Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments


தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.

நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றால், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும்? எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி?

விஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.

ஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.

அவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.

‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும். 

போலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் படிக்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.

ஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.

25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments


தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.



25.04.2011

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.

’நீங்க எதுவும் செய்யவில்லையா?' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்?' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.

அவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.

இந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா?

’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.

பொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.

சாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.

நன்றி,

இப்படிக்கு
ஆனந்தி

(நன்றி: தினமலர்)



- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.

வாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.

ஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.

05 March 2011

திமுக - காங்கிரஸ் பிளவு ஏன்? - வேகமான அலசல்

Posted by Gunalan Lavanyan 10:52 PM, under | 2 comments


ஸ்பெக்ட்ரம் முறைகேடு அம்பலமானதில் இருந்தே திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சரியான உறவு இல்லாமல்தான் இருந்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம், யுவராஜா என்று ஆளுக்கு ஒரு மூளையில் நின்று திமுகவை டேமேஜ் செய்துகொண்டு இருந்தார்கள். இந்த விவகாரம் ஏற்கெனவே திமுக புள்ளிகள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் இல்லாமல் ராகுல் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமலே டெல்லி திரும்பியதும் திமுக.வினரிடம் புகைச்சலை ஏற்படுத்தி வந்தது.

ராகுல் ஒன்றும் குழந்தை இல்லையே! காங்கிரஸின் பொதுச் செயலாளர். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்திவரும் தலைவர். எதிர்கால காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர். அதற்கும் மேலாக நேர்மையான அரசியலை விரும்பும் இளைஞர் என்று எதிர்கட்சியினராலேயே பாராட்டப்படும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஒரு தலைவர்கள், கருணாநிதியை சந்திக்காமல் போவது ஒவ்வொரு முறையும் எதிர்பாராமலா நடந்திருக்கும். எல்லாமே திட்டமிட்ட காய் நகர்த்தல்கள்தான்.



40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்காமலே இருப்பது காங்கிரஸ் வளர்ச்சிக்கு சரியான அறிகுறி இல்லை என்பது ராகுலின் அபிப்ராயம். அதன் பின்னணியில்தான் யுவராஜா, ஈ.வி.கே.எஸ். கார்த்திக் போன்ற தலைவர்கள் செயல்பட்டார்கள்.

ஒருபக்கம் ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன் என்று உறவாடிக்கொண்டே மறுபக்கம் எதிர்ப்பலைகளை ஒரு கோஷ்டி உருவாக்கிக் கொண்டு இருந்தது. இவை அனைத்தும் திட்டமிட்டே நடத்தப்பட்ட நாடகங்கள் என்பது இப்போதாவது தி.மு.க.வுக்கு விளங்கியிருக்குமா என்று தெரியவில்லை? இந்த நாடக அரங்கேற்றங்கள் எல்லாம் சோனியாவின் அனுமதியில்லாமலா நடந்தேறியிருக்கும்? எல்லாமே ஸ்பெக்ட்ரமால் வந்த வினைதான் என்று பத்திரிகை வட்டாரங்களில் கசப்பு வார்த்தைகள் உதிர்க்கிறார்கள்.

அரசியல் சாணக்கியர் கருணாநிதி எப்படி இந்தத் தேர்தலில் கோட்டை விட்டார்..? இல்லை, காங்கிரஸ் இல்லாமல் நின்றுதான் பார்ப்போமே என்ற மன தைரியமா? இல்லை துணை முதல்வர் பதவி பறிபோய்விடுமோ என்ற கவலையா? அல்லது ஸ்டாலின் முதல்வராவதற்கு தடைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமா? எல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.


காங்கிரஸும் வேறு ஏதோ சூசகமான திட்டத்தோடுதான் இப்படி பிடிகொடுக்காமல் திமுகவிடம் நடந்துகொண்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் பலர்... அது என்ன திட்டமாக இருக்கும்? அரசியல் தெரிந்த சில விவரப் புள்ளிகள் கூறுவது இதுதான்:

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஒரு முன்முயற்சியில்தான் திமுகவுடனான இடஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அப்படி பிடிகொடுக்காமல் நடந்துகொண்டது. அதுவும் இல்லாமல், அடிக்கடி பொதுக்கூட்ட மேடைகளில் அதிமுக தலைவி ஜெயலலிதாவேறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். அதேநேரத்தில் ஸ்பெக்ட்ரம், இலங்கைப் பிரச்னைகள் வேறு விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. விலைவாசி ஏற்றம், பெட்டோல் விலை உயர்வு போன்ற அடிப்படை பிரச்னைகள் வேறு தலைவிரித்து ஆடுகின்றன. இவை எல்லாப் பிரச்னைகளுக்கும் தானும் ஒரு காரணம் என்பது காங்கிரஸுக்குத் தெரியும். அதனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருப்பதும் அந்தக் கட்சிக்கு தெரியும். ஆனால், திமுகவோடு சேர்ந்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட கிடைக்காமல், தமிழக அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடுமோ என்ற பயம் சில நாட்களாகவே ராகுலுக்கும் அவர் தொண்டர்களுக்கும் இருந்து வந்தது. அதனால், எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களே பல நாட்களாக போராடி வந்தார்கள். அது இப்போது நடந்தேவிட்டது.

இன்னொன்றையும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்... தேமுதிகவை தனியாக அழைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அது. ஆனால், அதற்கான மேகமூட்டம் எல்லாம் கலைந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அரசியல் வானில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

- சா.இலாகுபாரதி

டாப் 10 பெண்கள் 2010

Posted by Gunalan Lavanyan 7:18 PM, under | No comments

1

ஆங் சான் சூ கி


1945-ல் மியான்மர் விடுதலைப் போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூ கி. படிக்க பிரிட்டன் சென்று அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் முடித்துக் கொண்டார். மியான் மரில் 1962-லிருந்து ராணுவ ஆட்சி நடந்து வந்தது. 1988இ-ல் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்பிய சூகி, நாடு முழுவதும் இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பைக் கண்டு, ‘தேசிய ஜனநாயக லீக்’ கட்சியைத் துவங்கினார். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினார். இதனால், மக்களிடம் சூகியின் செல்வாக்கு மளமளவென உயரத் தொடங்கியது.

இதை எதிர்பாராத ராணுவ அரசு, பாதுகாப்பு காரணம் எனச் சொல்லி, 1989ஆம் ஆண்டு சூகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. இது 1995ஆம் ஆண்டு வரை நீடித்தது. இடையில் சில காலம் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார் சூ கி. பல நாடுகளின் வற்புறுத்தலாலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகளாலும் கண்டனத்துக்கு உள்ளான மியான்மர் ராணுவ அரசு, 2010 நவம்பர் மாதம் சூ கியை விடுவித்தது. கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையிலேயே காலத்தைக் கழித்திருக்கும் சூ கி, 65 வயதிலும் போராட்ட குணம் மாறாமல் தனது அடுத்தகட்ட அரசியல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிவரும் சூ கி, மியான்மர் நாட்டு மக்களின் நம்பிக்கைச் சூரியன்!


2

ஓப்ரா வின்ஃப்ரே

அமெரிக்க சேனல் ஒன்றில் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்ற பெயரில் டாக் ஷோ நடத்தி வருகிறார் வின்ஃப்ரே. உலகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள். இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக் கும் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. டாக் ஷோ தவிர பத்திரிகை, இணைய தளம், நிகழ்ச்சி தயாரிப்பு, நடிப்பு என்று மீடியாவின் அத்தனை முகங்களையும் கொண்ட வின்ஃப்ரேவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 11 இலக்கம். அதாவது, ஆயிரத்து நானூறு கோடி. இதன்மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் வின்ஃப்ரே, ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். ஒரு காலத்தில் உலகின் ஒரே கறுப்பின பில்லியனர் என்ற அந்தஸ்தையும் இவர் பெற்றிருந்தார். இப்போது ‘ஒன்’ என்ற பெயரில் டி.வி. சானல் ஒன்றையும் தொடங்குகிறவர், ‘நாட்டின் செல்வாக்கு நிறைந்த பெண்மணி’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப் பெற்றவர்.

இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கும் வின்ஃப்ரேவின் இளமைக்காலம் கொடுமையானது. தன் ஒன்பதாவது வயதிலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, ஒரு குழந்தை பிறந்து அதை மரணத்துக்கு பலிகொடுத்தவர். வறுமைமிக்க கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, துயரம் நிறைந்த இளமைப் பருவத்தைக் கடந்து, உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வின்ஃப்ரே, ‘வாழ்வில் வெற்றி பெறுவது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. அயராமல் உழைக்கத் தயார் என்றால் எந்த உயரத்தையும் எட்டலாம்’ என்று கூறுகிறார். தான் நடத்தும் பத்திரிகை, இணையதளம் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்குவதில் வெளிப்படுகிறது ஓப்ராவின் மனிதநேயம்.


3


சாய்னா நெஹ்வால்


சாய்னா நெஹ்வாலைப் போல ஒரு பெண், இந்திய பேட்மிட்டன் உலகில் இனி பிறக்க வேண்டும். வந்த வேகத் தில் திரும்பிவிடாமல், நின்று அடித்துக் கொண்டு இருப்பவர். ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது பெற்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர் என்ற அந்தஸ்துக்குச் சொந்தக்காரர். சாய்னா ஒரு போட்டியில் பங்கேற்றால் வெண் கலத்தையாவது வாங்காமல் திரும்ப மாட்டார் என்கிற அளவுக்கு அவரு டைய ஹிட்-லிஸ்ட் இருக்கிறது. குறைந்த வயதில், விளையாட வந்த சிறிய கால இடைவெளிகளுக்குள் உலகத் தர வரிசையில் முன்னுக்கு வந்தவர்.

பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது, யோசிக்காமல் மறுத்துவிட்டவர், விளம் பரத்துறையில் கால் பதித்துவிட்டார். விளம்பரத்தில் நடிப்பதற்கு கிரிக்கெட் ப்ளேயர்கள், சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் சாய்னா கூடுதலாக வாங்குகிறார். இப்படி அதிகப்படியான சம்பளத்தோடு விளம்பரத்தில் நடித்தாலும், தன்னுடைய விளையாட்டில் கோட்டைவிட்டது இல்லை என்பது சாய்னாவின் மிகப் பெரிய ப்ளஸ்!


4


ஆயிஷா

ஆயிஷாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமுடியாது. அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் செய்தி வெளியானதும் உலகில் உள்ள பெண்கள் அமைப்புகள் அத்தனையும் ஒரு நிமிடம் வாயடைத்துதான் போயின. அந்த அளவுக்கு வன் கொடுமைக்கும், பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளாகி, உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆயிஷா. காதுகளும் மூக்கும் துண்டிக் கப்பட்ட இந்த ஆயிஷா, பணத்தாசை பிடித்த ஒரு தந்தைக்கு ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். தன் அப்பாவின் பணவெறியால் தாலிபான் தீவிரவாதிக்கு கழுத்தை நீட்ட விற்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் மீடியாவால் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. குண்டுவைப்பது, ஊரை எரிப்பது எனக் கொடூரங்களை அரங்கேற்றும் தாலி பான்களின் இந்தத் தீவிரவாதம் இன்று ஒரு பெண்ணின் காது, மூக்குவரை நீண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஆயிஷாவின் இந்தச் சோகம் டைம் பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வந்தபிறகு அவருக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு குரல்கள் ஒலித்தன. அமெரிக்கா சென்று மூக்கில் அறுவை சிகிச்சை செய்து திரும்பியிருக்கிறார் ஆயிஷா. ‘எனக்கு ஏற்பட்ட காயம் இன்று ஆறினாலும் அதன் வடுக்கள் மட்டும் வலிகளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன’ என்கிறார் ஆயிஷா. பாதுகாப்பு அரண்களாக இருக்க வேண்டியவர்களாலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஆயிஷாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிற இந்தக் கொடு மைகள் மிகப் பெரும் துயரச் சம்பவம்.


5


அருந்ததி ராய்


“மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள பாக்ஸைட் கனிம வளங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக, அங்கு வசிக்கும் பூர்வப் பழங்குடி மக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்த மக்கள் மீது ‘சல்வா ஜூடும்’ என்ற கூலிப்படையை ஏவித் தொடர் தாக்கு தல் நடத்தி வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தண்டகாரண்யா பழங்குடி மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்” என்பது மத்திய அரசு மீதான அருந்ததி ராயின் குற்றச்சாட்டு. பழங்குடிகளுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில்தான் அந்தக் காடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை அறிந்து வந்திருக்கும் அருந்ததி ராயை, ‘மாவோயிஸ்ட்’ என்று ஒரு சாரார் முத்திரை குத்தியிருக்கிறார்கள். மத்திய அரசும், அரசுக்கு
எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர் மீது ஏவி வருகிறது.

ஆனால், இவை எதற்கும் அசராமல் தொடர்ந்து பழங்குடிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராகவும் போராடிவரும் அருந்ததிராய், ‘நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங்களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போதுதான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது’ என்கிறார். அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தாலும், பழங்குடி மக்களின் தலைவலிக்கு அருமருந்தாக இருப்பதும் அருந்ததி ராய்தான்.


6

ஏஞ்சலினா ஜூலி

உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் வரிசையில் தவறாமல் இடம் பிடித்துவிடுவார் ஏஞ்சலினா ஜூலி. ஜூலியின் ஆறு குழந்தைகளில் மூன்று தத்துப் பிள்ளைகள். ஜூலியின் ஒரே கவலை அவர்களோடு நேரத்தை செல விட முடியவில்லை என்பதுதான். அதனால் எதிர்காலத்தில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப்பிரிக்கா வில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே இவரது கனவு. ‘மூன்று குழந்தை பெற்றபிறகும் ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்கிறார்’ என்கிறார்கள் அவருடைய ரசிக மகா ஜனங்கள்.

அழகோடு அற்புதமான நடிப்பும் கைவரப்பெற்ற ஜூலி, அந்தத் திறமைக்குப் பரிசாக ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். ஆஸ்கர், கோல்டன் குளோப் அவார்ட் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல விருதுகளைப் பெற்றிருக்கும் ஜூலி, ‘தன் கண்களிலும், உதடுகளிலும்தான் ஒட்டுமொத்த அழகையும் ஒளித்து வைத்திருக்கிறார்’ என்பது பலரது கருத்து. அந்த அழகுக்கு சவால்விடும் வகையில், ஏற்கெனவே எலிசபெத் டெய்லர் நடித்த ‘கிளியோபாட்ரா’ படத்தின் ரீ-மேக்கில் இப்போது ஜொலிக்கப்போகிறார் ஜூலி. ஹாலிவுட்டின் அட்ராக்டிவ் நட்சத்திரமான ஜூலியின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்துக்கொண்டே போகிறதாம்.


7

நீரா ராடியா

டெல்லிவாலாக்கள் இப்போது நீரா ராடியாவின் பெயரைக் கேட்டாலே அதிர்ச்சி அடைகிறார்கள். ‘வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் ராடியா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இடைத் தரகராக இருந்து காய்களை நகர்த்தி யவர். 2ஜி விவகாரம் தொடர் பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட் டோருக்கு இடையே இவர் பாலமாக செயல்பட்டதற்கு வலுவான ஆதாரங் கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததுடன் இவரது தொலைபேசி ஆடியோ பதிவுகள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்குள் அடுத் தடுத்து இரண்டு முறை இவருக்கு சொந்தமான நிறுவனம், வீடு, வங்கிக் கணக்குகள் என்று ஒவ்வொன்றையும் சல்லடையாக சலிக்கத் தொடங்கியது சி.பி.ஐ. இவருக்கு எதிராகக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இன்னும் எத்தனை தலைகள் உருளுமோ என்கிற பயத்தில் டெல்லி வட்டாரம் உறைந்துபோய் இருக்கிறது. (நம் தோழியில் டாப் 10 பெண்கள் பற்றி எழுதும்போது ஆ.ராசா கைது செய்யப்படவில்லை!)


8


சானியா மிர்ஸா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் விளை யாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட முதல் பெண் சானியா. கவர்ச்சியும் அதிரடியும் கலந்த சானியாவின் சர்வீஸ்களுக்கு இந்தியாவில் இன்று ரசிகர் பட்டாளம் ஏராளம். ஒரு காலத்தில் ஆண்கள் மட் டுமே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய டென்னிஸ் உலகில் சானியாவின் வரு கைக்குப் பிறகுதான் நிறைய மாற்றங் களும் முன்னேற்றங்களும் நடந்திருக் கின்றன. சானியா முதலடி எடுத்து வைத்த 2003ஆ-ம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டைவிட அவர் உடுத்திய ஆடைகள் மீதுதான் பார்வையாளர்களின் கவனம் இருந்தது. இதுவே சானியா மீது பலரை வார்த்தை குண்டு வீசவைத்தது. ‘அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என்று அவர் சார்ந்த மதத் தலைவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அதேபோல, கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்குடன் அவருக்கு நடந்த திருமணத்துக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள், கெடுபிடிகள். உணர்ச்சிவசப்பட்டு சிலர் அவரை நாடுகடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சிலர் அவருடைய திருமணத்தை நடக்கவிட மாட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் பேசினார்கள். ஆனால், இப்படிப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அவர் அஞ்ச வில்லை. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வரும் சானியா, பாகிஸ்தான் மருமகளாக இருந்தாலும், தான் எப்போதும் இந்தியாவின் மகள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். இந்திய டென்னிஸ் வானில் சானியா மிர்ஸா சில்வர் ஸ்டார்.


9


லதிகா சரண்

தமிழ்நாடின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். இந்த அந்தஸ்தும் பதவி யும் இவரைத் தானாகத் தேடிவந்தது. ‘டிஜிபி பொறுப்புக்கு இவரைவிட சீனியர்கள் இருக்கும்போது இவரை ஏன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கிறீர்கள்’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, அதற்குத் தகுந்த பதில் அளித்து விட்டு, தன்னுடைய நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாகவே இருந்தது. இவரது நியமனம் குறித்துப் பல விமர்சனங்கள், வழக்குகள், கேள்விகள் எழுந்தபோதும் லத்திகா வாய்திறக்கவில்லை. இதுதான் அவரது அணுகுமுறை. அரசும் இப்படிப்பட்டவரைத்தான் எதிர்பார்க்கிறது. குடைச்சல் இல்லாமல் சுமுகமாக அரசு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால், லத்திகா சரண்தான் சரியான சாய்ஸ் என்று தீர்மானித்துத்தான் அவரைப் பதவியில் அமரவைத்தி ருப்பார்கள். எப்படி இருப்பினும் நெளிவு சுளிவு கொண்ட நாசூக்கான ஓர் உயர் அதிகாரி தமிழகக் காவல் துறைக்கு நிச்சயம் தேவை. அந்த இடத்தை நிரப்புவதில் லத்திகா சரண் முன்னணி வகிக்கிறார்.
சல்யூட் மேடம்!



10


இரோம் ஷர்மிளா

1958இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘ஆயுதப் படைச் சிறப்புச் சட்ட’த்தை திரும்பப் பெறவேண்டும் என்று தொடர் பட்டினிப் போராட்டம் நடத்திவருபவர் இரோம் ஷர்மிளா. இச்சட்டம் ராணுவ வீரர்களுக்கு கட்டுப் பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது.

2000இல் ஆயுதப் படைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்துவதாகச் சொல்லி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். கண்மூடித் தனமான இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவது ஒன்றே, மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க ஒரேவழி என்று கூறி, தன் பட்டினிப் போராட்டத்தை அறிவித்தார் ஷர்மிளா. அந்தச் சட்டம் இன்றுவரை வாபஸ் பெறப்படவில்லை. ஷர்மிளாவின் போராட்டமும் ஓய வில்லை.

- சா.இலாகுபாரதி

நம்தோழி, ஜனவரி - 2011

13 February 2010

சல்லாப காதலர்கள் ஜாக்கிரதை!

Posted by Gunalan Lavanyan 6:57 PM, under | No comments

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிறைய காதல் ஜோடிகள் முன்கூட்டியே காண்டம்களை வாங்கிவருவதாகவும், அதனால் காதலர் தின ஸ்பெஷல் விற்பனையாகவே உலகமெங்கும் மில்லியன் கணக்கில் காண்டம்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


காதலர் தினம் என்ற பெயரில் இப்படி சல்லாபமாக இருக்க விரும்பும் காதல் ஜோடிகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கட்டுரை. தவிர காதலர்களுக்கோ அல்லது காதலர் தினத்தை சல்லாபமாக கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கோ எதிரான கட்டுரை அல்ல.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காம லீலைகளில் ஈடுபடும் காதல் (காம) ஜோடிகளில் சிலர் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக எண்ணி காம விளையாட்டில் ஈடுபடும்போது அதை செல்போனில் படம் பிடித்து விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்பவர்கள் அவசியம் இத்தகைய வீடியோ பதிவுகளை தவிர்ப்பதுதான் உத்தமம். காரணம், செல்போனில் பதிவு செய்து அதை அல்பத்தனமாக பிறகு பார்த்து ரசிக்கலாம் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அந்த அல்பத்தனமே அதன்பிறகு அவர்களுக்கு ஆப்புவைக்கும்.

அது எப்படி என்று பார்ப்போம்?
பல ஆண்கள் (சில பெண்கள்), இந்த வீடியோ பதிவை தங்களுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியும், புளூ டூத் வழியாக ஃபார்வர்ட் செய்தும் சில்லறைத்தனமான ஆசையை நிறைவேற்றப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுடைய அந்த நண்பர்கள் மூலமாக எளிதாக மற்ற எல்லாருடைய செல்போன்களுக்கும் இந்த வீடியோ காட்சி பரவி பிரசித்தி பெற்ற வீடியோவாக மாறி, வீடியோவில் உள்ளவர்களின் பிற்கால வாழ்க்கையையே அது கேள்விக்குறியாக மாற்றிவிடுகிற வாய்ப்புகளை இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் செய்து தருகிறது.

அப்படியில்லாமல், சிலர் தாங்கள் மட்டுமே வைத்து வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலும் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. திடீரென்று ஒருநாள் சொல்போன் ரிப்பேர் ஆகி சர்வீஸுக்கு போனால் அதில் இருக்கும் வீடியோவை சர்வீஸ் சென்டர்காரர்கள் சுட்டு உலகம் முழுக்க இணையதளத்தின் மூலமோ அல்லது அதே புளூ டூத் மூலமோ பரப்பிவிடும் சாத்தியங்கள் நிரம்ப இருக்கின்றன.

இப்படி பதிவு செய்யும் வீடியோவை மற்றவர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல், சில மாஃபியா கும்பல்கள், குறுக்குசால் ஓட்டுபவர்களிடம் அது கிடைத்துவிட்டால் அந்தப் பதிவில் உள்ளவர்களின் கதி அதோ கதிதான். அதை வைத்தே அந்த கும்பல் அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவும், தவறான வழிகளுக்கு அழைக்கவும் சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கும்.

சில நேரங்களில் அந்த வீடியோ மீடியாகாரர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்... அதில் உள்ளவரின் மானம் கப்பலேரி ஊர் சுற்றி உலகம் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆகவே, உல்லாசமாக ஈடுபடுபவர்கள் சல்லாபத்தை முடித்தோமா பாய் மடித்தோமா என்று இருப்பது நல்லது. தவறியும், 'நான் மட்டும்தானே பார்க்கப்போகிறேன். நாம் மட்டும் தானே பார்க்கப்போகிறோம்... இன்று இரவு பார்த்துவிட்டு நாளை டெலிட் செய்துவிடுகிறேன்' என்று எதிர் பாலினக்காரர் சொல்கிறார் என்று அதை நம்பி, சம்மதம் சொல்லி, வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.

தேவை ஜாக்கிரதை!
தேவையா இப்படிப்பட்ட சல்லாபம்?

உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... இந்தப் பதிவுக்கு வாக்களித்து, சல்லாப வீடியோ பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.

08 February 2010

ஒரு பால் புணர்ச்சி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 3 comments

கஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் காட்டுகிறார். கஜுராஹோ சிற்பங்களில் அவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. ஒருபாற்புணர்ச்சிக்குரிய உருவமென தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன.


1. அதிகம் பேசப்பட்ட காட்சி, அவ்வப்போது ஒருபாற்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, அந்தத் தளத்தில் இருக்கும் விஷ்வநாதர் கோயிலின் வடக்கு சுவரில் இருக்கும் தலையைக் கவிழ்ந்திருக்கும் சிற்பம். முகப்பில் முதுகுப்புறத்தைக் காட்டும் மேலே இருக்கும் உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையிலேயே ஆண், அதனுடைய பிறப்புறுப்பைக் கீழ்ப்பாகத்திலிருந்து பார்க்க முடிகிறது. அந்த உருவம் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதற்கு, பின்புறத்தில் முடி கொண்டையாக கட்டப்பட்டிருந்தது தான் காரணம், மத்திய காலங்களில் இது ஆண்கள் முடிவைத்திருக்கும் பாணியாக இருந்து வந்துள்ளது.





2. அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மற்றொரு சிற்பம் தேவி ஜகதாம்பா கோயிலின் தெற்குச் சுவரில் உள்ளது. இங்குத் தாடியுடன்கூடிய ஒரு சைவ (கபாலிகா) துறவி, ஆடையற்ற ஒரு க்ஷபானகா சந்நியாசியை, ஒரு கையால் அவருடைய உறுப்பை பிடித்துக்கொண்டு மற்றொரு கையை உயர்த்தி அடிக்கும் தொணியில், தன்னுடைய சமய நெறியில் இணையுமாறு மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சந்நியாசி சரண்டைவதுபோன்று கைகளைக் கூப்பி இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த உருவங்கள், நீதியுரைக்கும் உருவகக் கதை நாடகமான ப்ரபோதாசந்திரோதயாவின் இரு கதாபாத்திரங்களை பிரதிநிதிக்கின்றன, இந்த நாடகங்கள் 11-ம் நூற்றாண்டில் கஜுராஹோ பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சிற்பக்கலை காட்சியில் எந்த ஒருபாற்புணர்ச்சி உறவும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

04 February 2010

சிற்றின்பக் கலையின் உச்சநிலை

Posted by Gunalan Lavanyan 12:11 AM, under | 1 comment

கஜுராஹோ சிற்பங்கள் பற்றி ஜேம்ஸ் மெக்கொன்னாச்சி தன்னுடைய காமசூத்திர  வரலாற்று புத்தகத்தில் கஜுராஹோ சிற்பங்களின் கவர்ச்சி கரமான ‘சிற்றின்பக் கலையின் உச்சநிலை’ என விவரிக்கிறார்: ‘வளைந்த, அகன்ற இடுப்பும் பெருத்த மார்புகளையும் கொண்ட கவர்ச்சிகரமான மங்கைகள் தங்கள் தாராளமான உடலமைப்பு மற்றும் அணிகலன்பூட்டிய உடல்களை நேர்த்தியாக செய்யப்பட்ட வெளிப்புற சுவர் முகப்புகளில் காட்சிப்படுத்துகிறார்கள். இந்தச் சதைப்பிடிப்பான அப்ஸரஸ்கள் கற்களின் மேற்பரப்பெங்கும் ஆரவாரமாக, மூகப்பூச்சு செய்கிறார்கள், முடிகளை உலர்த்துகிறார்கள், விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், மற்றும் ஓய்வில்லாமல் தங்கள் அரைக்கச்சைகளை பின்னுவதும் அவிழ்ப்பதுமாக இருக்கிறார்கள்... தேவலோக கவர்ச்சி மங்கைகள் தவிர, நெருக்கமான முறைவரிசையிலான கிரிஃப்பின்கள், பாதுகாவல் தெய்வங்கள் மற்றும் மிகவும் பழியார்ந்த, வரம்புமீறி பின்னிப்பிணைந்த மைதுனாக்கள் , அல்லது காதல்புரியும் இணைகள் இருக்கின்றன.’ என்று கூறுக்கிறார்.

03 February 2010

உடலுறவுக் கலை

Posted by Gunalan Lavanyan 12:21 AM, under | 2 comments





கஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதலில் அங்கு 80 இந்து கோயில்களுக்குமேல் இருந்தன. ஆனால், தற்போது 25 கோயில்கள் மட்டுமே பாதுகாக்கப்படும் நிலையில் உள்ளன. இவை சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் உடலுறவுக் கலையை விரிவாக விளக்கிச் சித்தரிக்கும் வகையி்ல் அமைந்துள்ளதால் இவை பெரும்  புகழ் பெற்றிருக்கின்றன. இந்தக் கோயில்கள் இந்திய கட்டடக் கலைக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அளவில் திகழ்கின்றன. கஜுராஹோ கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அவற்றின் சிறப்பினை அறிந்து தங்களால் முடிந்த அளவுக்கு அந்தக் கோயில்களை பராமரித்து வருகின்றனர்.

02 February 2010

சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள்

Posted by Gunalan Lavanyan 12:28 AM, under | 1 comment



கஜுராஹோ  மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்திய சுற்றுலாத் தளங்களில் மிகவும் புகழ்பெற்ற  ஒன்றான கஜுராஹோ, மிக அதிக அளவிலான இந்து மற்றும் சமணக் கோயில்களைக் கொண்டிருக்கிறது. இது சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘ஏழு அதிசயங்’களில் ஒன்றாகக் இது கருதப்படுகிறது.
கஜுராஹோ என்ற பெயர், பழங்காலத்தில் ‘கர்ஜுராவாஹகா’ என்று அழைக்கப்பட்டது. இது சமஸ்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லில் இருந்து வந்தது. சமஸ்கிருதத்தில் கர்ஜூ்ர் என்றால் பேரீச்சம்பழம் என்று அர்த்தம்.