Showing posts with label ஹெல்த். Show all posts
Showing posts with label ஹெல்த். Show all posts

11 March 2011

சுகமான சுகப்பிரசவம்

Posted by Gunalan Lavanyan 11:32 PM, under | No comments

‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா ஆட்டோக்களின் முதுகிலும் பார்த்து இருப்பீர்கள். அதற்குக் காரணம், பெண் குழந்தை பெறுவதற்கான தகுதியை எட்டுவது இந்த 21 வயதில்தான் என்பது நாம் அறிந்ததே! ‘‘அதேபோல, 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதும் சில நேரங்களில் ஆபத்தை விளை விக்கலாம். எனவே, சுகப்பிரசவத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உணவு முறைகளும் நிறைய இருக் கின்றன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிரபல மகளிர் நோய் மருத்துவர் கே.பாலகுமாரி.

தாய்மையின் வயது

‘ ‘ ஒரு பெண், தாய்மை அடைவதற்கான சரியான பருவம் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள்தான். 21 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்குப் பின்போ தாய்மை அடைவதால், பிறக்கப்போகிற குழந்தையும் சரி,  தாய்மை அடைகிற பெண்ணும் சரி பல சிக்கல்களையும், நோய்களையும் சந்திப்பதற்கான ஆபத்து அதிகம். இருபத்தியோரு வயதுக்குப்பின் குழந்தை பெறுவதால், பிறக்கும் சிசுவுக்கு நோய்த் தாக்குதல்கள் குறைவு. அதனால், சிசுவியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சில நேரங்களில் இப்படி மருத்துவ விதியை மீறி குழந்தை பெறும்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்திருக் கிறார்கள்.

ஆனால், இது விதிவிலக்கு மட்டுமே. எல்லோருக்கும் இப்படி நேரும் என்று சொல்லமுடியாது. அதனால்தான், அரசாங்கமே பெண்ணின் திருமண வயதை வரையறுத்திருக்கிறது. எதனால் வயது வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பருவத்தில்தான் ஒரு பெண், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைகிறாள். அப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது கரு முட்டைகளும் வீரியத்தோடு வளர்ச்சியடைந் திருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியில்தான் குழந்தையின் ஆரோக்கியமே அடங்கியிருக்கிறது. அதேபோல பிரசவமும் நார்மலாக இருக்கும். சிசேரி யனைத் தவிர்க்கமுடியும். குழந்தையை வளர்ப்பதற்கு தாய் நல்ல சக்தியோடு திடகாத்திரமாக இருப்பாள்.

சராசரியாக 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை, வளர்ந்து அதே 21 வயது அடையும் போது, தன் வாழ்க்கையைத் தானே கவனித்துக் கொள்கிற பக்குவத்தை அடைந்துவிடும். அப்போது, தாய்க்கும் 42 வயது ஆகியி ருக்கும். அந்த நடுத்தர வயதிலேயே அவளும் தன் பிள்ளைக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கைச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். இளைய வயதில் ஓடியாடி வேலை பார்த்தது மாதிரி 50 வயதுக்குப் பிறகு அவளால் செயல்படமுடியாமல் போவதற் கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஒரு பெண் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமாக நல்லது என்றே சொல்வேன்.

கர்ப்பகால உணவு முறைகள்

அடுத்து, கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை. அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம். முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம். சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்’ என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க் க வேண்டும். சாதாரண மாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம்.

ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’

- சா.இலாகுபாரதி

நம் தோழி, பிப்ரவரி 2011

22 January 2010

புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...

Posted by Gunalan Lavanyan 4:01 PM, under | 3 comments

மனிதனின் கற்றல் அறிவு நாள்தோறும் புதிய புதிய வாசிப்பை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிலர், அதீதமான
ஆர்வக்கோளாறினால் புத்தகத்தைப் பிரித்தால் கடைசி அட்டை வரை படித்தே தீருவது என்று 'புத்தகமும் கையுமாக' தங்கள் வாசிப்புத்
தாகத்தைக் தணிக்க முயல்கிறார்கள்.
அவர்கள்தான், பயணத்தின்போது வாசித்தல், படுத்துக்கொண்டே வாசித்தல், சாப்பிடும்போது வாசித்தல், தொலைக்காட்சி பார்க்கும்போது
வாசித்தல் என்று இயல்பை மீறின நிலைக்குப் போய்விடுகிறார்கள்.
இதனால் அறிவுப் பெருக்கம் ஒருபுறம் நடந்தாலும் இப்படி 'புத்தகப்புழு'வாக இருப்பவர்களுக்கு நாளடைவில் கண்கோளாறுகள் ஏற்படும்
வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும். கண் இருந்தால்தானே படைப்புகளை நாம் பார்க்கமுடியும்.
'ஆரோக்கியமான வாசிப்பு முறை எப்படி இருக்கவேண்டும்?' என்பது குறித்து சென்னை, ராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவ
இணை இயக்குநர் டாக்டர் சுஜாதா மோகன் கூறுகிறார்.


''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது
படுத்துக்கொண்டே படிப்பது
பயணத்தின்போது படிப்பது
கண்களுக்கு ஆரோக்கியமா?"

"நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!" என்று ஆரம்பித்தார் டாக்டர் சுஜாதா மோகன்.

"அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல என்றுதான் சொல்வேன்!

பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.
அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது
டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம்.

ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை
முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள்
பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி
முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல
இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது
வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம்
வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும்
கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து,
விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.
அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இருக்கின்றன.

பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்
தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு
விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப்
பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங்
கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்!

தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.
அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான
கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும்.

ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான
ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை
அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும்
சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு
பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை
சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப்
பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!" என்று
சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார் டாக்டர் சுஜாதா மோகன்.

- சா.இலாகுபாரதி

17 January 2010

இனி நிம்மதியா சிரிங்க!

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 2 comments

ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன் உயிர்தப்ப, அவரின் தாடை எலும்பு நொறுங்கி, முகம் வீங்கிவிட்டது. வாய் திறக்க முடியவில்லை. முகம் கோரமாகிவிட்டது. 'ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியாகிவிட்டதே... மகனது வாழ்க்கை அவ்வளவுதானா?' என்று கண்கலங்கிவிட்டனர் ரமேஷின் பெற்றோர்.
ஆனால், ''மருத்துவம் இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ரமேஷின் பெற்றோர் கண் கலங்க வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகச் சீரமைப்பு மருத்துவர் செந்தில் முருகன்.
'ரமேஷின் பிரச்னையை எப்படி சரிப்படுத்தலாம்' என்று அவரிடம் கேட்டால், மளமளவென்று வருகிறது பதில்.


''இதுபோன்று விபத்தில் அடிபட்டு முகம் காயமடையும்போது தாடை நொறுங்கியிருக்கும். வாய் திறக்க முடியாது; சாப்பிட முடியாது. மிகுந்த அவஸ்தையாக இருக்கும். இதற்கு முன்பெல்லாம் கம்பி கட்டி சிகிச்சையளித்து வந்தோம். பற்களுக்கு இடையே கம்பி விட்டு, மேல் தாடை, கீழ்த் தாடையை சேர்த்து வைத்துக் கட்டுவோம். இப்படிச் செய்வதால் நான்கைந்து வாரங்களுக்கு வாயைத் திறக்க முடியாது; உணவருந்த முடியாது.
ஆனால், ப்ளேட்டிங் என்றொரு நவீன முறை இருக்கிறது. டைட்டானியம் என்றொரு மினி பிளேட் கொண்டு உடைந்த எலும்புப் பகுதியைச் சேர்த்துவைத்து ஸ்க்ரூ செய்துவிடுவோம். இந்த சிகிச்சையில் எப்போதும் போல் வாய் திறக்கலாம்; மிக எளிதாகவும் குணம் பெறலாம். என்றாலும், இதிலும் ஒரு சின்னப் பிரச்னை உண்டு. இந்த சிகிச்சையில் பொருத்தப்படும் டைட்டானியம், மெட்டல் ஆதலால், இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அதனை எடுக்க நேரிடலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக ரிசார்பிள் பிளேட்ஸ் (Rechargeable plates) வந்துவிட்டன. இவற்றை வாயிலிருந்து எடுக்கத் தேவையில்லை. நம் உடம்பில் உள்ள fluids மூலமாகத் தானாகவே இவை கரையும் தன்மை வாய்ந்தவை"" என்ற மருத்துவரிடம்,
'முகச்சீரமைப்பு வேறு எதுயெதெற்கெல்லாம் செய்யப்படுகிறது' என்றோம்.
"குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடான உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு போன்றவற்றுக்கு முகச் சீரமைப்பு சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. கருவுற்ற காலத்தில் தாய்க்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொடுப்பது போன்ற காரணங்களால்தான் இந்த அண்ணப் பிளவு, உதடுப் பிளவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்க முடியாது. பேச்சு சரியாக வராது. முகம் விகாரமாக இருக்கும். இதற்கான சிகிச்சையாக ஐந்தாறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். முதலில், உதடுப் பிளவுக்கு சிகிச்சை பிறகு அண்ணப் பிளவு. அப்புறம் இடுப்பெலும்பை எடுத்துப் பொருத்தும் ஒட்டறுவை சிகிச்சை என்று அறுவை பல நிலைகளில் நிகழ்த்தப்படும்.
ரிசல்ட் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கவனமுடன் செய்யப்படும் இந்த சிகிச்சைகளால் குழந்தைக்கு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாக மீட்டுத்தர முடியும்" என்ற மருத்துவர் செந்தில் முருகன், "முகச்சீரமைப்பு இன்றைக்குப் பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பொடி வைத்துப் பேசினார்.
'எப்படி' என்றோம். சொல்லத் தொடங்கினார்.
"பெண்களுக்குத் திருமண வாழ்வு இன்றியமையாதது. இதில் முகம் பெரும் பங்கு வகிக்கிறது. பற்கள் சற்று எடுப்பாக இருந்தாலே சுயநல ஆண்களால் பெண்கள் நிராகரிக்கப்படும் நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. எடுப்பாக இருத்தல், தாடை சிறியதாக அல்லது பெரிதாக உள்ளது. முகம் கோணலாகக் காணப்படுவது என்று எந்தவொரு குறைபாட்டையும் சரி செய்து. பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை முகச்சீரமைப்பு நிபுணர்கள் கொண்டுவருகிறார்கள்.
களிப்பில் ஆரம்பிக்கும் சிகிச்சை, அறுவை வரை உள்ளது. யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறோம். செலவும் மிகமிகக் குறைவுதான்" என்ற மருத்துவர், "இப்போது புதிதாக நோயாளிகளிடம் ஒரு பிரச்னையை நாங்கள் சந்திக்கிறோம். மேல் தாடை சிறியதாகவும் கீழ்த் தாடை பெரியதாகவும் இருக்கும்போது ஒருவருக்கு முகம் Dish face மாதிரி இருக்கும். இதற்கு Micrognathia என்று பெயர். இக்குறைபாட்டுக்கு எலும்பு விரிவாக்க சிகிச்சை மிகச் சிறந்தது. Distractor என்னும் கருவி கொண்டு தாடை எலும்பைத் தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்து இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து சிகிச்சை செய்யப்படும். இப்போது இந்த Distraction Osteogenesis என்கிற புதிய முறை வந்துவிட்டதால் எல்லாமே எளிதாகிவிட்டது. நோயாளிகள் இனி நிம்மதியாகச் சிரிக்கலாம்" என்றார்.

-சா.இலாகுபாரதி
2006, 9 ஜூலை கல்கி இதழில் வந்த கட்டுரை.