Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

23 April 2010

காதல் ரசம்

Posted by Gunalan Lavanyan 7:38 AM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!

அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!

இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!

நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!

ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!

ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!

11 February 2010

காதலை தீர்த்துக்கொள்வோம்!

Posted by Gunalan Lavanyan 11:15 PM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன்
என்று பொய்சொல்லப் போவதில்லை
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்வேன்!

பிறைமுகம்
கயல்விழி
சங்கு கழுத்து
மேகக் கூந்தல்
மலை மார்பு
கொடியிடை
வாழை கால்கள்
தாமரை பாதம் என்று
அவளை வர்ணிக்கமாட்டேன்!
இதயத்தில் புகுந்து
எப்போதும் என்னை
இம்சித்துக்கொண்டிருக்கும்
அவள் ஒரு பிடாரிகளின் அரசி!

குடை இல்லாமல் போகும் போது
மழை வருவதைப் போல
நீ இல்லாமல் போகும்போது
அதிகமாகக் காதல் வருகிறது எனக்கு!

இதயத்தில்
பூக்கள் பூப்பதில்லை
பொழிகின்றன
காதல் மழை!

வாழையடி வாழையாக
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்
இந்தத் தலைமுறையிலாவது வா
காமம் செப்பி
காதலை தீர்த்துக்கொள்வோம்..!

10 February 2010

சொப்பன சுந்தரி!

Posted by Gunalan Lavanyan 9:29 PM, under | No comments

விலைமாதர்களுக்கு சமர்ப்பணம்...


வெம்பி வெதும்பி முளைத்தவைகள்
பஞ்சப் படர்நெருப்பில் பற்றி எரிய
இச்சைத் துடுப்புகளை வீசி
படகோட்டும் கோவலர்களின்
படகிலேறி பயணிக்க வேண்டியவளாய்
அடர்ந்த பேரிருட்டில்
சொப்பனமாய் மாறி
காமுகர்களின் களவிக்கு வழிவகுத்தாள்
துர்பாக்கிய சுந்தரி.

எச்சில் படாதவைகளும்
வலி அறியாதவைகளுமாக இருந்தவள்
காமத்துடுப்புப் போட்டு
வெளியேறுவதென முடிவெடுத்து
காட்டுத்தீயில் பொழுதுகளாய்
மல்லாந்திருக்கிறாள்
மறித்துப்போன பிணமென!

- சா.இலாகுபாரதி
(12.01.2005-ல் எழுதிய கவிதை)

09 February 2010

குடை பிடித்து நடக்கும் காதல்

Posted by Gunalan Lavanyan 10:32 PM, under | No comments

குடையில்
மஞ்சள் கதிர்களை சுமந்து
நடப்பவளை தொடர்கிறேன்...
நேற்றொருநாள் நிகழாத
சந்திப்பையெண்ணி
பின்திரும்பி விழிகளால்
நலம் பகர்கிறாள்...
நான் இமைகளால்
வழிமொழிகிறேன்...
நடையின் வேகம் குறைத்து
நடக்கிறாள்...
நடக்கிறோம்..!
குடை பிடித்து நடக்கிறது
காதல்!

- சா.இலாகுபாரதி

04 February 2010

வெட்கப்படும் தேவதைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை - 4





வானத்திலிருந்து இறங்கி
முதன்முறையாக பூமிக்கு வந்த தேவதைகள்
நகர்வலம் வரத்தொடங்கியிருந்தனர்...

அது ஒரு இலையுதிர்க்காலம்.
தெருக்களின் இருமறுங்கிலும்
ஆடைகளைக் களைந்து
நின்றுகொண்டிருந்தன மரங்கள்.

தேவதைகள் வருவதை அறிந்து
நாணத்தால் இளம் பச்சை நிற ஆடைகளை
பூணத் தொடங்கியிருந்தன சில மரங்கள்.

வெட்கத்தை இழந்த மரங்கள்
‘நிர்வாணம்தான் யாராலும் பறிக்கமுடியாத
ஆடை’ என்று தத்துவம் பேசின.

நிர்வாணம் பார்த்து கண்கள் பூத்துவிட்ட
தேவதைகளுக்கு வெட்கத்தைப் பார்க்க
புதிதாக இருந்தது.

வெட்கம் குறித்து
யோசிக்கத் தொடங்கிய தருணத்தில்
ஆடை தறித்த மரங்கள்
பூக்கத் தொடங்கியிருந்தன.
தேவதைகள் வெட்கப்படத் தொடங்கியிருந்தனர்.

03 February 2010

அவள் ஒளிந்துகொண்டிருக்கும் இதயம்!

Posted by Gunalan Lavanyan 12:16 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதி கவிதை – 3

எப்போதும்
நாந்தான் சொல்லவேண்டும்
என்று நினைக்கிறாய்…

ஒரு முறையாவது
நீ சொல்வாய் என்று
உன் இதயத்தின் வாசல் வரை
வந்து பார்க்கிறேன்…

நீயோ ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறாய்…

நான் எப்படி சொல்வேன்
‘நீ ஒளிந்துகொண்டு இருப்பது
என் இதயம்தான்’ என்று...

வெட்கத்தில் கண்களைப்
பொத்திக்கொள்ள மாட்டாயா..!

02 February 2010

கண்களுக்குள் புகுந்து விளையாடும் தேவதை...

Posted by Gunalan Lavanyan 12:54 AM, under | 1 comment

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதி கவிதை - 2


கண்களுக்குள் புகுந்து
விளையாடியபடி இருக்கிறாள்
தேவதை
இதய வனத்தின்
நிச்சலனத்தைக் கலைத்து...

காட்டின் அடர்ந்த பரப்பில்
காட்சிகளை மாறிமாறி
அரங்கேற்றுகிறாள்
பற்பல ரூபங்களில்...

ஒவ்வொரு காட்சியிலும்
மகிழ்ச்சிக் குளத்தில் நீந்த
பழகுவிக்கும் என்னை,
பூக்களின் தென்றலின்
ஆரவார ஜதிகளுக்கிடையில்
முத்தமிட்டு முத்தமிட்டு
சொல்கிறாள்...
‘நான்
அவள் வசீகரன்’ என்று...

01 February 2010

ஆதலினால் காதல் செய்வீர்!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | 1 comment




காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்;
கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்?
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண்டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனும் சென்று பல துன்பமுற்றான்;
இங்கு புவிமிசைக் காவியங்கள் எல்லாம்
இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ?

நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே.

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ?
மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ?

- மகாகவி சுப்ரமண்யபாரதி

கூந்தலிலிருந்து வழியும் வாசனை...

Posted by Gunalan Lavanyan 12:34 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை -1

இப்போதுதான் முதன்முறையாக
அவளைப் பார்க்கிறேன்...
தோட்டத்திலிருக்கும்
பூக்களை கொய்கிறபோது
வருகிற வாசனையைப்போல்
மயிர் கற்றைகளை சரிசெய்கிறபோது
அவள் கூந்தலிலிருந்து
வாசனை வழிகிறது...



இதுவரை காணாத அழகு
இதற்குமுன் நுகராத வாசம்
புதிதாய் காதல் கசிய
கற்றுக்கொள்ளும் கண்கள்
முத்தம் செய்யாத இதழ்கள் என்று
பூப்படைந்து
இப்போதுதான் வெளியே வருபவள் போல்
இருக்கிறாள்.


அடையிலிருந்து வரும்
கோழிக்குஞ்சைப் போல்
நடக்கிறாள்...
சுடச்சுட உருட்டிய பஞ்சுமிட்டாய் போல்
சிரிக்கிறாள்...
இன்னும்
அவளை உங்களிடம் சொல்லமுடியாது
காதல் ரகசியமானது.

28 January 2010

காதல் நதி

Posted by Gunalan Lavanyan 7:33 AM, under | No comments

பூத்த நாள்முதலாய்
வண்டுகளே மொய்க்காத
மலரைப்போல் இருந்தாய்.
நான் வந்து மொய்த்துவிட்டேன்.



உன்
மகரந்தத்திலிருந்து உறிஞ்சுகிறேன்...
ஆனாலும்,
வாற்றாது சுரக்கிறது
தேன்.

ஒரு கணம்
கண்களைப் பார்த்தேன்.
உன் கண்கள் சொன்னது...
‘நமது காதல் ஜீவநதி’ என்று...
என் கண்கள் நதியாகிவிட்டன...

என்ன செய்யப் போகிறாய்..?
முடிந்தால் கட்டிக்கொள்...
அல்லது
ஆனந்தப் பெருநதியை வழியவிடு...

26 January 2010

காதல் தோய்ந்த மனது

Posted by Gunalan Lavanyan 10:19 PM, under | No comments

கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...

24 January 2010

மழை வந்துவிட்டது இதயத்தில்!

Posted by Gunalan Lavanyan 7:54 PM, under | No comments


  • மழை வந்துவிட்டது இதயத்தில்
  • மெல்லிய இசை எழுப்பி
  • சில்லென்று பெய்கிறது...
  • தென்றல் விசும்புகிறது
  • குளிர் நடுங்குகிறது
  • செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன...
  • பச்சைப் பச்சையாய் புல்வெளிகள்
  • கால்களை வருடி சிலிர்க்கின்றன.
  • தெரு ஓடையில் மிதக்கிறது
  • காகிதக் கப்பல் - காதல் கடிதம்.
  • பறவைக் குஞ்சுகள்
  • சிறகுகளில் ஒளிந்துகொண்டு
  • கீச்ச்... கீச்ச்... கீச்ச்...
  • முளைக்கத் தொடங்கியிருந்தன
  • மழைக் குடைகள்...
  • டீசல் வழிந்த சாலைகளில் வானவில்
  • நெப்பந்தஸ் மழைத்துளிகளை
  • ஜீரணித்து ஏப்பம் விட்டது & டப்
  • ஆர்மோன் மாற்றத்தால்
  • மழை விட்டுவிட்டு பெய்தாலும்
  • தூவானம் இருக்கும்.
  • இதயம் நின்றுபோகும்சமயம்
  • ஓய்ந்தாலும்
  • வேறு இதயத்தில் பெய்யும்
  • மழை

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்...

நேற்று காலை முழுக்க
என் வீட்டு
தோட்டத்தையே
சுற்றிச்சுற்றி வந்த
பட்டாம்பூச்சி
இன்று அந்த
அடர்ந்த முட்புதரில் சிக்கி
உயிர் நீத்துக் கிடந்தது.

சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
போய் வந்துகொண்டிருந்த
நாய்க் குட்டி
ஏதோ வாகனத்தின்
டயர் பதிந்த
அடையாளத்தோடு
நசுங்கிக் கிடந்தது.

சிலந்தி பின்னிய
வலையின் இடையே
ஈயின் மரணம்.
பிறிதொரு நாளில்
வீட்டை ஒட்டடை அடித்ததில்
நசிங்கிப்போனது
ஈயும் வலையும்.

சாலையோர மரத்தை
வெட்டிச் சாய்ந்ததில்
கூடு உடைந்து
சிதறிப்போனதிலிருந்து
செத்துக் கிடந்தது
காக்கைக்குஞ்சு.

மகுடியின் நாதத்திற்கு
படமெடுத்து ஆடும் பாம்பு
ஒரு நாளில்
மரக்கிளையில் தொங்கியபடி
நாதமில்லாது ஆடிக்கொண்டிருந்தது
காற்றோடு.

இப்படி
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
ஏதோவொரு வகையில்
நிகழ்ந்துவிடுகிறது
மரணம்
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருப்பது இல்லை.
நாம் எல்லோரும்
காத்திருக்கிறோம்
மரணத்திற்காக.

- சா.இலாகுபாரதி

2005-ல் 'கூட்டாஞ்சோறு' சிறுபத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் தேர்வு பெற்ற கவிதை.

23 January 2010

திருமணம் முடித்த ஆண்கள் கவனத்துக்கு...

Posted by Gunalan Lavanyan 7:25 AM, under | 1 comment

இறக்க நேரிட்டால்...

காலம் சென்ற
என் நண்பரின் படத்திற்கு
பூவும் பொட்டும்
வைத்தார்கள்.
கணவனை இழந்த
அடையாளம் என்று சொல்லி
அவர் இணை
இனி அவையெதுவும்
இல்லாமல் வெறுமனேயே
இருக்கவேண்டும் என்றார்கள்.




நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...

அவையெதுவும்
நான் அவளை
மணந்ததற்கான
அடையாளச் சின்னங்கள் அல்ல.
அதற்கு முன்பாகவே
அவையாவும் அவளின்
பயன்பாட்டுப் பொருட்கள்.

- சா.இலாகுபாரதி

2004-ல் எழுதிய கவிதை.

அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.
ஆனால், இப்போது திருமணத்துக்குப்பின்னும் 
இதே கருத்தில்தான் இருக்கிறேன்.

22 January 2010

காதலிப்பவர்கள் மட்டும் கவனியுங்கள்...

Posted by Gunalan Lavanyan 6:30 AM, under | 2 comments

அந்த ஓடைக்குப் போனால்
அதில் நான் இறங்குவதேயில்லை...
கால்களால் எப்படி இறங்குவது
அது தேவதை குளித்த தீர்த்தம்!

தேவதை ஓடுகிறாள்
காற்சலங்கை கழன்று வீழ்கிறது
செத்துவிட்டது இசை.

அரிசிமாவில் கோலம் போட்டு
எறும்புக்கு காட்டுகிற கரிசனத்தில்
கொட்டும் பனியில்
ஒளிந்திருந்து பார்க்கிற
எனக்கு கொஞ்சம் காட்டக்கூடாதா?
கடைக்கண் பார்த்து...



அவள் ஆண் சாமி
கோயில்களுக்குப் போவதில்லை!
‘என் புருஷனை மயக்கிவிடாதே’ என்று
பெண் சாமிகள்
சண்டைக்கு வருகின்றன
ஆதலால்...

பழத்திலேயே
தக்காளிதான் அழகு!
அதுதான்
அவளைப் போலவே இருக்கிறது...

- சா.இலாகுபாரதி

15 January 2010

அவளும் அவனும் மட்டும்...

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments





வானம் கறுத்து
கடற்கரையே காணாமல் போயிருந்த நேரம்.
மழைதான் வராமல் அடம்பிடித்தது.
அதைப் பார்த்து காற்று சும்மா இல்லை
வம்படியாக கைக்கொட்டிச் சிரிக்க,
அலையும் சேர்ந்துகொண்டு
கும்மாளமிட்டு பொங்கி நுரைத்தது.
இப்போது
வானம் சும்மா இல்லை
மின்னல் வேர் விட்டு வெடித்தது...
ஒளி, இடியுடன் கலந்து
பொத்துக்கொண்டு வந்தது
மழை.
காதல் பொருட்படுத்தாது
மையமிட்டிருந்தது கரையை...
மழைதான் என்ன செய்யும்..?
தூறல் குடை பிடித்துப் பார்த்துக்கொண்டது
காதலை.
அவளும் அவனும்
மழையின் குடையில் நின்று
இதழில் முத்தம் செய்யத் தொடங்கினர்...
இப்பவும் காற்று சும்மா இல்லை
குடையை வளைத்தது... நெளித்தது...
ஆனாலும், உடையவில்லை
குடை.
முத்தம் செய்தவர்கள்
இப்போது
விரல்களால் பேசத்தொடங்கினார்கள்...
அவள் இடை அவன் விரல்களோடும்
அவள் விரல்கள் அவன் கழுத்தோடும்
பேசிக்கொண்டிருந்தன...
வானம் மேகத்தோடும்
அலை கரையோடும்
காற்று மழையோடும் பேசி முடிந்தது.
இப்போது
காதல் காமம் பேசுகிறது...
யாரும் இல்லை கரையில்...
அவளும் அவனும் மட்டும்
குடை அந்தரத்தில் தொங்குகிறது...
மழை

08 September 2008

கொலை வாளினை எடடா!

Posted by Gunalan Lavanyan 9:38 AM, under | 3 comments

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?
உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;
உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா!

கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படை சேர்;
கடுவிட நேர் கருவிகள் சேர்!
நிலமே உழு! நவதானியநிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே
உனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்
எனவே முரசறைவாய்! இலையே உனவிலையே
கதிஇலையே எனும் எளிமை இனி மேலிலை
எனவே முரசறைவாய்... முரசறைவாய்!

- புரட்சிக்கவி பாரதிதாசன்

04 September 2008

புழக்கடையில் மேய்ந்துத்திரியும் பன்றி

Posted by Gunalan Lavanyan 7:50 PM, under | 1 comment

வா...
எனது ஒவ்வோர் அசைவையும் கண்காணி.
வந்தெனது
அந்தரங்கத்தை
உன் சவுகரியம் ஆக்கிக்கொள்.
சம்பந்தமின்றி
என் சுயத்தில் தலையிடு.
எச்சில் கையால்கூட காக்கை நீ
பகிர்தலையும் அன்பையும் பற்றி
முழுக்கப் பேசு!
உன் சூத்து நாறும்போது
அடுத்தவன் சூத்து நாறுவதாய் புரளிசெய்!
சாதியாலும் மதத்தாலும்
என் சனங்களையும்
என் ஈனச்சாமியையும்
கேலிக்குள்ளாக்கு...
புழக்கடையில் மேய்ந்துத்திரியும்
என் புழக்கடைச் சங்கதிகளை
வயிறு புடைக்கத்தின்று
செறிக்காமல் திரி...
செறிக்க வேண்டுமெனில்
கண்ணாடியில் உன் பிம்பத்தைப் பார்...
காரித்துப்பு...
செரிக்கத்தொடங்கும் இப்போது!