08 February 2010

ஒரு பால் புணர்ச்சி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 3 comments

கஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் காட்டுகிறார். கஜுராஹோ சிற்பங்களில் அவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. ஒருபாற்புணர்ச்சிக்குரிய உருவமென தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன.


1. அதிகம் பேசப்பட்ட காட்சி, அவ்வப்போது ஒருபாற்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, அந்தத் தளத்தில் இருக்கும் விஷ்வநாதர் கோயிலின் வடக்கு சுவரில் இருக்கும் தலையைக் கவிழ்ந்திருக்கும் சிற்பம். முகப்பில் முதுகுப்புறத்தைக் காட்டும் மேலே இருக்கும் உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையிலேயே ஆண், அதனுடைய பிறப்புறுப்பைக் கீழ்ப்பாகத்திலிருந்து பார்க்க முடிகிறது. அந்த உருவம் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதற்கு, பின்புறத்தில் முடி கொண்டையாக கட்டப்பட்டிருந்தது தான் காரணம், மத்திய காலங்களில் இது ஆண்கள் முடிவைத்திருக்கும் பாணியாக இருந்து வந்துள்ளது.





2. அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மற்றொரு சிற்பம் தேவி ஜகதாம்பா கோயிலின் தெற்குச் சுவரில் உள்ளது. இங்குத் தாடியுடன்கூடிய ஒரு சைவ (கபாலிகா) துறவி, ஆடையற்ற ஒரு க்ஷபானகா சந்நியாசியை, ஒரு கையால் அவருடைய உறுப்பை பிடித்துக்கொண்டு மற்றொரு கையை உயர்த்தி அடிக்கும் தொணியில், தன்னுடைய சமய நெறியில் இணையுமாறு மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சந்நியாசி சரண்டைவதுபோன்று கைகளைக் கூப்பி இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த உருவங்கள், நீதியுரைக்கும் உருவகக் கதை நாடகமான ப்ரபோதாசந்திரோதயாவின் இரு கதாபாத்திரங்களை பிரதிநிதிக்கின்றன, இந்த நாடகங்கள் 11-ம் நூற்றாண்டில் கஜுராஹோ பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சிற்பக்கலை காட்சியில் எந்த ஒருபாற்புணர்ச்சி உறவும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

07 February 2010

இனி இலவசமாக சினிமா பார்க்கலாம்!

Posted by Gunalan Lavanyan 4:42 AM, under | No comments

உலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

சென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.

'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

அடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

முதல் சனிக்கிழமை

நேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கர்ண மோட்சம்

அழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

நடந்த கதை

அழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.

06 February 2010

காதல் தூது போன எம்.ஆர்.ராதா

Posted by Gunalan Lavanyan 12:08 AM, under | No comments

‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’
- எம்.ஆர்.ராதா

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.
ஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.

04 February 2010

மார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments



காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள். 

ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமே மார்க்ஸிடமிருந்து ஜென்னி ரசித்த ஆணின் அழகு! மார்க்ஸோ, 'உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அதுகூட தோற்றுப்போகும் அவளிடம்' என்று ஜென்னியை ரசித்தார்.

வெட்கப்படும் தேவதைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை - 4





வானத்திலிருந்து இறங்கி
முதன்முறையாக பூமிக்கு வந்த தேவதைகள்
நகர்வலம் வரத்தொடங்கியிருந்தனர்...

அது ஒரு இலையுதிர்க்காலம்.
தெருக்களின் இருமறுங்கிலும்
ஆடைகளைக் களைந்து
நின்றுகொண்டிருந்தன மரங்கள்.

தேவதைகள் வருவதை அறிந்து
நாணத்தால் இளம் பச்சை நிற ஆடைகளை
பூணத் தொடங்கியிருந்தன சில மரங்கள்.

வெட்கத்தை இழந்த மரங்கள்
‘நிர்வாணம்தான் யாராலும் பறிக்கமுடியாத
ஆடை’ என்று தத்துவம் பேசின.

நிர்வாணம் பார்த்து கண்கள் பூத்துவிட்ட
தேவதைகளுக்கு வெட்கத்தைப் பார்க்க
புதிதாக இருந்தது.

வெட்கம் குறித்து
யோசிக்கத் தொடங்கிய தருணத்தில்
ஆடை தறித்த மரங்கள்
பூக்கத் தொடங்கியிருந்தன.
தேவதைகள் வெட்கப்படத் தொடங்கியிருந்தனர்.

சிற்றின்பக் கலையின் உச்சநிலை

Posted by Gunalan Lavanyan 12:11 AM, under | 1 comment

கஜுராஹோ சிற்பங்கள் பற்றி ஜேம்ஸ் மெக்கொன்னாச்சி தன்னுடைய காமசூத்திர  வரலாற்று புத்தகத்தில் கஜுராஹோ சிற்பங்களின் கவர்ச்சி கரமான ‘சிற்றின்பக் கலையின் உச்சநிலை’ என விவரிக்கிறார்: ‘வளைந்த, அகன்ற இடுப்பும் பெருத்த மார்புகளையும் கொண்ட கவர்ச்சிகரமான மங்கைகள் தங்கள் தாராளமான உடலமைப்பு மற்றும் அணிகலன்பூட்டிய உடல்களை நேர்த்தியாக செய்யப்பட்ட வெளிப்புற சுவர் முகப்புகளில் காட்சிப்படுத்துகிறார்கள். இந்தச் சதைப்பிடிப்பான அப்ஸரஸ்கள் கற்களின் மேற்பரப்பெங்கும் ஆரவாரமாக, மூகப்பூச்சு செய்கிறார்கள், முடிகளை உலர்த்துகிறார்கள், விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், மற்றும் ஓய்வில்லாமல் தங்கள் அரைக்கச்சைகளை பின்னுவதும் அவிழ்ப்பதுமாக இருக்கிறார்கள்... தேவலோக கவர்ச்சி மங்கைகள் தவிர, நெருக்கமான முறைவரிசையிலான கிரிஃப்பின்கள், பாதுகாவல் தெய்வங்கள் மற்றும் மிகவும் பழியார்ந்த, வரம்புமீறி பின்னிப்பிணைந்த மைதுனாக்கள் , அல்லது காதல்புரியும் இணைகள் இருக்கின்றன.’ என்று கூறுக்கிறார்.

03 February 2010

Goa stills

Posted by Gunalan Lavanyan 8:32 AM, under | No comments


















என்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்

Posted by Gunalan Lavanyan 12:32 AM, under | No comments

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். பம்பாய் மெயில் புறப்படுவதற்குச் சில விநாடிகளே இருந்தன. புனாவில் நடைபெறவிருக்கும் ‘வசந்தசேனா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஒரு கோஷ்டி அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில் அந்த கோஷ்டியை அழைத்துச்செல்லும் இரு மானேஜர்கள் இடையே தகராறு. அது முடிவதற்குள் வண்டி புறப்பட்டுவிட் டது!

வண்டி சில மைல்கள் கடந்த பிறகுதான் தங்களை அழைத்துச் செல்லும் மானேஜர்கள் வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிலிருந்த சினிமா நடிக கோஷ்டிக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  திருதிருவென்று விழித்தார்கள். அவர்களுக்கு நடுவே அப்படி விழிக்காத ஒரு நடிகரும் இருந்தார்.

அவர் மற்றவர்களைப் போல ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் தவிக்காமல் மற்றவர்களுக்குத் தைரியம் சொன்னார்:  ‘‘இப்ப என்ன ஆச்சு? ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம்?’’ என்றார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே பெட்டியில் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கைப் பேச்சையும் சிறு புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள்தான். அந்த மனிதர் எல்லாருக்கும் தைரியம் சொன்னாலும், அவளுக்கு உள்ளம் திக்கென்றது.தன் பதற்றத்தை அவ்வளவாக அந்தப் பெண்மணி  வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அவர் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவர்களிடம் தேவையான பணம் கிடைக்கவில்லை. அதே கேள்வியை அந்தப் பெண்மணியிடமும் கேட்டார், ‘‘புனாவுக்குப் போனதும் சினிமாக்  கம்பெனிக்காரரிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு!’’ என்று மீண்டும் அவர் கேட்டார்.

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொண்ணூறு ரூபாயை எடுத்துக் அவரிடம் கொடுத்தாள். ரயிலில் சாப்பாட்டுச் செலவுக்கு அந்தப் பணம் மிக உதவியாக இருந்தது. புனா வந்ததும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களா இருந்த முகவரியை விசாரித்துக்கொண்டு நடிக கோஷ்டி அங்கு போய்ச் சேர்ந்தது. அங்கு போனதும் மீண்டும் உணவுப் பிரச்னை. சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள் இருந்தன. உணவுப் பண்டங்கள் இல்லை. அவற்றை வாங்கப் பணம் இல்லை. கம்பெனி மானேஜர்கள் எப்பொழுது வந்து சேருவர்களோ? அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா? தவித்தார்கள். அந்த மனிதர் மட்டும் தவிக்கவில்லை!

மறுபடியும் அதே பெண்மணியிடம் சென்றார். குழைந்தார். ‘‘இங்கு வந்தது முதல் இன்னும் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. ஏன், நீகூடத்தான் சாப்பிடாமல் இருந்துவருகிறாய்! உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய்.  அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று பக்குவமாகப் பேசினார்.

அதுவரை பேசாதிருந்த பெண்மணி... ‘‘போனால் போகட்டுமென்று கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்தேன்.  இப்போது நகைகளையும் கேட்கத் துணிந்துவிட்டீர்களே! அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ?’’ என்று அவள் அவரைக் கேட்கவில்லை; சீறினாள்.

அவர் அமைதியோடு பேசத் தொடங்கினார்: ‘‘உன்னிடந்தான் எதையும் கேட்கத் தோன்றுகிறது!’’ அப்படி அவர் சொன்னதும், அந்தப் பெண்மணியின் உள்ளம் குறிர்ந்துவிட்டது. உடனே தன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்தாள். அவர் ஒரு தடவை முகமலர்ச்சியோடு நன்றி கூறிவிட்டு நகைகளோடு போனார். சில நிமிடங்களில் நகைகள் அடமானம் வைத்து உணவுப் பொருள்களை வாங்கி வந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கம்பெனி மானேஜர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர், ‘‘நல்ல வேளை, இன்றாவது வந்து சேர்ந்தீர்களே! இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும்!’’ என்றார். மானேஜர்கள் ஒருவிதமான அசட்டுப் பார்வையோடு பேசாமலிருந்தார்கள். ஏற்கெனவே தாம் பொறுப்பேற்றபடி அவர்களிடமிருந்து பணம் வாங்கி நகைகளை மீட்டு, ரொக்கம் தொண்ணூறு ரூபாயையும் சேர்த்து, அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டிக்கொண்டே அவற்றை பெற்றுக்கொண்ட பெண்மணி யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் டி.ஏ.மதுரம்தான். அந்த மனிதர் சகலகலா வல்லவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனேதான்!
அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு நடுவில் கிருஷ்ணனும் மதுரமும் பல தடவை சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்று சொல்லும்படி அந்தச் சந்திப்புகள் இருந்தன. கிருஷ்ணனுக்கு மதுரத்தின் கலை உள்ளம் மிகப் பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனத்திலே வாங்கிக்கொள்ளும் ஆற்றலும், வசனங்களை வெடுக்கென்று விழு ங்காமல் பேசும் திறமையும் மதுரத்துக்கு இருந்து வருவதைக் கிருஷ்ணன் கண்டார்.
கிருஷ்ணனிடம் குவிந்து கிடக்கும் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவற்றில் கலந்து காணப்பெறும் கருத்துள்ள நகைச்சுவையையும் கண்டுவிட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தார் மதுரம்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை டைரக்டர் ராஜா சாண்டோ புரிந்துகொண்டார். ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார். அவரது அழைப்பில் ஒருவித அதட்டல் மேலோங்கி நின்றது. அதற்காக கிருஷ்ணன் அஞ்சி விடவில்லை. ‘‘என்னை அழைத்தீர்களாமே?’’ என்று கேட்டுக்கொண்டே டைரக்டருக்கு அருகில் கேள்விக் குறிபோல் போய் நின்றார்.

டைரக்டர் ராஜா சாண்டோ வழக்கம்போல், ‘‘டேய் கிருஷ்ணா’’ என்று அழைத்துவிட்டுச் சொன்னார்... ‘‘எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்...? தெரியும்! தெரியும்! சில நாட்களாகக் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறேன்.  கடைசிவரை கைவிடமாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி சொல்லு. உனக்கு இந்த நிமிடம் முதல் மதுரம் சொந்தம்!’’
கிருஷ்ணன் அந்த உறுதிமொழியை அளித்தார். அன்று அதே டைரக்டரின் முன்னிலையில் அவரது ஆசியோடு கிருஷ்ணனும் மதரமும் காதல் மணம் செய்துகொண்டனர். பொதுவாகப் படப்பிடிப்புகளில் காதலன் காதலிக்குத் திருமணம் நடப்பதுண்டு. அது சினிமா கல்யாணம். ஆனால், புனாவில் படத்துக்காக நடிக்கவந்த இடத்தில் கிருஷ்ணன் - மதுரத்துக்கு உண்மையாகவே திருமணம் நடந்துவிட்டது. அதை மனப்பூர்வமாகச் செய்துவைத்த டைரக்டர் ராஜாசாண்டோ திருமணம் முடிவடைந்ததும் ‘கட்’ என்று டைரக்டர் பாஷையில் சொல்லவில்லை!