவங்களைப் போக்குபவர்கள்… ஞானத்தையும் (அறிவையும்), அருளையும் வழங்குபவர்கள், துறவு பூண்டவர்கள் இப்படி துறவறத்தைத் துறந்து சல்லாபக் கோலம் பூணுவது என்ன முறையோ… நீங்களே பதில் சொல்லுங்கள்…

சாதாரண மனிதரைப் போன்ற ஆசையும் ஆசாபாசமும் இருப்பின் இந்தத் துறவுக்கோலமும் காவி வேஷமும் எதற்கு..?

இப்படி குருக்கள், குருஜிக்களின் குட்டும், காமக் கூத்தும் வெளிவந்துகொண்டே இருந்தாலும் அவர்களைத் தேடி போகிறவர்களின் (பக்தர்களின்) எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எப்போதுதான் திருந்தப்போகிறது இந்த மூடநம்பிக்கைச் சமூகம்…

01 February 2010

அமெரிக்காவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் 2 விருதுகள்

Posted by Gunalan Lavanyan 8:35 PM, under | No comments

அமெரிக்காவில் உள்ள 'நேஷனல் அகாடமி ஆஃப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்' நிறுவனம் 1958-\லிருந்து 'கிராமி விருது'  வழங்கி வருகிறது.

கிராமி விருதுகள் இசை உலகின் ஆஸ்கார் விருதாக மதிக்கப்படுகிறது. 'கிராம ஃபோன் விருது'தான் நாளடைவில் 'கிராமி விருது' என்று மாறிவிட்டது. 52-ஆம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 1 திங்கள்) விடியற்காலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டப்ளஸ் மையத்தில் நடைபெற்றது.


விருது பெறும்போது...

கிராமி விருதுக்கான பரிந்துரைகள் கடந்த இரண்டு மாதங்களாக இசை உலகில் சூடுபறக்க நடந்து வந்தது. ஏற்கனவே இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டிவந்த இசை உலக இளவரசர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கிராமி விருதுக்காக இரண்டு பிரிவுகளில் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஒன்று ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறப்பான இசை அமைத்தமைக்காக. மற்றொன்று ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் வந்த 'ஜெய்ஹோ' பாடலுக்காக... இந்த இரண்டு பிரிவுகளிலும் 2 கிராமி விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளில்தான் அவருக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமி விருது ரஹ்மானுக்கு கிடைத்திருப்பது இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2 விருதுகளையும் பெற்றுக்கொண்ட ரஹ்மான் விழா மேடையில் நன்றி தெரிவித்து பேசினார்.... ''கடவுள் பெரியவர். இந்திய இளைஞர்களே... நாம் மீண்டும் 2 விருதுகளைப் பெற்றுள்ளோம். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நான் தொடர்ந்து அமைதியாக என் பணியை செய்ய விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி'' என்று உற்சாகம் பொங்க தன் பாணியில் பேசி முடித்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

இன்று (பிப்ரவரி 1 திங்கள்) விடியற்காலை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ரசிகர்கள் குவிந்தனர். ரஹ்மான் இசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் திரண்டனர். அப்போது ரஹ்மான் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர். பாட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி பாத்திமா அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

30 January 2010

காதலர் தினக் கொண்டாட்டம்

Posted by Gunalan Lavanyan 10:11 PM, under | No comments

வலைப்பூ உலகில் ஒரு புதிய முயற்சி - பிப்ரவரி 1 (திங்கள்) முதல் பிப்ரவரி 15 வரை காதல் ஸ்பெஷல்.



காதலித்து திருமணம் செய்தவர்கள் - இப்போது காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காதலில் வெற்றி பெறுவது எப்படி? காதலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு டிப்ஸ்களை தர இருக்கிறார்கள். தினம் ஒரு ஜோடியாக 15 நாட்களுக்கும் 15 ஜோடிகள் காதல் டிப்ஸ் அளிக்க இருக்கிறார்கள்... இன்னும் காதல் கவிதைகள்... காதல் கடிதங்கள்... கஜிராஹோ சிற்பங்கள், காதலர்களின் புகைப்படங்கள்... மறைந்த பிரபலங்களின் உன்னதமான காதல் சங்கதிகள்... இன்னும் இன்னும் ஏராளமான பதிவுகளை பதிவேற்ற இருக்கிறேன். காதலர்கள், காதல் மணம் புரிந்தவர்கள், காதலிக்க பிரயத்தனப்படுவர்கள் எல்லோரும் நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை படித்து உங்களது கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... விமர்சனங்கள், பாராட்டுகள், ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
காதலைக் கொண்டாடுங்கள்!

மிகுந்த அன்புடன்
சா.இலாகுபாரதி