Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

03 April 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 6

Posted by Gunalan Lavanyan 4:02 PM, under | 2 comments

அமெரிக்கா பயணம்
சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் - ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய் வந்துவிட்டது. அண்ணா முதல்வராக இருக்கும்போது அவருக்கு வந்த வயிற்று வலி அவரைப் பாடாகப்படுத்தியது. பரிசோதித்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. புற்றால் வந்த தீராத வயிற்று வலியால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை செய்து முடித்தார்.

‘அண்ணா... அண்ணா...'
சிகிச்சைமுடிந்ததும் மருத்துவர்கள் அண்ணாவுக்கு சில ஆலோசனைகள் சொன்னார்கள். உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். மேடை ஏறுவதை கொஞ்ச காலத்துக்கு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடாது. அதனால், சுற்றுப்பயணங்கள் வேண்டாம். இப்போது உங்களுக்குத் தேவை - ஓயாத ஓய்வு ஒன்றுதான். இப்படி அவருக்கு என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுக்கொண்ட அண்ணா, இந்தியா வந்தார். விமானநிலைத்தில் ‘ஜேஜே’வென்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். உற்சாகம் குறையாமல் எட்டுத் திசைகளிலும் பார்த்தார். எங்கு திரும்பினாலும் ‘அண்ணா... அண்ணா...’ என்று குரல்கள். யோசித்தார். மக்கள் ஓயவில்லை; தொண்டர்கள் ஓயவில்லை; தம்பிகள் ஓயவில்லை; எனக்கெதற்கு ஓய்வு..? முடிவெடுத்துவிட்டார். அண்ணாவும் ஓயவில்லை. தமிழகத்துக்காக ஓயாமல் உழைத்தார். ஆனால், உடல் சும்மா இல்லை. ஓய்வு... ஓய்வு... என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய மூன்றாவது மாதத்தில் அண்ணாவின் உடல் தன்னிச்சையாக முடிவெடுத்து, படுத்துக்கொண்டது.

ஆமாம்! அண்ணா மீண்டும் நோயுற்றார்; அவதிப்பட்டார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். மீண்டும் உணவுக் குழாயையே தாக்கியிருந்தது புற்று. அண்ணா படுத்தபடுக்கையானார்; மக்கள் துயரப்படுக்கையில் வீழ்ந்தனர். அண்ணா உடல் தேர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனை செய்தது. தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்துவந்து போனார்கள். தமிழகத்தையே பதற்றம் தொற்றிக்கொண்டது. அண்ணாவின் உயிர் இறுதி முடிவெடுவு எடுத்துவிட்டது.

1969 பிப்ரவரி 2, இரவு 12.30 மணிக்கு வானொலி கண்ணீர் வடித்தது. உயிர் காற்றில் கலந்துவிட்டது. தமிழகமே கதறியது. அண்ணா மறைந்தார்.

கின்னஸ் சாதனை
வாழ்நாள் முழுவதும் அரசியல், எழுத்து, நாடகம், பத்திரிகை, சினிமா என்று பல்துறைகளிலும் சாதனை படைத்துக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா, இறந்தபின்னும் சாதனையாளராகவே இறந்தார். சாதனையென்றால் சாதாரணச் சாதனையல்ல. உலக அளவில் போற்றப்படும் கின்னஸ் ரெக்கார்ட்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் ஒன்றைரை கோடி (15 மில்லியன்) பேர். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். இறுதிச் சடங்குகள் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துகொண்டிருந்தன. வானத்திலிருந்து பார்த்தால், கடற்கரையெங்கும் மணல் இல்லை. வெறும் தலைகளாகவே இருந்தன. மக்கள் கூட்டம் அலையலையாக மோதியது. ஒன்றரைக் கோடி மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அண்ணா சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்
பெயர்:                        அண்ணாதுரை
காலம்:                        1909 - 1969
புனைபெயர்கள்:       சௌமியன், வீரன், பரதன், சமதருமன், ஒற்றன், சம்மட்டி
பிறந்த ஊர்:               சின்ன காஞ்சிபுரம்
பெற்றோர்:                 நடராஜன் - பங்காரு அம்மாள்
வளர்ப்புத்தாய்:         (தொத்தா) இராஜாமணி
உடன்பிறந்தவர்கள்: இருவர் (இரட்டையர்)
மனைவி:                    ராணியம்மாள்
குழந்தைகள்:             இல்லை. நான்கு வளர்ப்புப் பிள்ளைகள்                                                                                                                                            (பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு).
குடும்பத்தொழில்:     நெசவு
படிப்பு:                        இன்டர் மீடியட், பி.ஏ.(ஹானர்ஸ்), எம்.ஏ
தொழில்:        ஆங்கில ஆசிரியர், நாடகம், சினிமா, எழுத்து, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, அரசியல்
பத்திரிகை பணி:       பாலபாரதி, நவயுகம், விடுதலை, குடியரசு, ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), திராவிடநாடு, காஞ்சி, மாலைமணி, நம்நாடு, ஹோம் ரூல் (ஆங்கிலம்),
முதல் கட்டுரை:         ‘மகளிர் கோட்டம்’ (தமிழரசு)
முதல் சிறுகதை:        ‘கொக்கரக்கோ’ (ஆனந்த விகடன்)
முதல் குறுநாவல்:      ‘கோமளத்தின் குறும்பு’ (குடியரசு)
முதல் நாவல்:             ‘வீங்கிய உதடு’ (குடியரசு)
முதல்
மேடை நாடகம்:        சந்திரோதயம்
முதல் தேர்தல் களம்: 1936 - சென்.மாநகராட்சி தேர்தல்,  பெத்துநாயக்கன் பேட்டை. (தோல்வி)
முதல் சிறை:               1938 - இந்தி எதிர்ப்புக்காக நான்கு மாதம்
அரசியல் பிரவேசம்: 1934 - நீதிக்கட்சி
சட்டமன்ற
பிரவேசம்:                  1957 - காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து தேர்வு
அரசியல் பணி:          நீதிக்கட்சி, திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க-வில்
தி.மு.க. தொடக்கம்: 1949 செப்டம்பர் 17,
பொறுப்பு:                  பொதுச்செயலாளர்
நாடாளுமன்ற
உறுப்பினர்:               1962- (மாநிலங்கள் அவை)
தமிழக முதல்வர்:      1967, மார்ச் 6 (138 இடங்களுடன்
                                    தனிப் பெரும்பான்மை)
சிறப்பு விருது:            1968 ஏப்ரல், ‘சப்-ஃபெலோஷிப்’ (யேல் பல்கலை)
சிறப்புப் பட்டம்:        1968 செப்டம்பர், ‘இலக்கியப் பேரறிஞர்’                                                                         (டாக்டர் பட்டம் - அண்ணாமலைப் பல்கலை.)

........தொடர் நிறைந்தது.

26 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5

Posted by Gunalan Lavanyan 7:12 PM, under | 1 comment

அண்ணாவுக்கு தோல்வி
1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.

ஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர்கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம்! மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி!


முதல்வரானார் அண்ணா
அடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார்! தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.

ஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண்! உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.

நாடகமும் சினிமாவும்
அண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.

அண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.

அண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
(தொடரும்...)

24 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4

Posted by Gunalan Lavanyan 7:02 AM, under | No comments

தி.மு.க. உதயம்
என்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார். அந்த இயக்கம் 1949 செப்டம்பர் 17 அன்று உதயமானது. பெயர்: தி.மு.க - திராவிடர் முன்னேற்றக் கழகம்.

தி.க-வில் பெரியார் மட்டும்தான் எல்லா பொறுப்புகளையும் வகித்தார். யாருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தி.மு.க-வில் எல்லோருக்கும் பொறுப்பு. எல்லோரும் கட்சியின் தூண்கள் என்று அண்ணா நினைத்தார். அதனால், அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார். பொதுச் செயலாளராக அண்ணா செயல்பட்டார். கழகத்துக்கு கொடியும் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு - சிவப்பு நிறத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கழகக் கொடி பறக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தது. காங்கிரஸின் திட்டங்களும், செயல்பாடுகளும் அண்ணாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக கழகத் தொண்டர்களை ஒன்று திரட்ட முடிவு செய்தார். தமிழகமெங்கும் தி.மு.க-வுக்கு கிளைகள் தொடங்கப்பட்டன. கூட்டங்கள், மாநாடுகள் நடந்தன. தமிழகமே தி.மு.க-வின் பக்கம் திரும்பியது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்துகிற காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்குகளை தி.மு.க. வன்மையாகக் கண்டித்தது. பேரணிகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள் வழியாக அண்ணா மக்களைச் சந்தித்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு மக்களுக்கு பாதகத்தை விளைவித்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கண்ணாக இருந்தார்: ‘காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துகளை பாழ்படுத்தக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவை’ என்று, தன் தம்பிகளுக்கு அண்ணா அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் 1952-ல் பாராளுமன்றத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் தேர்தல் வந்தது. அண்ணாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து அப்போதுதான் மூன்று ஆண்டுகள். அதனால், ஆழம் தெரியாமல் காலை விட அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், அன்றைய அரசியல் சட்டம் திராவிடர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆகவே, அத்தகைய ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்குள் தி.மு.க-வை பலப்படுத்தவேண்டும் என்று அண்ணா தீவிர முயற்சியில் இறங்கினார். அதன் முதல்கட்டமாக 1956-ல் தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் கூடியது. மாநாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பெட்டிகள் வரவேற்றன. ஒன்று, சிவப்பு. மற்றொன்று கறுப்பு. தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என்று விரும்பம் கொண்டவர்கள் தங்களுடைய வாக்குகளை சிவப்புப் பெட்டியில் போடவேண்டும். போட்டியிடத் தேவையில்லை என்று கருதுபவர்களின் வாக்கு கறுப்பு பெட்டியில் போய்ச் சேரவேண்டும். சிவப்புப் பெட்டியில் வாக்குகள் அதிகரித்தன. தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்தலில்  தி.மு.க.
இதைத்தொடர்ந்து, 1957-ல் காங்கிரஸை எதிர்த்து தி.மு.கழகம் களம் கண்டது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் 112 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் தி.மு.க.-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தல் முடிவிலேயே 15 இடங்களை தி.மு.க. பிடித்தது. காஞ்சியில் அண்ணாவுக்கே வெற்றி! மீண்டும் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்தபோதிலும், முழுமையான வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போனது, அந்த இயக்கத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சி தொடங்கிய எட்டு ஆண்டுகளில் தி.மு.க. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து அண்ணா பேசினார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் இருந்தன. எதிர்கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சுக்கு மயங்கினர். சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அண்ணா பேசினார்.

தி.மு.க. தமிழகமெங்கும் வெற்றிக்கொடி கட்டியிருந்த நேரத்தில், 1959 - சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவியும் தி.மு.க-வுக்கே! இந்த வெற்றி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்பிகள் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாவோடு சேர்ந்து அதிகமாக உழைத்தார்கள்.

20 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3

Posted by Gunalan Lavanyan 2:27 AM, under | 2 comments

திராவிடர் கழகம் உதயம்
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.

பட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.

மாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.

பெரியார் – அண்ணா அறிக்கைப் போர்
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று முடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா? அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.

இந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும்? எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.

1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.

16 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2

Posted by Gunalan Lavanyan 10:10 PM, under | No comments

தொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்:                                                                                                             http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.

‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.

பெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.

இந்தி எதிர்ப்பு
இந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.

‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை! ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.

ராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.

‘சாமி’யார்? அண்ணா
1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


அதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)

06 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1

Posted by Gunalan Lavanyan 5:34 PM, under | No comments



சென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.


கல்வி
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆரம்பப்பள்ளியில் ஆறு வயதில் அண்ணா சேர்க்கப்பட்டார். அந்தக்காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் குடுமி வைத்து, காது குத்தி, கடுக்கன் போடுவார்கள். அண்ணா குடுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். மாணவர்கள் எல்லோரும் கிராப்பு வெட்டி வரும்போது, தான் மட்டும் குடுமி வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படியாவது தொத்தாவிடம் சொல்ல வேண்டும். தானும் கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரின் ஆசை ஒருநாள் பலித்தது. தொத்தாவிடம் சொன்னார். தொத்தா தலையாட்டினார். மாணவன் அண்ணாதுரை கிராப்புத் தலையுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா சென்னை வந்தார். 1928-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி அமைந்தகரையில் இருந்தது. கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போதே 1930-ல் ராணி அம்மாவை திருமணம் செய்தார். இடைநிலை (இன்டர் மீடியட்) வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்றும், மேல் படிப்பு படிக்க அண்ணாதுரைக்கு வசதி இல்லை. கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி அண்ணாவின் நிலையை அறிந்தார். அண்ணாவின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாகக் கூறினார். அண்ணாதுரை பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வழிவகுத்துக் கொடுத்தார்.

பேச்சாளர்
1931-லிருந்து மூன்று ஆண்டுகள் அண்ணா மேற்படிப்பு படித்தார். அந்த நாட்களிலேயே சமூகச் சிந்தனைகள் அவருக்கு வரத்தொடங்கியிருந்தன. கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களோடு சமூகச் சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும் அண்ணா படித்தார். கன்னிமரா நூலகமே கதியென்றுக் கிடந்தார். கட்டுரைகள் எழுதினார். வாய்ப்பு வரும்போதெல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அன்றைய நாட்களில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த சொற்பொழிவுக் கூட்டங்களில் அண்ணா பேசினார். அவர் பேச்சு மக்களை ஈர்த்தது. மாணவர்கள் அண்ணாவின் பேச்சை பற்றி பேசத்தொடங்கினர். அண்ணா பேசுகிறார் என்றால், கூட்டம் அலைமோதியது. இப்படி கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வளர்ந்த அண்ணா 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

மொழிபெயர்ப்பாளர்
அந்தக்காலத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடைகளில் ஏறிவிட்டால் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார், தொழிலாளர் தலைவர் பாசுதேவ் போன்றோர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களின் மொழி ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புரியாது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதுபோன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு அண்ணாவுக்கு வந்தது. காலப்போக்கில் பாசுதேவ் பேசுகிறார் என்றால், அங்கு அண்ணாதுரையும் இருப்பார் என்று மக்கள் புரிந்துகொண்டனர். கடல்மடை திறந்த அண்ணாவின் தமிழைக் கேட்க மக்கள் அலையலையாகக் கூடினர். நாளடைவில் நீதிக் கட்சியோடு அண்ணாவுக்கு நெருக்கம் அதிகமானது.

அந்தநேரத்தில் சென்னை நகரசபைக்கு தேர்தல் வந்தது. நீதிக் கட்சி அண்ணாவை வேட்பாளராக அறிவித்தது. பெத்து நாயக்கன் பேட்டையில் அண்ணா போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டார். பலத்த போட்டி. காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி, திரு.வி.க., சீனிவாசராவ் என்று காங்கிரஸின் பிரசார பீரங்கிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து அண்ணா மக்களிடம் பிரசாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘சேரிகளில் மின்சார விளக்குகள் இல்லை. ஆனால், நகரசபைக் கோயில்களில் இரண்டு அலங்கார விளக்குகள் போடுவது ஏன்?’ என்று அண்ணா கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக அண்ணா பேசிய இந்தப் பேச்சை காங்கிரஸ்காரர்கள், ‘அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால், கோயில்களின் முன் இருக்கும் அலங்கார விளக்குகளை எடுத்துவிடுவதாக பேசியிருக்கிறார். அதனால், அவருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று மக்களிடம் திரித்துப் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர். காங்கிரஸ்காரர்களின் இத்தகைய சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், தேர்தலில் அண்ணா தோல்வி கண்டார். (தொடரும்...)

18 February 2010

வாரிகொடுத்த வள்ளல்!

Posted by Gunalan Lavanyan 11:09 PM, under | No comments

டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அந்த இளைஞனுக்கு பதினாறு வயது. அப்போது, அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் அதிகம். நாடகப் பாடல்களைப் பாடும்போது தாளம் தப்பாமல் பாடுவது, கடினமான வரிகளையும் பிழையில்லாமல் பாடுவதெல்லாம் அவனுக்கு ‘வாய் வந்த கலை’. மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை அலட்டிக்கொள்ளாமல் வாசிப்பது ‘கை வந்த கலை’.

டி.கே.எஸ். நாடகக் குழு காரைக்குடியில் நாடகங்களை நடத்திவந்த சமயத்தில், குழுவிலிருந்த பிரதான நடிகரான எம்.ஆர்.சாமிநாதன் ஒருநாள் காணாமல் போய்விட்டார். அப்போது நடந்துவந்த ‘மனோகரா’ என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான வசந்தன் வேடத்தில் அதுவரை சாமிநாதன்தான் நடித்து வந்தார். திடீரென்று அவர் காணாமல்போகவே என்ன செய்வதென்று தெரியாமல் டி.கே.சங்கரன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அருகில் இருந்த டி.கே.சண்முகம், “சாமிநாதனுக்கு பதிலாக வசந்தன் வேடத்தில் நடிக்க நம்மிடம் ஒரு இளைஞன் இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று சொல்ல சங்கரன் ஆறுதல் அடைந்தார்.

அதுவரை சிறிய வேடங்களிலேயே நடித்து வந்த அந்த இளைஞனுக்கு பிரதான நகைச்சுவை வேடத்தில் தான் நடிக்கப் போவதை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக தன் திறமையைக் காட்டினான். அதனால், இனி வசந்தன் வேடத்தில் அந்த இளைஞனையே நடிக்கவைப்பது என்று டி.கே.எஸ்.குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நகைச்சுவை சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் வெற்றிக்கொடி நாட்டிய… தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ‘கலைவாணர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். 1926-க்குப் பிறகு டி.கே.எஸ். நாடகக் கம்பெனி ஏற்றத்தைக் கண்டது. புராண நாடகங்களுக்குப் பதிலாக சமூக நாடகங்களை நடத்தத் தொடங்கியது. எம்.கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் வந்து சேர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம். அப்படி ‘மேனகா’ என்ற புரட்சிகரமான நாடகத்தை கம்பெனி நடத்தியது. அதில் சாமா அய்யர் வேடத்தில் நடித்து கிருஷ்ணன் தூள் பரத்தினார். மக்களின் வரவேற்பு அதிகமானது. கிருஷ்ணனின் புகழ் பரவத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் டி.கே.எஸ். கம்பெனியிலிருந்து கிருஷ்ணன் விலக நேர, செய்தி அறிந்ததும் ‘கோல்டன் கம்பெனி’யார் கிருஷ்ணனை தன் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டனர். ஒருமுறை ஆலப்புழையில் கோல்டன் கம்பெனி முகாமிட்டு இருந்தது. அப்போது, ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற நாடகம் நடந்து வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணனும் என்.எஸ்.நாராயண பிள்ளையும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தனர்.

ஒருநாள் நாடகத்தில் சூர்ப்பனகை பங்கத்துக்குப் பிறகு கர-தூஷண வதம் செய்கிற காட்சி. கரனாக வேடம் போட்டிருந்த நாராயணப் பிள்ளை ‘வதம்’ செய்யப்படுவதற்கு முன் வேடிக்கையான வசனங்களைப் பேசி மக்களின் ஆரவாரத்தை தூண்டுவது வழக்கம். அன்று அப்படி நாராயணப் பிள்ளை வசனம் பேசத் தொடங்கினார்…
“ஏ! தங்காய்… சூர்ப்பனங்காய்!” என்று காயில் முடிகிற வசனங்களாகப் பேசி கரவொலி பெற்றார். அவருக்குப் பிறகு தூஷணன் வேடம். தூஷணனாக கலைவாணர் வந்தார். நாராயணப் பிள்ளையைவிட அதிகமாக மக்களின் கைத்தட்டலைப் பெறுவது என முடிவு செய்து, பேசத் தொடங்கினார்…
“நீலமேக சியாமள ரூபா! அணா! பைசா!” என்று பேசினார். கலைவாணர் இப்படிப் பேசியதும் மக்கள் வெகுவாக ஆரவாரம் செய்தனர். நாராயணனுக்கு வந்ததைவிட கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தது. இப்படித் தொடங்கியதுதான் கலைவாணரின் நகைச்சுவை சாம்ராஜ்யம்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணன், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் ஜெமினி பிக்சர்ஸ் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வாசன்தான் கிருஷ்ணனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். ஆனால், டி.கே.எஸ். குழுவால் நாடகமாக நடிக்கப்பட்ட ‘மேனகா’ என்ற கதை படமாக எடுக்கப்பட்டபோது அதில் கிருஷ்ணன் நடித்தார். எதிர்பாராதவிதமாக இந்தப் படம் முதலில் வெளியாகிவிட்டது. ஆகவே, மக்களுக்கு கிருஷ்ணன் திரையில் அறிமுகமான முதல் படம் ‘மேனகா’.

ஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதைப் பற்றியே யோசிப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மேலும் எவ்வாறு மெருகூட்டுவது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பது என்று வழக்கமாகக் கொண்டிருந்தார் கலைவாணர். அப்படி ஒருநாள் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாணிக்கவாசகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தன்னுடைய வாய்ஜாலத்தை கிருஷ்ணன் காதுபடவே காட்டியிருக்கிறார். ஆனால், சுந்தரம் அமைத்திருந்த காட்சியமைப்பில் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. எனவே, “காட்சியை மாற்றியமைக்க வேண்டும். அதை என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். காட்சி எடுத்து முடித்தபிறகு எப்படி வந்திருக்கிறது என்று பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லையென்றால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன்” என்று யாரும் நேருக்கு நேர் நின்று பேசத் தயங்கும் டி.ஆர்.சுந்தரத்தைப் பார்த்து கிருஷ்ணன் உரத்துச் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. ஆனால், சுந்தரம் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனின் நிபந்தனைக்கு தலை அசைத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. கிருஷ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த அந்தக் காட்சி எடுத்தாகிவிட்டது. காட்சியைத் திரையிட்டு பார்த்தபோது சுந்தரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியே கலைவாணரை ஆரத்தழுவிக் கொண்டார். அதன்பிறகு கலைவாணர் மதுரம் நடிக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் எந்தப் படமானாலும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் நுழைவதே இல்லை.

அதேபோல, படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி முன்பே போய்விடுவதை கிருஷ்ணன் கடைப்பிடித்து வந்தார்.

ஜெமினி பிக்சர்ஸ் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால், குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை?” என்று கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார். புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணருக்கு எட்டியது. மேக்கப் அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்த தாழ்வாரத்தை நோக்கி மெல்ல கணைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கைகுவித்துச் சொன்னார். “புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணரின் பேரில் அவர் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

புளிமூட்டை ராமசாமிக்கு ‘புளிமூட்டை’ என்று பட்டப்பெயர் வந்ததும் கலைவாணரின் திருவாயால்தான். கலைவாணர் தனது ‘அசோகா ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (எம்.ஜி.ஆர். நடித்த படம் அல்ல) என்ற படத்தில் ராமசாமிக்கு ஒரு திருடன் வேடம். படப்பிடிப்பின்போது ராமசாமி மேக்-அப்போடு நடித்துக்கொண்டிருந்தார். கதையின்படி கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லை. உடனே அருகில் இருந்தவரிடம் “எங்கே அந்தப் புளிமூட்டை” என்று வேடிக்கையாகக் கேட்டார். அன்று முதல் ராமசாமியின் பெயருக்கு முன்னால் புளிமூட்டை சேர்ந்துகொண்டது. இதேபோல் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளைக்கும் ‘யதார்த்தம்’ என்ற பட்டப்பெயர் மற்றொரு படப்பிடிப்பில் கலைவாணரால் வழங்கப்பட்டதுதான்.

மாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில் கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா! ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே? சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். அப்படித் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை.

தான் ஒரு பெரும் நடிகன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிட புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள் திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப் பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். அதோடு வணக்கத்தையும் வைத்தார்.

“எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக உபசரித்தார். “நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே சொன்னார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

கலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர் அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக் கைராசிக்காரருக்கு உங்க வாக்குகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க? நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க!” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ஜெயிக்க வைத்தார்.

கலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’ என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘அன்புக்குரலாக’ ஒலிக்கும், இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் சரித்திரத்தில் இல்லை.

அப்படிப்பட்ட கலைஞன் துரதிர்ஷ்டவசமாக சிறை செல்ல நேரிட்டது. ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1944-ம் ஆண்டு கலைவாணர் கைதானார். அவரோடு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிரிவு கவுன்சில் அப்பீலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1946 ஏப்ரல் 25-ம் தேதி கலைவாணரும் பாகவதரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையானபிறகு ஓய்வின்றி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பழைய உற்சாகத்தோடு நடித்தார். ஓய்வின்றி உழைத்தவரை பலர் ஓய்வெடுக்க வேண்டினர். சிலர் வற்புறுத்தி குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்க வைத்தனர். குற்றாலத்தில் கலைவாணர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. அப்போதும் உற்சாகத்தோடு வீங்கியிருந்த வயிற்றைப் பார்த்து நகைச்சுவை செய்தார். பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களும் திரைப்படத்துறையின் பெரும் நடிகர்களும் அவரை வந்து பார்த்தனர். வந்தவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசினார். “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவர்களிடமெல்லாம் “அவ்வளவு சீக்கிரம் எமன் என்னைக் கொண்டுபோய்விட மாட்டான். நான் இன்னும் கலை உலகுக்குத் தொண்டு செய்ய வேண்டியிருக்கு” என்று சொன்னார்.

கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தனி ஆள் நியமித்து, தனக்கு வந்து குவிந்த பழங்களை சாறு பிழிந்து மருத்துவமனையில் இருந்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கச் செய்தாராம்.

திடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து. செய்தியைக் கேட்டதும் சினிமா கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காண சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட கலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது. யாரோ புரளி செய்திருக்கிறார்கள் என்று!

எதிர்பார்த்து வந்தவர்களை இல்லை என்று அனுப்பியதில் மனம் உடைந்தாரோ என்னவோ, அவர்களை ஏமாற்றக்கூடாது என்றுகூட நினைத்து இருக்கலாம். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழகம் நினைத்து முன்பு ஏமாந்த அந்தத் துயரம் நடந்தேவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.

பயோ-டேட்டா…

பெயர்: என்.எஸ்.கிருஷ்ணன்
காலம்: 29.11.1908 – 29.08.1957
பிறந்த ஊர்: ஒழுகினசேரி – கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோர்: சுடலையாண்டி பிள்ளை – இசக்கியம்மாள்
உடன் பிறந்தோர்: 6 சகோதரிகள் (வீட்டில் இவர் மூன்றாவது பிள்ளை)
மனைவிகள்: நாகம்மை (முதல் மனைவி)
                        டி.ஏ.மதுரம் (இரண்டாவது மனைவி)
                        வேம்பு (மூன்றாவது மனைவி, மதுரத்தின் தங்கை)
குழந்தைகள்: 8 பேர்
படிப்பு: 4-ம் வகுப்பு
தொழில்: நடிப்பு, இயக்கம், தயாரிப்பு (நாடகம் மற்றும் சினிமா)
சொந்த நிறுவனங்கள்: என்.எஸ்.கே. நாடகக் குழு மற்றும் அசோகா ஃபிலிம்ஸ்.
சந்தோஷம்: உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது.
வருத்தம்: தன் இறுதி நாட்களில், பண வசதி, உடல் நலம் இல்லாமல் இருந்தபோது உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனது.
அரசியல்: மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிகளை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபாடு.
அரசியல் நண்பர்கள்: பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
                                    பா. ஜீவானந்தம் (இ.கம்யூ)
இயக்கிய படங்கள்: மங்களம் (1951), பீலி கூத்ரு (1951), பணம் (1952)
நடித்துப் புகழ்பெற்ற நாடகம்: மேனகா
புகழ்பெற்ற வில்லுப்பாட்டு கதை: கிந்தனார்.

06 February 2010

காதல் தூது போன எம்.ஆர்.ராதா

Posted by Gunalan Lavanyan 12:08 AM, under | No comments

‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’
- எம்.ஆர்.ராதா

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.
ஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.

04 February 2010

மார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments



காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள். 

ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமே மார்க்ஸிடமிருந்து ஜென்னி ரசித்த ஆணின் அழகு! மார்க்ஸோ, 'உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அதுகூட தோற்றுப்போகும் அவளிடம்' என்று ஜென்னியை ரசித்தார்.

03 February 2010

என்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்

Posted by Gunalan Lavanyan 12:32 AM, under | No comments

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். பம்பாய் மெயில் புறப்படுவதற்குச் சில விநாடிகளே இருந்தன. புனாவில் நடைபெறவிருக்கும் ‘வசந்தசேனா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஒரு கோஷ்டி அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில் அந்த கோஷ்டியை அழைத்துச்செல்லும் இரு மானேஜர்கள் இடையே தகராறு. அது முடிவதற்குள் வண்டி புறப்பட்டுவிட் டது!

வண்டி சில மைல்கள் கடந்த பிறகுதான் தங்களை அழைத்துச் செல்லும் மானேஜர்கள் வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிலிருந்த சினிமா நடிக கோஷ்டிக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  திருதிருவென்று விழித்தார்கள். அவர்களுக்கு நடுவே அப்படி விழிக்காத ஒரு நடிகரும் இருந்தார்.

அவர் மற்றவர்களைப் போல ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் தவிக்காமல் மற்றவர்களுக்குத் தைரியம் சொன்னார்:  ‘‘இப்ப என்ன ஆச்சு? ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம்?’’ என்றார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே பெட்டியில் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கைப் பேச்சையும் சிறு புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள்தான். அந்த மனிதர் எல்லாருக்கும் தைரியம் சொன்னாலும், அவளுக்கு உள்ளம் திக்கென்றது.தன் பதற்றத்தை அவ்வளவாக அந்தப் பெண்மணி  வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அவர் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவர்களிடம் தேவையான பணம் கிடைக்கவில்லை. அதே கேள்வியை அந்தப் பெண்மணியிடமும் கேட்டார், ‘‘புனாவுக்குப் போனதும் சினிமாக்  கம்பெனிக்காரரிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு!’’ என்று மீண்டும் அவர் கேட்டார்.

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொண்ணூறு ரூபாயை எடுத்துக் அவரிடம் கொடுத்தாள். ரயிலில் சாப்பாட்டுச் செலவுக்கு அந்தப் பணம் மிக உதவியாக இருந்தது. புனா வந்ததும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களா இருந்த முகவரியை விசாரித்துக்கொண்டு நடிக கோஷ்டி அங்கு போய்ச் சேர்ந்தது. அங்கு போனதும் மீண்டும் உணவுப் பிரச்னை. சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள் இருந்தன. உணவுப் பண்டங்கள் இல்லை. அவற்றை வாங்கப் பணம் இல்லை. கம்பெனி மானேஜர்கள் எப்பொழுது வந்து சேருவர்களோ? அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா? தவித்தார்கள். அந்த மனிதர் மட்டும் தவிக்கவில்லை!

மறுபடியும் அதே பெண்மணியிடம் சென்றார். குழைந்தார். ‘‘இங்கு வந்தது முதல் இன்னும் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. ஏன், நீகூடத்தான் சாப்பிடாமல் இருந்துவருகிறாய்! உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய்.  அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று பக்குவமாகப் பேசினார்.

அதுவரை பேசாதிருந்த பெண்மணி... ‘‘போனால் போகட்டுமென்று கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்தேன்.  இப்போது நகைகளையும் கேட்கத் துணிந்துவிட்டீர்களே! அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ?’’ என்று அவள் அவரைக் கேட்கவில்லை; சீறினாள்.

அவர் அமைதியோடு பேசத் தொடங்கினார்: ‘‘உன்னிடந்தான் எதையும் கேட்கத் தோன்றுகிறது!’’ அப்படி அவர் சொன்னதும், அந்தப் பெண்மணியின் உள்ளம் குறிர்ந்துவிட்டது. உடனே தன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்தாள். அவர் ஒரு தடவை முகமலர்ச்சியோடு நன்றி கூறிவிட்டு நகைகளோடு போனார். சில நிமிடங்களில் நகைகள் அடமானம் வைத்து உணவுப் பொருள்களை வாங்கி வந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கம்பெனி மானேஜர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர், ‘‘நல்ல வேளை, இன்றாவது வந்து சேர்ந்தீர்களே! இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும்!’’ என்றார். மானேஜர்கள் ஒருவிதமான அசட்டுப் பார்வையோடு பேசாமலிருந்தார்கள். ஏற்கெனவே தாம் பொறுப்பேற்றபடி அவர்களிடமிருந்து பணம் வாங்கி நகைகளை மீட்டு, ரொக்கம் தொண்ணூறு ரூபாயையும் சேர்த்து, அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டிக்கொண்டே அவற்றை பெற்றுக்கொண்ட பெண்மணி யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் டி.ஏ.மதுரம்தான். அந்த மனிதர் சகலகலா வல்லவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனேதான்!
அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு நடுவில் கிருஷ்ணனும் மதுரமும் பல தடவை சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்று சொல்லும்படி அந்தச் சந்திப்புகள் இருந்தன. கிருஷ்ணனுக்கு மதுரத்தின் கலை உள்ளம் மிகப் பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனத்திலே வாங்கிக்கொள்ளும் ஆற்றலும், வசனங்களை வெடுக்கென்று விழு ங்காமல் பேசும் திறமையும் மதுரத்துக்கு இருந்து வருவதைக் கிருஷ்ணன் கண்டார்.
கிருஷ்ணனிடம் குவிந்து கிடக்கும் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவற்றில் கலந்து காணப்பெறும் கருத்துள்ள நகைச்சுவையையும் கண்டுவிட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தார் மதுரம்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை டைரக்டர் ராஜா சாண்டோ புரிந்துகொண்டார். ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார். அவரது அழைப்பில் ஒருவித அதட்டல் மேலோங்கி நின்றது. அதற்காக கிருஷ்ணன் அஞ்சி விடவில்லை. ‘‘என்னை அழைத்தீர்களாமே?’’ என்று கேட்டுக்கொண்டே டைரக்டருக்கு அருகில் கேள்விக் குறிபோல் போய் நின்றார்.

டைரக்டர் ராஜா சாண்டோ வழக்கம்போல், ‘‘டேய் கிருஷ்ணா’’ என்று அழைத்துவிட்டுச் சொன்னார்... ‘‘எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்...? தெரியும்! தெரியும்! சில நாட்களாகக் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறேன்.  கடைசிவரை கைவிடமாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி சொல்லு. உனக்கு இந்த நிமிடம் முதல் மதுரம் சொந்தம்!’’
கிருஷ்ணன் அந்த உறுதிமொழியை அளித்தார். அன்று அதே டைரக்டரின் முன்னிலையில் அவரது ஆசியோடு கிருஷ்ணனும் மதரமும் காதல் மணம் செய்துகொண்டனர். பொதுவாகப் படப்பிடிப்புகளில் காதலன் காதலிக்குத் திருமணம் நடப்பதுண்டு. அது சினிமா கல்யாணம். ஆனால், புனாவில் படத்துக்காக நடிக்கவந்த இடத்தில் கிருஷ்ணன் - மதுரத்துக்கு உண்மையாகவே திருமணம் நடந்துவிட்டது. அதை மனப்பூர்வமாகச் செய்துவைத்த டைரக்டர் ராஜாசாண்டோ திருமணம் முடிவடைந்ததும் ‘கட்’ என்று டைரக்டர் பாஷையில் சொல்லவில்லை!

15 January 2010

தமிழ் சினிமா இழந்த பொக்கிஷம்! - எம்.ஆர்.ராதா வாழ்க்கைச் சுருக்கம்

Posted by Gunalan Lavanyan 10:29 PM, under | 2 comments

1907 ஏப்ரல் 14-ம் நாள், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது பிள்ளை பிறந்தது. ராஜகோபால் தன் தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, தனக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் பிள்ளைக்கு தந்தையின் பெயரான ராதாகிருஷ்ணன் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணன் ரொம்பவும் சூட்டிகையான பையன். படிப்பைக்காட்டிலும் விளையாட்டின் மீதே அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
அதற்கு ஒரு காரணம் உண்டு. குழந்தை ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவனை பள்ளியில் சேர்த்தனர். ஆனால், பள்ளிக்குச் சென்றால் வாத்தியார் பிரம்பால் அடிக்கிறார்... என்ன செய்வது என்று யோசித்த ராதா... இனி, பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டு தனக்குப்பிடித்த பில் தோட்டத்தைச் சுற்றித்திரிவது’ என்று முடிவு செய்கிறான். ஒரு சைக்கிளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக சுற்றுகிறான். தோட்டத்தில் குஸ்தி கற்றுக்கொள்கிறான்.

ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான் ராதா. ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவனை, பெரியவர் ஒருவர் அழைத்து, தனது பெட்டி படுக்கையை ரயிலில் கொண்டுவந்து வைக்கும்படி கேட்கிறார். பெரியவர் ஏதோ முடியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்த ராதா அவற்றைக் கொண்டுபோய் ரயில் பெட்டியில் வைத்துவிட்டு திரும்பும்போது, இந்தாப்பா...’ என்று பெரியவர் கையில் காலணாவைத் திணிக்கிறார்.
கையில் நயா பைசா இல்லாதிருந்த ராதாவுக்கு காலணாவைப் பார்த்ததும் முகத்தில் ரொம்பவும் பொலிவு... ராதா அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; பின்நாட்களில் தாம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கப்போகிறோம் என்று.
சிறு பிராயத்தில் இருந்த ராதாவுக்கு நாடக உலகம் அறிமுகமாகிறது. ஜெகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் சேர்கிறான் ராதா.
1924-ல் ஐயரின் நாடகக் குழு கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்துகிறது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர்.
நாடகத்தில் சிறுவன் ராதா, பாயசம்’ என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்கிறான். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ‘‘பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
சிறுவன் ராதா வந்ததும் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘பாயசம் மிகவும் நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார். அப்போது ராதாவுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்.
ஒருமுறை ஐயரின் கம்பெனி இலங்கைக்குச் சென்றிருந்தது. அங்கு நாடகத்துக்கான நோட்டீஸ் அச்சடிக்க வேண்டியிருந்ததால் ஓர் அச்சகத்தில் நோட்டீஸுக்கு ஆர்டர் கொடுத்தனர்.
ஆனால், நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்ஸில் திடீரென்று மிஷின் பழுதாகிவிட்டது. அச்சக உரிமையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். தகவலை அறிந்ததும் கம்பெனி வாத்தியார் பொன்னுசாமிபிள்ளை ராதாவை அழைத்தார். விஷயத்தைச் சொன்னதும் ராதா அச்சகத்துக்கு விரைந்தார். பழுது சரி செய்யப்பட்டது. அச்சக உரிமையாளர் திகைத்துப்போய் நூறு ரூபாய் தாளை எடுத்து ராதாவிடம் நீட்டினார். அதுதான் ராதா பார்த்த முதல் நூறு ரூபாய். ராதா மெக்கானிக்காவும், எலக்ட்ரீஷியனாவும் டிரைவராகவும்கூட பணியாற்றியிருக்கிறார்.
1932-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பால்ய கால நட்பின் காரணமாக ராதா அந்தக் குழுவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
1937-ம் ஆண்டு ராஜசேகரன்’ என்ற சமூகப் படத்தில் வில்லனாக நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அவரது முதல் படம். அதே ஆண்டு சேலம் மார்டன் தியேட்டர்ஸ்’ கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட சந்தனத் தேவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை.
ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன மார்டன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ராதாவுக்காக ஆங்கிலப் படத்தின் கதையை மையப்படுத்தி சத்திய வாணி’ என்ற படத்தை எடுத்தார். அதில் ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அப்படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. பார்த்தார் ராதா, தனக்கு திரைப்படம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார்.
மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதா, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ராதாவுக்கு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீது நிரம்பவே நம்பிக்கையும் பற்றும் உண்டு. அதன்காரணமாக 1943-ம் ஆண்டு திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.
நாடக அரங்கில் வண்ணத் திரைச் சீலைகளையும் ஓவியத் திரைகளையும் தொங்கவிட்டால்தான் பார்வையாளர்களை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இருந்த காலகட்டத்தில், தனது நாடகக் கம்பெனி சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் கருப்பு, வெள்ளை திரையை தொங்கவிட்டு அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் எம்.ஆர்.ராதா.
அன்றைக்கு, பொதுவுடமை இயக்கம் என்றாலே தெரித்து ஓடியவர்கள் மத்தியில் ராதா, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தை தாங்கிய திரையைத் தொங்கவிட்டு நாடகங்களை நடத்தி வந்தார். அப்போது பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்துவந்த காலகட்டம். பெரியார் என்ன செய்கிறாரோ அதையே தானும் பின்பற்றுவார் ராதா.
அதேபோல ராதாவுக்கும் பொதுவுடமைத் தலைவர் ஜீவாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
அது ஜீவா தலைமறைவாக இருந்த சமயம். ஜீவாவுக்கு ராதாதான் அடைக்கலம் கொடுத்துவந்தார். அப்போது, ஜீவா ராதாவிடம் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்வாராம். அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் தன்னிடம் கொடுக்கும்படி சொல்வாராம். ராதாவும் எந்தத் தயக்கமும் இல்லாது அதைச் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு நாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கிய பின், ராதா ஜீவாவிடம் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்றாராம்.
ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்றாராம்.
அப்போது ராதா, தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்தாராம்.
‘கலை கலைக்காக; கலை மக்களுக்காக’ என்று இரண்டு கோஷங்கள் எழுந்தபோது, கலை மக்களுக்காகத்தான் என்று தன் நாடகங்களின் வழி உரக்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா.
அதேபோல், ‘‘நாடகம், சினிமா போன்றவை சிறந்த பிரச்சார சாதனங்கள். எனவே, என் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அவற்றின் வாயிலாக வெளியிட்டு வருகிறேன்’’ என்று சொன்னார் ராதா.
அவர், தரகு கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார். காசுக்காக கலையை அடகு வைப்பதை ஒருபோதும் அவர் செய்தது கிடையாது.
ராதாவின் நாடகங்களுக்கு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சொல்வதை அவர் அதிகரித்தார். இதனால், நாடகம் நடக்கவிடாமல் சில விஷமிகள் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் ராதா மேடைக்கு வருவார்.
‘‘யார் கலாட்டா செய்றது..? நாடகம் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு போய்விடுங்கள். அனாவசியமாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள்.
உங்கள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் உயிருள்ள வரை நான் என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்’’ என்று முழங்குவார்.
ராதா கொள்கையை விற்றவரல்லர் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம். ராதா நடத்திய பன்னிரெண்டு நாடகங்களிலேயே ‘ரத்தக் கண்ணீர்’தான் உலக நாடக வரலாற்றில் 60 ஆண்டுகாலமாக (இன்றும் ராதவின் மகன் ராதாரவி, பேரன் வாசு விக்ரம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது) நடந்துவருகிறது. அது நாடகங்களிலேயே உச்சத்தின் உச்சம். ராதாவாலேயே ‘ரத்தக் கண்ணீர்’ 3021 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. அதேபோல், ‘தூக்குமேடை’ 800 நாட்களும், ‘லட்சுமி காந்தன்’ 760 நாட்களும், ‘போர்வாள்’ 410 நாட்களும், ‘இழந்த காதல்’ 190 நாட்களும், ‘ராமாயணம்’ 170 நாட்களும், ‘தசாவதாரம்’ 110 நாட்களும் அரங்கேறி சாதனை படைத்தன.
‘தூக்கு மேடை’ நாடகம் மு.கருணாநிதியால் எழுதப்பட்டது. ‘போர்வாள்’ சிந்தனைச் சிற்பி சிற்றரசுவால் உருவாக்கப்பட்ட நாடகமாகும்.
ராதாவின் நாடகங்களில் கலகக்குரல் ஓங்கி ஒலித்ததால் ஏறக்குறைய அவரது பல நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கெல்லாம் ராதா அஞ்சியதே இல்லை. ‘ரத்தக்கண்ணீர்’ தடை செய்யப்பட்டபோது ‘மேல் நாட்டுப் படிப்பு’ என்ற பெயரில் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். ‘தூக்கு மேடை’ தடை செய்யப்பட்டபோது, ‘பேப்பர் நியூஸ்’, ‘காதல் பலி’, ‘நல்ல முடிவு’ என பல பெயர்களைக் கொண்டு அந்த நாடகம் அரங்கேறியது. ‘போர்வாள்’ நாடகம் ‘சர்வாதிகாரி’, ‘நண்பன்’, ‘சுந்தர லீலா’, ‘மகாத்மா தொண்டன்’ போன்ற பெயர்களில் அரங்கேற்றப்பட்டது.
எதிர்ப்புகள்தான் ராதாவை உச்சத்தை நோக்கி நகர வைத்தன. திராவிடர் கழக மாநாடு என்றால் கட்சியின் கொடியேந்தி வெள்ளைக் குதிரையில் மாநாட்டு திடல் வரைக்கும் ராதா கம்பீரமாக பவனி வருவாராம். ஒரு முறை அப்படி அவர் குதிரை மீது வந்தபோது, விஷமிகள் அவரை தாக்கினார்கள். அடிமொத்தம் வாங்கிக்கொண்ட ராதா அந்த விஷமிகளைப் பார்த்து, ‘‘போதுமா, திருப்தியா..? இப்போ போரியா..?’’ என்று கேட்டாராம்.
சீர்திருத்தத்தைப் பற்றி பேசவே பயந்த அன்றைய நிலையில் ‘விதவையின் கண்ணீர்’ என்ற சீர்திருத்த நாடகத்தை நடத்தினார் ராதா. பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது அந்த நாடகம்.
‘‘அது சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதமானது. அதை நடத்தினால் சமூகத்தின் அமைதி கெட்டுவிடும்’’ என்று பிற்போக்குவாதிகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது அந்த மன்றத்தின் நீதிபதி கணேசய்யர். ஆசாரமாக வாழ்ந்து வந்த நீதிபதி, நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
‘இதோடு ராதாவின் ஆட்டம் அவ்வளவுதான்’ என்று பேச்சுகள் எழுந்தன. நீதிபதி நாடகத்தை தடை செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். நாடகத்தை முழுவதுமாக பார்த்த நீதிபதி மேடை நோக்கி விரைந்தார்... ஒரு நிமிடம் ராதாவைப் பார்த்தார்; கை நீட்டினார்... ராதாவும் கை கொடுத்தார்... குலுக்கினார் நீதிபதி. அவருக்கு நாடகம் பிடித்துவிட்டது.
ராதாவைப் பார்த்துச் சொன்னார், ‘‘சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும். இந்த மாதிரி நாடகம் இங்கே மட்டும் நடந்தால் போதாது; இந்தியா முழுக்க நடக்கணும். நீங்களும் உங்கள் நாடகமும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார். வழக்கு தொடுத்தவர்கள் பேச முடியாமல் போயினர். ராதா எதிர் கருத்து உடையவர்களையும் தனது ஆழமான கருத்தால் கவர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.
பெரியார், ஜீவாவைப் போல் ராதாவுக்கு காமராஜர் மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த அன்பு உண்டு. கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகம் பெரிய வெற்றிபெற்ற போது, ராதாவின் பெயர் பெரும் புகழ் அடைந்தது. கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராதா, அந்தப் புகழுக்குக் காரணமான கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அதுவே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும்போது, ‘‘நாட்டில் எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்கிறார்கள். அவர்கள் மனம் திருப்திப்படும்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்டவர் அல்ல. தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின்னால் வரவேண்டும். தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதே இல்லை’’ என்று பேசினார்.
தனது 85வது பிறந்தநாள் விழாவில் பேசிய அதே பெரியார், ‘‘அறிவு அற்றவர்கள் புராணக்கதைகளில் நடித்துக்கொண்டு அசிங்கத்தையே சொல்லி வருகிறார்கள். சிரிப்பின் மூலம் சிந்திக்கும்படி சட்டென்று சொல்லிவிடுகிறார் ராதா. மற்ற மடையர்கள் சொல்லவில்லை. ராதாதான் தைரியமாகச் சொல்கிறார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வண்ணான் துறையிலேயே படுத்துக்கொண்டு அங்கேயே வண்ணான் துணிகளை வாங்கி நாடகம் நடத்தினார். ரயில் கட்டணம்கூட இல்லாமல் திண்டாடினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு கொள்கையை மறக்காமல் எடுத்துக்கூறி திருப்பத்தை உண்டாக்கினார்.
சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்துவிடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே, மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க. ராதாதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்’’ என்று சமூக சிந்தனையற்றவர்களைப் பார்த்து கடிந்துகொண்டார்.
ராதா, பெரியார் பேச்சை தட்டாதவர். அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார் என்றால் அதை செய்வார். காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கிறார் என்று தெரிந்தால் அவரும் காங்கிரஸை ஆதரிப்பார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா 1952-ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் ‘போர்வாள்’ என்ற நாடகத்தை நடத்தினார். அப்போதுதான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தைச் சூட்டினார்.
சினிமாவில் நடித்து புகழடைந்துவந்த காலகட்டத்தில்கூட நடிகவேள் நாடகத்தை மறந்துவிடவில்லை. அவருக்கு சினிமா உடல் என்றால், நாடகம்தான் உயிர். உயிர் இன்றி உடல் அசையாது என்பதை உணர்ந்திருந்தார் ராதா.
சிறந்த நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முறை ராதா சொன்ன பதில், ‘‘நேராக சினிமாவில் சேர்ந்த எவனும் நடிகனாக மாட்டான். சிறந்த நடிகன் சினிமாவிலிருந்து வெளிவர முடியாது. ஒரு ரீடேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நாடகத்தில் நடித்து எவன் மக்களை தன்வசப்படுத்துகிறானோ அவனே சிறந்த நடிகன்.
அதல்லாமல் ஒருவனுக்கு வசனத்தைக் கொடுத்து அதே காட்சியை இரண்டாயிரம் மூவாயிரம் அடிகள் வரை பல கோணங்களில் எடுத்து எந்தக் கோணத்தில் எடுத்தக் காட்சி நான்றாக இருக்கிறது என்று பார்த்து சேர்க்கிறார்களோ அவனெல்லாம் சிறந்த நடிகனாக மாட்டான்’’ என்று நடிகனுக்கான வரையறையைச் தெளிவாகச் சொன்னார். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல், அதை தானே செயல்படுத்தவும் செய்தார். அதுதான் ராதா.
ராதாவின் நடிப்பு ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர்பாங்ஸுக்கு இணையாக இருந்ததால் அவர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர்களில் ‘இண்டியன் டக்ளஸ்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
‘ரத்தக்கண்ணீர்’ படமாக்கப்பட்டபோது இதற்குமுன் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒருலட்ச ரூபாயைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. பண விஷயத்தில் அவர் கரார் பேர்வழி. சினிமாவை அவர், ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார். அதனால்தான் எந்தப் படமானாலும், தனது கேரக்டர் என்ன என்றுகூட கேட்காமல் சம்பளம் என்ன என்றுதான் கேட்பார். ஆனால், நாடக உலகில் அவர் அப்படியில்லை.
1978-ல் ‘தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்த கலைஞர், ராதாவின் நடிப்பைப் பற்றி, ‘‘நடிப்பை, தலைமுடியின் ஆட்டத்திலேயே காட்டிய நடிகர் ஒருவர் இந்த நாட்டில் உண்டென்றால் அது ராதாதான்’’ என்று பேசினார்.
அத்தகைய நடிப்பின் உச்சத்தை தொட்ட ராதாவை இந்திய அரசு பெரிய அளவில் கௌரவிக்கவில்லை. தமிழக அரசு ‘கலைசிகாமணி’ என்ற விருதை மட்டும் வழங்கியது. அது இப்போது ‘கலைமாமணி’ விருதாக பெயர் மாற்றப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனே தான் ராதாவைப் பார்த்துதான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கூறியிருக்கிறார்.
நடிப்பின் இமாலயமாக திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரோடு 40 ஆண்டுகாலம் இருந்த ராதா, அவரது 101-வது பிறந்தநாளான 1979 செப்டம்பர் 17 அன்று தனது நடிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டது.

- சா.இலாகுபாரதி