13 November 2010

வ குவார்ட்டர் கட்டிங் படங்கள்...

Posted by Gunalan Lavanyan 12:32 AM, under | No comments










வ குவார்ட்டர் கட்டிங் படத்தில் சில காட்சிகள்...





07 November 2010

உத்தமபுத்திரன்

Posted by Gunalan Lavanyan 10:48 PM, under | No comments













உத்தமபுத்திரன் படத்திலிருந்து சில காட்சிகள்...








சர்வதேச திரைப்பட விழா

Posted by Gunalan Lavanyan 5:14 PM, under | No comments

சர்வதேச திரைப்பட விழா அறிமுகக் கூட்டத்தில்...
சென்னையில் 8வது  சர்வதேச திரைப்பட விழா துவங்க இருக்கிறது.

காலம் காலமாக கோவாவில் நடத்தப்பட்டு வரும் உலகத் திரைப்பட விழாவைப் போல மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்த் திரையுலகினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைத் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த விழா டிசம்பவர் 15-லிருந்து 23 வரை 9 நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றன.
இந்தத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு தனது பங்காக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னமும் தனது பங்காக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இருப்பினும் விழாவுக்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும், இன்னும் நிதி திரட்ட வேண்டும் என்றும் இந்த விழா தொடர்பான கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். முதல்வரை நேரில் சந்தித்து கூடுதல் நிதி கேட்கும் யோசனை இருப்பதாகவும் விழாக்குழு தெரிவித்து இருக்கிறது.
நிறைவு விழாவில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக இரண்டு லட்சமும், இரண்டாவது பரிசாக ஒன்றரை லட்சமும் வழங்கப்பட இருக்கிறதாம். இந்த விழாவில் உலக அளவில் புகழ் பெற்ற 7 திரைப்பட இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் உள்ள உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.

26 October 2010

ஹைக்கூ கவிதைப் போட்டி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | No comments

24 April 2010

கண்டுகொள்ளுமா தமிழக அரசு...?

Posted by Gunalan Lavanyan 4:10 PM, under | 3 comments




(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)

சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், செடிகள் பற்றிய அரிய வகைப் புத்தகங்கள் என்று வேறெங்கும் கிடைத்திராதப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களை யாரும் பயன்படுத்த முடியாது. ஆய்வுக்கும் உபயோகப்படுத்த முடியாது. காரணம், ஸ்கேன் செய்யப்பட்டோ, லேமினேஷன் செய்யப்பட்டோ புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கவில்லை. வெளியான ஆண்டில் எப்படி வெளியிடப்பட்டதோ அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், நிறைய நூல்கள் அக்கு அக்காக வருகின்றன. அதனால், சில நூல்களை கையால் கூடத் தொட அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம். புத்தகங்கள் அந்த அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், நூலகப் பணியாளர்களிடம் கேட்கும்போது அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கேன் செய்தால் நூல் மேலும் சிதிலமாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன அறிவியல் உலகில் புத்தகங்களை லேமினேன் செய்தோ, ஸ்கேன் செய்தோ பாதுகாப்பதற்கெல்லாம் வழிவகைகள், வாய்ப்புகள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது சில நவீன உத்திகளை வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியும் செய்ய முடியும். அரசாங்கத்தால் முடியாததுதான் என்ன? அதைச் செய்யுமா இந்த அரசு? உங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்து, இந்தச் செய்தியை பிரபலமாக்கி அரசின் கவனத்தை ஈர்க்க உதவலாமே! இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம் அடுத்தத் தலைமுறைக்கு... வாக்களியுங்கள் நண்பர்களே... உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இடுங்கள். முடிந்தால் கன்னிமரா செல்லுங்கள். சந்திப்போம்.

23 April 2010

காதல் ரசம்

Posted by Gunalan Lavanyan 7:38 AM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!

அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!

இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!

நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!

ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!

ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!

03 April 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 6

Posted by Gunalan Lavanyan 4:02 PM, under | 2 comments

அமெரிக்கா பயணம்
சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் - ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய் வந்துவிட்டது. அண்ணா முதல்வராக இருக்கும்போது அவருக்கு வந்த வயிற்று வலி அவரைப் பாடாகப்படுத்தியது. பரிசோதித்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. புற்றால் வந்த தீராத வயிற்று வலியால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை செய்து முடித்தார்.

‘அண்ணா... அண்ணா...'
சிகிச்சைமுடிந்ததும் மருத்துவர்கள் அண்ணாவுக்கு சில ஆலோசனைகள் சொன்னார்கள். உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். மேடை ஏறுவதை கொஞ்ச காலத்துக்கு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடாது. அதனால், சுற்றுப்பயணங்கள் வேண்டாம். இப்போது உங்களுக்குத் தேவை - ஓயாத ஓய்வு ஒன்றுதான். இப்படி அவருக்கு என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுக்கொண்ட அண்ணா, இந்தியா வந்தார். விமானநிலைத்தில் ‘ஜேஜே’வென்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். உற்சாகம் குறையாமல் எட்டுத் திசைகளிலும் பார்த்தார். எங்கு திரும்பினாலும் ‘அண்ணா... அண்ணா...’ என்று குரல்கள். யோசித்தார். மக்கள் ஓயவில்லை; தொண்டர்கள் ஓயவில்லை; தம்பிகள் ஓயவில்லை; எனக்கெதற்கு ஓய்வு..? முடிவெடுத்துவிட்டார். அண்ணாவும் ஓயவில்லை. தமிழகத்துக்காக ஓயாமல் உழைத்தார். ஆனால், உடல் சும்மா இல்லை. ஓய்வு... ஓய்வு... என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய மூன்றாவது மாதத்தில் அண்ணாவின் உடல் தன்னிச்சையாக முடிவெடுத்து, படுத்துக்கொண்டது.

ஆமாம்! அண்ணா மீண்டும் நோயுற்றார்; அவதிப்பட்டார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். மீண்டும் உணவுக் குழாயையே தாக்கியிருந்தது புற்று. அண்ணா படுத்தபடுக்கையானார்; மக்கள் துயரப்படுக்கையில் வீழ்ந்தனர். அண்ணா உடல் தேர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனை செய்தது. தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்துவந்து போனார்கள். தமிழகத்தையே பதற்றம் தொற்றிக்கொண்டது. அண்ணாவின் உயிர் இறுதி முடிவெடுவு எடுத்துவிட்டது.

1969 பிப்ரவரி 2, இரவு 12.30 மணிக்கு வானொலி கண்ணீர் வடித்தது. உயிர் காற்றில் கலந்துவிட்டது. தமிழகமே கதறியது. அண்ணா மறைந்தார்.

கின்னஸ் சாதனை
வாழ்நாள் முழுவதும் அரசியல், எழுத்து, நாடகம், பத்திரிகை, சினிமா என்று பல்துறைகளிலும் சாதனை படைத்துக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா, இறந்தபின்னும் சாதனையாளராகவே இறந்தார். சாதனையென்றால் சாதாரணச் சாதனையல்ல. உலக அளவில் போற்றப்படும் கின்னஸ் ரெக்கார்ட்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் ஒன்றைரை கோடி (15 மில்லியன்) பேர். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். இறுதிச் சடங்குகள் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துகொண்டிருந்தன. வானத்திலிருந்து பார்த்தால், கடற்கரையெங்கும் மணல் இல்லை. வெறும் தலைகளாகவே இருந்தன. மக்கள் கூட்டம் அலையலையாக மோதியது. ஒன்றரைக் கோடி மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அண்ணா சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்
பெயர்:                        அண்ணாதுரை
காலம்:                        1909 - 1969
புனைபெயர்கள்:       சௌமியன், வீரன், பரதன், சமதருமன், ஒற்றன், சம்மட்டி
பிறந்த ஊர்:               சின்ன காஞ்சிபுரம்
பெற்றோர்:                 நடராஜன் - பங்காரு அம்மாள்
வளர்ப்புத்தாய்:         (தொத்தா) இராஜாமணி
உடன்பிறந்தவர்கள்: இருவர் (இரட்டையர்)
மனைவி:                    ராணியம்மாள்
குழந்தைகள்:             இல்லை. நான்கு வளர்ப்புப் பிள்ளைகள்                                                                                                                                            (பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு).
குடும்பத்தொழில்:     நெசவு
படிப்பு:                        இன்டர் மீடியட், பி.ஏ.(ஹானர்ஸ்), எம்.ஏ
தொழில்:        ஆங்கில ஆசிரியர், நாடகம், சினிமா, எழுத்து, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, அரசியல்
பத்திரிகை பணி:       பாலபாரதி, நவயுகம், விடுதலை, குடியரசு, ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), திராவிடநாடு, காஞ்சி, மாலைமணி, நம்நாடு, ஹோம் ரூல் (ஆங்கிலம்),
முதல் கட்டுரை:         ‘மகளிர் கோட்டம்’ (தமிழரசு)
முதல் சிறுகதை:        ‘கொக்கரக்கோ’ (ஆனந்த விகடன்)
முதல் குறுநாவல்:      ‘கோமளத்தின் குறும்பு’ (குடியரசு)
முதல் நாவல்:             ‘வீங்கிய உதடு’ (குடியரசு)
முதல்
மேடை நாடகம்:        சந்திரோதயம்
முதல் தேர்தல் களம்: 1936 - சென்.மாநகராட்சி தேர்தல்,  பெத்துநாயக்கன் பேட்டை. (தோல்வி)
முதல் சிறை:               1938 - இந்தி எதிர்ப்புக்காக நான்கு மாதம்
அரசியல் பிரவேசம்: 1934 - நீதிக்கட்சி
சட்டமன்ற
பிரவேசம்:                  1957 - காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து தேர்வு
அரசியல் பணி:          நீதிக்கட்சி, திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க-வில்
தி.மு.க. தொடக்கம்: 1949 செப்டம்பர் 17,
பொறுப்பு:                  பொதுச்செயலாளர்
நாடாளுமன்ற
உறுப்பினர்:               1962- (மாநிலங்கள் அவை)
தமிழக முதல்வர்:      1967, மார்ச் 6 (138 இடங்களுடன்
                                    தனிப் பெரும்பான்மை)
சிறப்பு விருது:            1968 ஏப்ரல், ‘சப்-ஃபெலோஷிப்’ (யேல் பல்கலை)
சிறப்புப் பட்டம்:        1968 செப்டம்பர், ‘இலக்கியப் பேரறிஞர்’                                                                         (டாக்டர் பட்டம் - அண்ணாமலைப் பல்கலை.)

........தொடர் நிறைந்தது.

26 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5

Posted by Gunalan Lavanyan 7:12 PM, under | 1 comment

அண்ணாவுக்கு தோல்வி
1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.

ஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர்கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம்! மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி!


முதல்வரானார் அண்ணா
அடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார்! தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.

ஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண்! உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.

நாடகமும் சினிமாவும்
அண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.

அண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.

அண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
(தொடரும்...)