26 January 2010

காதல் தோய்ந்த மனது

Posted by Gunalan Lavanyan 10:19 PM, under | No comments

கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...

இந்தியாவுக்கு வெற்றி!

Posted by Gunalan Lavanyan 6:53 AM, under | No comments

3,20,61,600 மணித்துளிகள், 5,34,360 மணிகள், 22,265 நாட்கள், 3,172 வாரங்கள், 732 மாதங்கள், 61 ஆண்டுகள் (1950 - 2010)!

இந்தியாவுக்கு வெற்றி.



இந்தியா குடியரசு நாடாகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினம் இன்று.
இந்த குடியரசு தினத்தில் இந்தியச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது முப்பாட்டன்களுக்கு வீரவணக்கம்!

இனியொருமுறை இந்திய மண்ணை அடிமைப்படுத்த எவனையும் அனுமதியோம் என்று உறுதிகொள்வோம்.

நாம் அனைவரும் இந்தியர்கள்.
இந்திய தேசம் நமது தாய்நாடு.
நமது தாய்நாட்டை காக்கவும்,
நம் தேசத்தின் ரகசியங்களை பாதுகாக்கவும்
நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று
இந்தியத் தாயின் மடியில் நின்று
இந்தியர்கள் அனைவரும் உறுதிகொள்வோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
வெற்றி நமதே!
இந்தியாவுக்கு வெற்றி!

24 January 2010

மழை வந்துவிட்டது இதயத்தில்!

Posted by Gunalan Lavanyan 7:54 PM, under | No comments


  • மழை வந்துவிட்டது இதயத்தில்
  • மெல்லிய இசை எழுப்பி
  • சில்லென்று பெய்கிறது...
  • தென்றல் விசும்புகிறது
  • குளிர் நடுங்குகிறது
  • செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன...
  • பச்சைப் பச்சையாய் புல்வெளிகள்
  • கால்களை வருடி சிலிர்க்கின்றன.
  • தெரு ஓடையில் மிதக்கிறது
  • காகிதக் கப்பல் - காதல் கடிதம்.
  • பறவைக் குஞ்சுகள்
  • சிறகுகளில் ஒளிந்துகொண்டு
  • கீச்ச்... கீச்ச்... கீச்ச்...
  • முளைக்கத் தொடங்கியிருந்தன
  • மழைக் குடைகள்...
  • டீசல் வழிந்த சாலைகளில் வானவில்
  • நெப்பந்தஸ் மழைத்துளிகளை
  • ஜீரணித்து ஏப்பம் விட்டது & டப்
  • ஆர்மோன் மாற்றத்தால்
  • மழை விட்டுவிட்டு பெய்தாலும்
  • தூவானம் இருக்கும்.
  • இதயம் நின்றுபோகும்சமயம்
  • ஓய்ந்தாலும்
  • வேறு இதயத்தில் பெய்யும்
  • மழை

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்...

நேற்று காலை முழுக்க
என் வீட்டு
தோட்டத்தையே
சுற்றிச்சுற்றி வந்த
பட்டாம்பூச்சி
இன்று அந்த
அடர்ந்த முட்புதரில் சிக்கி
உயிர் நீத்துக் கிடந்தது.

சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
போய் வந்துகொண்டிருந்த
நாய்க் குட்டி
ஏதோ வாகனத்தின்
டயர் பதிந்த
அடையாளத்தோடு
நசுங்கிக் கிடந்தது.

சிலந்தி பின்னிய
வலையின் இடையே
ஈயின் மரணம்.
பிறிதொரு நாளில்
வீட்டை ஒட்டடை அடித்ததில்
நசிங்கிப்போனது
ஈயும் வலையும்.

சாலையோர மரத்தை
வெட்டிச் சாய்ந்ததில்
கூடு உடைந்து
சிதறிப்போனதிலிருந்து
செத்துக் கிடந்தது
காக்கைக்குஞ்சு.

மகுடியின் நாதத்திற்கு
படமெடுத்து ஆடும் பாம்பு
ஒரு நாளில்
மரக்கிளையில் தொங்கியபடி
நாதமில்லாது ஆடிக்கொண்டிருந்தது
காற்றோடு.

இப்படி
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
ஏதோவொரு வகையில்
நிகழ்ந்துவிடுகிறது
மரணம்
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருப்பது இல்லை.
நாம் எல்லோரும்
காத்திருக்கிறோம்
மரணத்திற்காக.

- சா.இலாகுபாரதி

2005-ல் 'கூட்டாஞ்சோறு' சிறுபத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் தேர்வு பெற்ற கவிதை.

23 January 2010

திருமணம் முடித்த ஆண்கள் கவனத்துக்கு...

Posted by Gunalan Lavanyan 7:25 AM, under | 1 comment

இறக்க நேரிட்டால்...

காலம் சென்ற
என் நண்பரின் படத்திற்கு
பூவும் பொட்டும்
வைத்தார்கள்.
கணவனை இழந்த
அடையாளம் என்று சொல்லி
அவர் இணை
இனி அவையெதுவும்
இல்லாமல் வெறுமனேயே
இருக்கவேண்டும் என்றார்கள்.




நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...

அவையெதுவும்
நான் அவளை
மணந்ததற்கான
அடையாளச் சின்னங்கள் அல்ல.
அதற்கு முன்பாகவே
அவையாவும் அவளின்
பயன்பாட்டுப் பொருட்கள்.

- சா.இலாகுபாரதி

2004-ல் எழுதிய கவிதை.

அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.
ஆனால், இப்போது திருமணத்துக்குப்பின்னும் 
இதே கருத்தில்தான் இருக்கிறேன்.

22 January 2010

புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...

Posted by Gunalan Lavanyan 4:01 PM, under | 3 comments

மனிதனின் கற்றல் அறிவு நாள்தோறும் புதிய புதிய வாசிப்பை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிலர், அதீதமான
ஆர்வக்கோளாறினால் புத்தகத்தைப் பிரித்தால் கடைசி அட்டை வரை படித்தே தீருவது என்று 'புத்தகமும் கையுமாக' தங்கள் வாசிப்புத்
தாகத்தைக் தணிக்க முயல்கிறார்கள்.
அவர்கள்தான், பயணத்தின்போது வாசித்தல், படுத்துக்கொண்டே வாசித்தல், சாப்பிடும்போது வாசித்தல், தொலைக்காட்சி பார்க்கும்போது
வாசித்தல் என்று இயல்பை மீறின நிலைக்குப் போய்விடுகிறார்கள்.
இதனால் அறிவுப் பெருக்கம் ஒருபுறம் நடந்தாலும் இப்படி 'புத்தகப்புழு'வாக இருப்பவர்களுக்கு நாளடைவில் கண்கோளாறுகள் ஏற்படும்
வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும். கண் இருந்தால்தானே படைப்புகளை நாம் பார்க்கமுடியும்.
'ஆரோக்கியமான வாசிப்பு முறை எப்படி இருக்கவேண்டும்?' என்பது குறித்து சென்னை, ராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவ
இணை இயக்குநர் டாக்டர் சுஜாதா மோகன் கூறுகிறார்.


''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது
படுத்துக்கொண்டே படிப்பது
பயணத்தின்போது படிப்பது
கண்களுக்கு ஆரோக்கியமா?"

"நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!" என்று ஆரம்பித்தார் டாக்டர் சுஜாதா மோகன்.

"அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல என்றுதான் சொல்வேன்!

பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.
அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது
டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம்.

ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை
முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள்
பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி
முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல
இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது
வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம்
வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும்
கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து,
விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.
அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இருக்கின்றன.

பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்
தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு
விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப்
பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங்
கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்!

தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.
அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான
கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும்.

ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான
ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை
அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும்
சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு
பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை
சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப்
பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!" என்று
சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார் டாக்டர் சுஜாதா மோகன்.

- சா.இலாகுபாரதி

காதலிப்பவர்கள் மட்டும் கவனியுங்கள்...

Posted by Gunalan Lavanyan 6:30 AM, under | 2 comments

அந்த ஓடைக்குப் போனால்
அதில் நான் இறங்குவதேயில்லை...
கால்களால் எப்படி இறங்குவது
அது தேவதை குளித்த தீர்த்தம்!

தேவதை ஓடுகிறாள்
காற்சலங்கை கழன்று வீழ்கிறது
செத்துவிட்டது இசை.

அரிசிமாவில் கோலம் போட்டு
எறும்புக்கு காட்டுகிற கரிசனத்தில்
கொட்டும் பனியில்
ஒளிந்திருந்து பார்க்கிற
எனக்கு கொஞ்சம் காட்டக்கூடாதா?
கடைக்கண் பார்த்து...



அவள் ஆண் சாமி
கோயில்களுக்குப் போவதில்லை!
‘என் புருஷனை மயக்கிவிடாதே’ என்று
பெண் சாமிகள்
சண்டைக்கு வருகின்றன
ஆதலால்...

பழத்திலேயே
தக்காளிதான் அழகு!
அதுதான்
அவளைப் போலவே இருக்கிறது...

- சா.இலாகுபாரதி

21 January 2010

சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!

Posted by Gunalan Lavanyan 9:53 PM, under | 1 comment

ஐனாக்ஸ் – மயிலாப்பூர்
(சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!)

இந்தியாவிலேயே மிக அதிகமான திரைகளைக் கொண்ட நிறுவனம் ஐனாக்ஸ் லீஸுர் லிமிடெட் (Inox leisure ltd). இந்தியா முழுக்க 19 நகரங்களில் 101 திரைகளை ஐனாக்ஸ் கொண்டிருக்கிறது. மிக அதிகமான ஐனாக்ஸ் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களில்தான் இருக்கின்றன. சென்னையிலும் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலில்தான் ஐனாக்ஸ் இருக்கிறது. மொத்தம் நான்கு ஸ்க்ரீன்கள். முக்கியமான எல்லா மொழிப் படங்களும் காட்சியிடப்படுகின்றன.

ஐனாக்ஸில் பிலிம் சுருள்களின் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் முறையைவிட பிலிமில் ஓடும் படங்கள்தான் கிளாரிட்டியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் கூறுகிறது. பிலிம் மூலம் படம் திரையிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு செலவு சற்று அதிகம் என்றாலும், பார்வையாளர்களுக்கு துல்லியமான காட்சியை இதனால் தரமுடிகிறது என்று கூறுகிறார் சென்னையின் பொது மேலாளர் விவேக் வெட்டாத் (Vivek vettath). தவிர துல்லியமான ஒலி எழுப்பும் DDs சவுன்ட் எஃபெக்ட்ஸ் இங்கு உள்ளது.

லாபியிலிருந்து தியேட்டர் வரை முழுக்க கார்பெட், ஏசி. ஐனாக்ஸுக்கே சொந்தமான கான்டீன் என்று உயர்தரமான ஒரு தியேட்டராக ஐனாக்ஸ் திகழ்கிறது.

ஐனாக்ஸ் பிட்ஸ்
  • ஐனாக்ஸ் வருபவர்கள், சிட்டி சென்டரில் ஃபுட் கோர்ட், லேன்ட்மார்க், வியர்ஸ் ஷாப்பிங் என்று போகும் வசதி.
  • தியேட்டருக்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்ட்டி புரொஜக்டர்தான் மூலம்தான் இங்கு படங்கள் திரையிடப்படுகின்றன.
  • சர்வதேச ஆலோசகர்களின் பரிதுரைப்படி அமைக்கப்பட்ட ஆடிடோ ரியம்.
  • நான்கு தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் மொத்தம் 900-க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து படம் பார்க்க முடியும்.
  • வென்டர் டிக்கெட் புக்கிங் வசதி இந்தியாவிலேயே ஐனாக்ஸில் மட்டுமே இருக்கிறது. தவிர ஆன்லைன் புக்கிங், டிக்கெட் ஹோம் டெலிவரி வசதியும் இருக்கிறது.

டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120

- சா.இலாகுபாரதி