15 January 2010

தமிழ் சினிமா இழந்த பொக்கிஷம்! - எம்.ஆர்.ராதா வாழ்க்கைச் சுருக்கம்

Posted by Gunalan Lavanyan 10:29 PM, under | 2 comments

1907 ஏப்ரல் 14-ம் நாள், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது பிள்ளை பிறந்தது. ராஜகோபால் தன் தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, தனக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் பிள்ளைக்கு தந்தையின் பெயரான ராதாகிருஷ்ணன் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணன் ரொம்பவும் சூட்டிகையான பையன். படிப்பைக்காட்டிலும் விளையாட்டின் மீதே அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
அதற்கு ஒரு காரணம் உண்டு. குழந்தை ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவனை பள்ளியில் சேர்த்தனர். ஆனால், பள்ளிக்குச் சென்றால் வாத்தியார் பிரம்பால் அடிக்கிறார்... என்ன செய்வது என்று யோசித்த ராதா... இனி, பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டு தனக்குப்பிடித்த பில் தோட்டத்தைச் சுற்றித்திரிவது’ என்று முடிவு செய்கிறான். ஒரு சைக்கிளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக சுற்றுகிறான். தோட்டத்தில் குஸ்தி கற்றுக்கொள்கிறான்.

ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான் ராதா. ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவனை, பெரியவர் ஒருவர் அழைத்து, தனது பெட்டி படுக்கையை ரயிலில் கொண்டுவந்து வைக்கும்படி கேட்கிறார். பெரியவர் ஏதோ முடியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்த ராதா அவற்றைக் கொண்டுபோய் ரயில் பெட்டியில் வைத்துவிட்டு திரும்பும்போது, இந்தாப்பா...’ என்று பெரியவர் கையில் காலணாவைத் திணிக்கிறார்.
கையில் நயா பைசா இல்லாதிருந்த ராதாவுக்கு காலணாவைப் பார்த்ததும் முகத்தில் ரொம்பவும் பொலிவு... ராதா அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; பின்நாட்களில் தாம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கப்போகிறோம் என்று.
சிறு பிராயத்தில் இருந்த ராதாவுக்கு நாடக உலகம் அறிமுகமாகிறது. ஜெகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் சேர்கிறான் ராதா.
1924-ல் ஐயரின் நாடகக் குழு கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்துகிறது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர்.
நாடகத்தில் சிறுவன் ராதா, பாயசம்’ என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்கிறான். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ‘‘பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
சிறுவன் ராதா வந்ததும் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘பாயசம் மிகவும் நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார். அப்போது ராதாவுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்.
ஒருமுறை ஐயரின் கம்பெனி இலங்கைக்குச் சென்றிருந்தது. அங்கு நாடகத்துக்கான நோட்டீஸ் அச்சடிக்க வேண்டியிருந்ததால் ஓர் அச்சகத்தில் நோட்டீஸுக்கு ஆர்டர் கொடுத்தனர்.
ஆனால், நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்ஸில் திடீரென்று மிஷின் பழுதாகிவிட்டது. அச்சக உரிமையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். தகவலை அறிந்ததும் கம்பெனி வாத்தியார் பொன்னுசாமிபிள்ளை ராதாவை அழைத்தார். விஷயத்தைச் சொன்னதும் ராதா அச்சகத்துக்கு விரைந்தார். பழுது சரி செய்யப்பட்டது. அச்சக உரிமையாளர் திகைத்துப்போய் நூறு ரூபாய் தாளை எடுத்து ராதாவிடம் நீட்டினார். அதுதான் ராதா பார்த்த முதல் நூறு ரூபாய். ராதா மெக்கானிக்காவும், எலக்ட்ரீஷியனாவும் டிரைவராகவும்கூட பணியாற்றியிருக்கிறார்.
1932-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பால்ய கால நட்பின் காரணமாக ராதா அந்தக் குழுவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
1937-ம் ஆண்டு ராஜசேகரன்’ என்ற சமூகப் படத்தில் வில்லனாக நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அவரது முதல் படம். அதே ஆண்டு சேலம் மார்டன் தியேட்டர்ஸ்’ கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட சந்தனத் தேவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை.
ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன மார்டன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ராதாவுக்காக ஆங்கிலப் படத்தின் கதையை மையப்படுத்தி சத்திய வாணி’ என்ற படத்தை எடுத்தார். அதில் ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அப்படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. பார்த்தார் ராதா, தனக்கு திரைப்படம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார்.
மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதா, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ராதாவுக்கு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீது நிரம்பவே நம்பிக்கையும் பற்றும் உண்டு. அதன்காரணமாக 1943-ம் ஆண்டு திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.
நாடக அரங்கில் வண்ணத் திரைச் சீலைகளையும் ஓவியத் திரைகளையும் தொங்கவிட்டால்தான் பார்வையாளர்களை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இருந்த காலகட்டத்தில், தனது நாடகக் கம்பெனி சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் கருப்பு, வெள்ளை திரையை தொங்கவிட்டு அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் எம்.ஆர்.ராதா.
அன்றைக்கு, பொதுவுடமை இயக்கம் என்றாலே தெரித்து ஓடியவர்கள் மத்தியில் ராதா, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தை தாங்கிய திரையைத் தொங்கவிட்டு நாடகங்களை நடத்தி வந்தார். அப்போது பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்துவந்த காலகட்டம். பெரியார் என்ன செய்கிறாரோ அதையே தானும் பின்பற்றுவார் ராதா.
அதேபோல ராதாவுக்கும் பொதுவுடமைத் தலைவர் ஜீவாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
அது ஜீவா தலைமறைவாக இருந்த சமயம். ஜீவாவுக்கு ராதாதான் அடைக்கலம் கொடுத்துவந்தார். அப்போது, ஜீவா ராதாவிடம் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்வாராம். அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் தன்னிடம் கொடுக்கும்படி சொல்வாராம். ராதாவும் எந்தத் தயக்கமும் இல்லாது அதைச் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு நாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கிய பின், ராதா ஜீவாவிடம் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்றாராம்.
ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்றாராம்.
அப்போது ராதா, தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்தாராம்.
‘கலை கலைக்காக; கலை மக்களுக்காக’ என்று இரண்டு கோஷங்கள் எழுந்தபோது, கலை மக்களுக்காகத்தான் என்று தன் நாடகங்களின் வழி உரக்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா.
அதேபோல், ‘‘நாடகம், சினிமா போன்றவை சிறந்த பிரச்சார சாதனங்கள். எனவே, என் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அவற்றின் வாயிலாக வெளியிட்டு வருகிறேன்’’ என்று சொன்னார் ராதா.
அவர், தரகு கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார். காசுக்காக கலையை அடகு வைப்பதை ஒருபோதும் அவர் செய்தது கிடையாது.
ராதாவின் நாடகங்களுக்கு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சொல்வதை அவர் அதிகரித்தார். இதனால், நாடகம் நடக்கவிடாமல் சில விஷமிகள் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் ராதா மேடைக்கு வருவார்.
‘‘யார் கலாட்டா செய்றது..? நாடகம் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு போய்விடுங்கள். அனாவசியமாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள்.
உங்கள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் உயிருள்ள வரை நான் என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்’’ என்று முழங்குவார்.
ராதா கொள்கையை விற்றவரல்லர் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம். ராதா நடத்திய பன்னிரெண்டு நாடகங்களிலேயே ‘ரத்தக் கண்ணீர்’தான் உலக நாடக வரலாற்றில் 60 ஆண்டுகாலமாக (இன்றும் ராதவின் மகன் ராதாரவி, பேரன் வாசு விக்ரம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது) நடந்துவருகிறது. அது நாடகங்களிலேயே உச்சத்தின் உச்சம். ராதாவாலேயே ‘ரத்தக் கண்ணீர்’ 3021 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. அதேபோல், ‘தூக்குமேடை’ 800 நாட்களும், ‘லட்சுமி காந்தன்’ 760 நாட்களும், ‘போர்வாள்’ 410 நாட்களும், ‘இழந்த காதல்’ 190 நாட்களும், ‘ராமாயணம்’ 170 நாட்களும், ‘தசாவதாரம்’ 110 நாட்களும் அரங்கேறி சாதனை படைத்தன.
‘தூக்கு மேடை’ நாடகம் மு.கருணாநிதியால் எழுதப்பட்டது. ‘போர்வாள்’ சிந்தனைச் சிற்பி சிற்றரசுவால் உருவாக்கப்பட்ட நாடகமாகும்.
ராதாவின் நாடகங்களில் கலகக்குரல் ஓங்கி ஒலித்ததால் ஏறக்குறைய அவரது பல நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கெல்லாம் ராதா அஞ்சியதே இல்லை. ‘ரத்தக்கண்ணீர்’ தடை செய்யப்பட்டபோது ‘மேல் நாட்டுப் படிப்பு’ என்ற பெயரில் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். ‘தூக்கு மேடை’ தடை செய்யப்பட்டபோது, ‘பேப்பர் நியூஸ்’, ‘காதல் பலி’, ‘நல்ல முடிவு’ என பல பெயர்களைக் கொண்டு அந்த நாடகம் அரங்கேறியது. ‘போர்வாள்’ நாடகம் ‘சர்வாதிகாரி’, ‘நண்பன்’, ‘சுந்தர லீலா’, ‘மகாத்மா தொண்டன்’ போன்ற பெயர்களில் அரங்கேற்றப்பட்டது.
எதிர்ப்புகள்தான் ராதாவை உச்சத்தை நோக்கி நகர வைத்தன. திராவிடர் கழக மாநாடு என்றால் கட்சியின் கொடியேந்தி வெள்ளைக் குதிரையில் மாநாட்டு திடல் வரைக்கும் ராதா கம்பீரமாக பவனி வருவாராம். ஒரு முறை அப்படி அவர் குதிரை மீது வந்தபோது, விஷமிகள் அவரை தாக்கினார்கள். அடிமொத்தம் வாங்கிக்கொண்ட ராதா அந்த விஷமிகளைப் பார்த்து, ‘‘போதுமா, திருப்தியா..? இப்போ போரியா..?’’ என்று கேட்டாராம்.
சீர்திருத்தத்தைப் பற்றி பேசவே பயந்த அன்றைய நிலையில் ‘விதவையின் கண்ணீர்’ என்ற சீர்திருத்த நாடகத்தை நடத்தினார் ராதா. பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது அந்த நாடகம்.
‘‘அது சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதமானது. அதை நடத்தினால் சமூகத்தின் அமைதி கெட்டுவிடும்’’ என்று பிற்போக்குவாதிகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது அந்த மன்றத்தின் நீதிபதி கணேசய்யர். ஆசாரமாக வாழ்ந்து வந்த நீதிபதி, நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
‘இதோடு ராதாவின் ஆட்டம் அவ்வளவுதான்’ என்று பேச்சுகள் எழுந்தன. நீதிபதி நாடகத்தை தடை செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். நாடகத்தை முழுவதுமாக பார்த்த நீதிபதி மேடை நோக்கி விரைந்தார்... ஒரு நிமிடம் ராதாவைப் பார்த்தார்; கை நீட்டினார்... ராதாவும் கை கொடுத்தார்... குலுக்கினார் நீதிபதி. அவருக்கு நாடகம் பிடித்துவிட்டது.
ராதாவைப் பார்த்துச் சொன்னார், ‘‘சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும். இந்த மாதிரி நாடகம் இங்கே மட்டும் நடந்தால் போதாது; இந்தியா முழுக்க நடக்கணும். நீங்களும் உங்கள் நாடகமும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார். வழக்கு தொடுத்தவர்கள் பேச முடியாமல் போயினர். ராதா எதிர் கருத்து உடையவர்களையும் தனது ஆழமான கருத்தால் கவர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.
பெரியார், ஜீவாவைப் போல் ராதாவுக்கு காமராஜர் மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த அன்பு உண்டு. கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகம் பெரிய வெற்றிபெற்ற போது, ராதாவின் பெயர் பெரும் புகழ் அடைந்தது. கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராதா, அந்தப் புகழுக்குக் காரணமான கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அதுவே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும்போது, ‘‘நாட்டில் எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்கிறார்கள். அவர்கள் மனம் திருப்திப்படும்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்டவர் அல்ல. தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின்னால் வரவேண்டும். தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதே இல்லை’’ என்று பேசினார்.
தனது 85வது பிறந்தநாள் விழாவில் பேசிய அதே பெரியார், ‘‘அறிவு அற்றவர்கள் புராணக்கதைகளில் நடித்துக்கொண்டு அசிங்கத்தையே சொல்லி வருகிறார்கள். சிரிப்பின் மூலம் சிந்திக்கும்படி சட்டென்று சொல்லிவிடுகிறார் ராதா. மற்ற மடையர்கள் சொல்லவில்லை. ராதாதான் தைரியமாகச் சொல்கிறார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வண்ணான் துறையிலேயே படுத்துக்கொண்டு அங்கேயே வண்ணான் துணிகளை வாங்கி நாடகம் நடத்தினார். ரயில் கட்டணம்கூட இல்லாமல் திண்டாடினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு கொள்கையை மறக்காமல் எடுத்துக்கூறி திருப்பத்தை உண்டாக்கினார்.
சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்துவிடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே, மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க. ராதாதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்’’ என்று சமூக சிந்தனையற்றவர்களைப் பார்த்து கடிந்துகொண்டார்.
ராதா, பெரியார் பேச்சை தட்டாதவர். அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார் என்றால் அதை செய்வார். காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கிறார் என்று தெரிந்தால் அவரும் காங்கிரஸை ஆதரிப்பார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா 1952-ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் ‘போர்வாள்’ என்ற நாடகத்தை நடத்தினார். அப்போதுதான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தைச் சூட்டினார்.
சினிமாவில் நடித்து புகழடைந்துவந்த காலகட்டத்தில்கூட நடிகவேள் நாடகத்தை மறந்துவிடவில்லை. அவருக்கு சினிமா உடல் என்றால், நாடகம்தான் உயிர். உயிர் இன்றி உடல் அசையாது என்பதை உணர்ந்திருந்தார் ராதா.
சிறந்த நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முறை ராதா சொன்ன பதில், ‘‘நேராக சினிமாவில் சேர்ந்த எவனும் நடிகனாக மாட்டான். சிறந்த நடிகன் சினிமாவிலிருந்து வெளிவர முடியாது. ஒரு ரீடேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நாடகத்தில் நடித்து எவன் மக்களை தன்வசப்படுத்துகிறானோ அவனே சிறந்த நடிகன்.
அதல்லாமல் ஒருவனுக்கு வசனத்தைக் கொடுத்து அதே காட்சியை இரண்டாயிரம் மூவாயிரம் அடிகள் வரை பல கோணங்களில் எடுத்து எந்தக் கோணத்தில் எடுத்தக் காட்சி நான்றாக இருக்கிறது என்று பார்த்து சேர்க்கிறார்களோ அவனெல்லாம் சிறந்த நடிகனாக மாட்டான்’’ என்று நடிகனுக்கான வரையறையைச் தெளிவாகச் சொன்னார். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல், அதை தானே செயல்படுத்தவும் செய்தார். அதுதான் ராதா.
ராதாவின் நடிப்பு ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர்பாங்ஸுக்கு இணையாக இருந்ததால் அவர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர்களில் ‘இண்டியன் டக்ளஸ்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
‘ரத்தக்கண்ணீர்’ படமாக்கப்பட்டபோது இதற்குமுன் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒருலட்ச ரூபாயைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. பண விஷயத்தில் அவர் கரார் பேர்வழி. சினிமாவை அவர், ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார். அதனால்தான் எந்தப் படமானாலும், தனது கேரக்டர் என்ன என்றுகூட கேட்காமல் சம்பளம் என்ன என்றுதான் கேட்பார். ஆனால், நாடக உலகில் அவர் அப்படியில்லை.
1978-ல் ‘தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்த கலைஞர், ராதாவின் நடிப்பைப் பற்றி, ‘‘நடிப்பை, தலைமுடியின் ஆட்டத்திலேயே காட்டிய நடிகர் ஒருவர் இந்த நாட்டில் உண்டென்றால் அது ராதாதான்’’ என்று பேசினார்.
அத்தகைய நடிப்பின் உச்சத்தை தொட்ட ராதாவை இந்திய அரசு பெரிய அளவில் கௌரவிக்கவில்லை. தமிழக அரசு ‘கலைசிகாமணி’ என்ற விருதை மட்டும் வழங்கியது. அது இப்போது ‘கலைமாமணி’ விருதாக பெயர் மாற்றப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனே தான் ராதாவைப் பார்த்துதான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கூறியிருக்கிறார்.
நடிப்பின் இமாலயமாக திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரோடு 40 ஆண்டுகாலம் இருந்த ராதா, அவரது 101-வது பிறந்தநாளான 1979 செப்டம்பர் 17 அன்று தனது நடிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டது.

- சா.இலாகுபாரதி

‘கவிஞர் அறிவுமதி இயக்கும் படத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான் பாடல்கள்’

Posted by Gunalan Lavanyan 1:45 PM, under | 4 comments

தாய்க் கோழியின் கால்கள் போகிற திசையெல்லாம் ஓடித் திரியும் கோழிக்குஞ்சு போல 80-களின் தொடக்கத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமானின் விரல் பிடித்து நடந்தவர் கவிஞர் அறிவுமதி. இருவருக்கும் இடையில் தாய்க்கும் சேய்க்குமான உறவு இருந்தாலும், ஒரு குருவிடம் சிஷ்யன் கொண்டிருக்கிற பயத்தையும் பக்தியையும் ஒன்றாகக் கலந்து கவிக்கோ மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தார் அறிவுமதி. இந்த இரண்டு கவிமனசுகளையும் இணைக்கும் உணர்வு இழையைப் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு நெகிழப் பேசுகிறார்கள் இருவரும்.
முதலில் கவிக்கோ தொண்டையை கனைத்தபடி, கண்கள் விரித்துப் பேசத் தொடங்கினார்...

“அது 1982. அதிகமாக நான் கவியரங்கங்கள் நடத்தி வந்த காலம். அந்தச் சமயத்தில்தான் நானும் தொழிற்சங்கத் தலைவர் சு.வெங்கடேசனும் இணைந்து பாரதி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவுக்கு கலைஞர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முந்தான் அவர் திருச்செந்தூர் நடைபயணம் போய்விட்டு களைப்போடும், கால்களில் கொப்பளத்தோடும் வந்திருந்தார். அதைப் பார்த்தபிறகு அதற்குமேல் அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் கவியரங்கத்துக்கு சிற்பி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் அறிவுமதியோடு இன்னும் சிலர் கவிதை வாசித்தனர். வாசித்தவர்களிலேயே அறிவுமதியின் கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. விழா முடிந்து அறிவுமதியை சந்தித்து, ‘இனி நான் நடத்துகிற எல்லா கவியரங்கங்களிலும் நீ தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டு போய்விட்டேன்.

சில நாட்கள் ஓடின. வாணியம்பாடியில் நான் நடத்தி வந்த ஹைக்கூ கவிதைகளுக்கான ‘ஏதேன்’ இலக்கிய அமைப்பில் கவிதை வாசித்தார். அதில் நான் சில திருத்தங்கள் செய்தேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே தொடர்ந்து நடக்கிற ஹைக்கூ வகுப்பில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதேபோல நான் நடத்துகிற கவியரங்கங்களிலும் தவறாமல் வந்து கலந்துகொள்வார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்துவிடுவார். சில சமயம் குடும்பத்தோடு வருவார்; வருகிறார் என்றால் சும்மா வரமாட்டார். கவிதை பற்றி ஏதாவது யோசனையோடு வருவார். சந்தேகங்களை அடுக்குவார். ஒவ்வொன்றாய் நான் உடைத்து, எளிதாக தெளிவுபடுத்துவேன். இந்த இடத்தில் ஒன்று சொல்லிவிடுகிறேன்... அதாவது எதைச் சொன்னாலும் கற்பூரத்தைப் போல பிடித்துக்கொள்வார்.

பொதுவாக இரவு நேரத்தில்தான் எல்லோரும் தூங்குவார்கள். ஆனால், அவர் வந்துவிட்டால் விடியவிடிய என்னிடம் கவிதை கேட்பார். நான் ஜப்பானிய ஹைக்கூக்களையும், உருது கஜல்களையும், பாரசீகக் கவிதைகளையும் அந்த நட்ட நடு நிசியில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருப்பேன். சில மார்கழி இரவுகளில் கவிதையே எங்களுக்குப் போர்வையாகிவிடும். மதி தொடர்ந்து எழுதுவார். அவர் கவிதைகளில் இருந்த கவித்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் அவர் கவிதைகளின் ரசிகனாகிவிட்டேன்.

ஒருமுறை என்னிடம் இருந்த ஜப்பானிய ஹைக்கூ புத்தகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் என்னோடு படித்த தி.லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். அப்போது அவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அவரும் அதை ஆர்வத்தோடு வாங்கி மொழிபெயர்த்துக் கொடுத்தார். அந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் அறிவுமதியிடம் படிக்கச் சொல்லி கொடுத்தேன். அவரும் கவிதைகளைப் படித்தார். அந்தக் கவிதைகளின் ஈடுபாட்டால் ஹைக்கூ கவிதைகள் எழுதி வந்து என்னிடம் காண்பிக்கவும் செய்தார்.

கவிதைகளைப் பார்த்து மகிழ்ந்துபோய், ‘மதி! இன்னும் சில கவிதைகளை எழுது, ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பாக போட்டுவிடலாம். அப்படி அந்த தொகுப்பு வரும்போது அது உனக்குப் பெருமை சேர்க்கும். இதுவரை தமிழில் யாருமே செய்யாத இந்த வேலையை நீ செய். தமிழில் முதன் முறையாக ஹைக்கூ கவிதைகள் எழுதிய பெருமை உன்னைச் சேரட்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இவரோ ஆர்வத்தில், தான் படித்தது மட்டுமின்றி மற்றவர்களும் பயன் பெறட்டுமே என்ற நல்ல நோக்கில் வேறொரு கவிஞரிடம் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புத்திசாலிக் கவிஞரோ, லாட்ஜில் ரூம் போட்டு அந்தக் கவிதைகளிலிருந்து தான் பெற்ற தாக்கத்தால் ஒரு ஹைக்கூ தொகுப்பையே எழுதிவிட்டார். எழுதியது மட்டுமல்லாமல், ‘தமிழில் முதன் முறையாக ஒரு ஹைக்கூ தொகுப்பு’ என்று அச்சடித்து, அறிவுமதி வெளியிடுவதற்கு முன்கூட்டியே அதை வெளியிட்டுவிட்டார். நாகரிகம் கருதி அந்தக் கவிஞர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஒருமுறை தி.நகரில் அலுவலகம் போட்டு, படம் இயக்கப் போவதாக அறிவுமதி சொன்னார். அதில் நான் பாடல் எழுத வேண்டும் என்றும் கேட்டார். அந்த நேரத்தில் படத்தின் தலைப்பு, இசையமைப்பாளரின் பெயரோடு என் பெயரையும் சேர்த்து போஸ்டரில் அடித்திருந்தார். அதில் பலருக்கு ஆச்சர்யம்! ‘எப்படி அப்துல்ரகுமானை சம்மதிக்க வைத்தாய். இதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ள மாட்டாரே’ என்று ஆச்சர்யப்பட்டவர்கள் கேட்டனர். அவர்கள் சொன்னதைப் போலவே நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஏனோ படமும் நின்றுபோனது.

அறிவுமதி நிறைய இடத்தில் என்னை குருவாக சொல்லுவார். ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அவர்தான் எனக்கு குரு. ‘ரொம்பவும் நல்லவனாக இருந்தால் வாழ முடியாது’ என்பதை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்” என்று நிறுத்தியவர் சிஷ்யனின் தோளில் கை போட்டு, “தம்பி பேசு” என்று தட்டிக் கொடுத்தார்.

அன்பின் பெருங்கரங்கள் தன்னைத் தழுவியதும் நெகிழ்ந்துபோன அறிவுமதி மெல்லிய குரல் எடுத்துப் பேசத் தொடங்கினார்.




“என்னை அய்யாவிடம் அறிமுகப்படுத்தியது அண்ணன் மீராதான். மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் நான் படித்த கவியரங்கக் கவிதையைக் கேட்டுவிட்டு அங்கிருந்த மீரா அண்ணன் ஏராளமான பார்வையாளர்களையும் கடந்து வந்து என் கைகளைப் பிடித்து குலுக்கினார். பிறகு, அய்யாவுக்குத் தொலைபேசி செய்து, ‘மாநாட்டில் அறிவுமதி என்கிற பையன் சிறப்பாக கவிதை வாசித்தான். நீங்கள் அவனை வாணியம்பாடிக்கு அழைத்து உங்கள் கவியரங்கங்களில் பயன்படுத்தினால், சிறப்பாக வருவான்’ ” என்று உரிமைமையோடு கூறினார். இருவரும் தியாகராயர் கல்லூரியில் வகுப்புத் தோழர்களாக இருந்ததும் அந்த உரிமைக்குக் காரணம்.

இதை மனதில் வைத்திருந்த அய்யா, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பாக நடைபெறும் ‘கவிராத்திரி’க்கு என்னையும் வந்து பங்குபெறுமாறு அன்போடு அழைத்தார். அதில் எனது கவிதைகளையும் கவிதை வாசிப்பு முறையையும் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ந்தார்.

அதேபோல, சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரில் உள்ள பஞ்சாப் நிறுவன பள்ளியொன்றில் ஆண்டுக்கு ஒருமுறை ‘முஷைரா’ என்கிற ‘கவிராத்திரி’ விடியவிடிய நடக்கும். அதற்கு என்னை அழைத்துச் சென்று பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு, இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்த கவிஞர்களின் கவிதைகளை ‘அடடே...’ போட்டு வியந்து ரசித்தபடியே எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் அழகே அழகு. அந்த ரசனைக்காரர் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்ன ஒரு ரசமான கவிதை இப்பவும் நெஞ்சில் அப்படியே ஒட்டிக்கிடக்கிறது...
‘அவளது கண்களின்
ஆழத்துக்குள்
எட்டிப்
பாருங்கள்...
சமுத்திரத்தின் ஆழத்துக்குள்
ஒரு சமுத்திரம்
கிடைக்கலாம்!’
இப்படி இனிக்க இனிக்க அவர் சொல்லச் சொல்ல, கை வலிக்க வலிக்க நான் எழுதிக்கொண்ட பக்கங்கள் ஏராளம்.

பல சிரமங்களுக்கு இடையில் உதவி இயக்குநராக திரைத்துறையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒருநாள் எனக்குத் தந்தி வந்தது. அதில் ‘உடனே வாணியம்பாடிக்கு புறப்பட்டு வரவும்’ என்று மட்டும் அய்யா எழுதியிருந்தார். நான் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடினேன். என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஒரு தோழனைப் போல் தோள்களை அணைத்துச் சொன்னார்... ‘உனக்கு திரைப்படத் துறை சரிப்பட்டு வராது. அதனால், ஆம்பூர் இசுலாமியா கல்லூரியில் நாளை முதல் நீ தமிழ்ப் பேராசிரியராக பணியாற்று’ என்று கட்டளையிட்டார். அன்று மாலையே என்னை வாணியம்பாடி நகருக்கு அழைத்துச் சென்று, ஒரு மகள் தனிக்குடித்தனம் போவதற்கு ஒரு தாய் என்னென்ன செய்வாளோ அவை அத்தனையும் அய்யா எனக்குச் செய்தார். பாய், தலையணை, பானை, துடைப்பம் என்று சகலத்தையும் விலைபேசி வாங்கி, அதை என் கையில் கொடுத்து, பின்னிருக்கையில் பிடித்துக்கொண்டு உட்காரச் சொல்லிவிட்டு அவரது செல்ல டி.வி.எஸ்.50-ல் அழைத்துச் சென்று ஓர் அறை எடுத்து என்னை தங்க வைத்த நினைவு இப்பவும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.

எந்த ஊர், எந்தச் சாதி, எந்த மதம் என்று எதுவுமே பார்க்காமல் என்னிடமிருந்த தமிழை மட்டுமே பார்த்து, ‘முன்னா... முன்னி...’ என்று அவர் செல்லமாக அழைக்கிற இரண்டு பிள்ளைகளோடு என்னையும் ஒரு மூன்றாவது பிள்ளையாக ஏற்று வளர்த்த அந்த உயர்ந்த மனது அய்யாவுக்கே உரியது.

அய்யாவுக்குத் திரைத் துறையில் படைப்பாளிகளை தரம் தாழ்த்தி நடத்துவதைத்தான் பிடிக்காதே ஒழிய, மற்றபடி திரைப்படங்களில் வருகிற பாடல்களில் அவர் கேட்ட நல்ல வரியைப் பற்றி என்னோடு பேசுவார். ‘மதி இந்த வரியை யார் எழுதியது. இந்தப் பாட்டு யாருடையது’ என்று ஆர்வத்தோடு கேட்கும்போது, மிகப் பெரிய கவிஞன், ‘ஒரு திரைப்பாடலில் ஒளிந்துகொண்டிருக்கிற நல்ல வரிகளை எப்படித்தான் தேடிப் பிடிக்கிறாரோ’ என்று வியந்துகொள்வேன்.

அவர் கற்பனைகளில் பயணம் செய்யும் கலாரசிகன் மட்டுமல்ல, களத்திலும் தன்னை நிரூபிக்கும் நெஞ்சுறுதிக்காரர்.தமிழீழப் பிரச்னை தொடங்கிய காலத்தில் மூன்றே நாட்களில், வாணியம்பாடியைச் சுற்றிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து, ஈழக் கவிஞர் காசி ஆனந்தனை அழைத்து, அவரை மேடையில் பேசச் செய்து, ஈழத் தமிழர்களுக்கு அந்தத் தொகையை நன்கொடையாக வழங்கினார். கடல் கடந்து வாழும் தமிழர்கள் மீதும் அவர் வைத்திருக்கிற அபிமானத்தை அப்போது என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட என் குருநாதர், என் தாய், என் தோழர், என் கவிக்கோவுக்கு ‘கண்ணதாசன்’ இதழைப்போல ‘அப்துல்ரகுமான்’ என்ற இலக்கிய இதழ் நடத்த விரும்பி தொடங்கினேன். பிறகு அது ‘கவிக்கோ’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அவரது உடல்நிலை காரணமாக அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.

அவர் என்னை வளர்த்தாரே தவிர, என் கொள்கைகளைக் கேள்வி கேட்கவில்லை. என் பயணத்துக்கு வழி காட்டினாரே தவிர, என் பாதையை மாற்றவில்லை. இதுபற்றி அவரே ஒருமுறை கூறியிருந்தார்...
‘அறிவுமதி
என் வளர்ப்பு.
ஆனால்,
என் வார்ப்பு
அல்ல!’
அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை”
ஆமாம். அவரவர் சுயம் அவருக்கன்றோ!

சந்திப்பு: சா.இலாகுபாரதி


photo courtesy: vikatan deepavali malar 2009

14 January 2010

சமுதாயத்துக்கு உதவி செய்யுங்கள்... - சுதா ரகுநாதன் பேட்டி

Posted by Gunalan Lavanyan 1:50 AM, under | No comments

கர்நாடக இசை உலகில் சுதா ரகுநாதனுக்கு என்று தனியிடம் உண்டு. இவர் குரலுக்கு உருகாத இசை ரசிகர்களே இல்லை. கார்மேகம் சூழ்ந்து ஜில்லென்று மழை பெய்தால் உடல் எப்படி குளிருமோ, அப்படி இவர் பாடக் கேட்டால் காதும் குளிரும். டிசம்பர் சீஸன் வந்தால், இவர் பாட்டு இல்லாமல் சீஸன் களைகட்டாது. ‘திரை இசையிலும், கர்நாடக இசை உலகிலும் கொடிகட்டிப் பறந்த எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையாக இருக்கிறது’ என்று சொல்லும் சுதா ரகுநாதனை பேட்டிக்காக அபிராமபுரத்தில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம். சுதாவின் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட விருதுகள் நம்மை வரவேற்கின்றன. விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது வீட்டின் வரவேற்பறை. ‘கிட்டத்தட்ட இசைக்காகக் கொடுக்கப்படும் எல்லா விருதுகளையும் வாங்கிவிட்டீர்களோ’ என்று சந்தேகத்தோடு கேட்டால் ‘கொல்’லென்று இசையாகவே சிரிக்கிறார். டெல்லியில் ‘இந்திர பிரஸ்தா’ இசைப் பண்டிகைக்கு போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவரிடம், பயணக்களைப்பு என்பதே இல்லை.

இந்திர பிரஸ்தாவைப் பற்றிச் சொல்லுங்கள்...
டெல்லி மாநில அரசும், சாகித்திய கலா பரிஷத்தும் இணைஞ்சி நடத்துறதுதான் இந்திர பிரஸ்தா. இது இசைக்கான முழு திருவிழா. இந்தியாவின் முக்கியமான மொழிகளின் இசைச் சங்கமம். இந்திய அளவுல புகழ்பெற்ற நிறைய கலைஞர்கள் வந்து பாடுவாங்க. இந்த வருஷம் நான்தான் தமிழகத்தோட பிரதிநிதி. ஒருபக்கம் இந்துஸ்தானி, மறுபக்கம் கர்நாடிக்’ன்னு இசைத் திருவிழா ரொம்ப ஜோர்” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த கேள்விக்கு முன்னோட்டமாக எங்கிருந்தோ அனல் மேலே பனித்துளி’ பாடல் வந்து காதில் விழுந்தது.

வாரணம் ஆயிரம்’ படத்தில், அனல் மேலே பனித்துளி’ பாடல் பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
‘‘இந்தப் படத்துக்கு முன்புவரைக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணிக்கு பாம்பே ஜெயஸ்ரீதான் ஸ்லோ மெலடி பாடல்களைப் பாடிட்டு இருந்தாங்க. ஏனோ, இந்தப் படத்துல ஒரு வித்தியாசத்தை அவங்க எதிர்பார்த்தாங்க. ரெக்கார்டிங் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்துச்சு. மிட் நைட்லதான் ரெக்கார்டிங். பாடல் வரிகள் பார்த்தேன், அசத்தல். கவிதையா தாமரை எழுதியிருந்தாங்க. தூக்கம் போயேபோச்சு! ஹாரிஸ் சொன்னபடி பாடினேன். புதிய காம்பினேஷன் கிளிக்!”
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவைதானே இவள் இனி’
- சுதாரகுநாதனின் குரலில், மனசு மழையில் நனைகிறது. வெளியேயும் மழை கொட்டத்தொடங்கியதுதான் ஆச்சரியம்! மழை வந்ததால் இந்தப் பாடல் வந்ததா? இந்தப் பாடல் பாடியதால் மழை வந்ததா?

அனல் மேலே பனித்துளி’க்குப் பிறகு சினிமாவுக்கு நிறைய பாடுகிறீர்களா?
‘‘வாய்ப்பு நிறைய வருது. ஆனா, கச்சேரி இருப்பதால் ஒப்புக்கொள்ள முடியலை. இருந்தும் இடையிடையே மூணு பாட்டு பாடிட்டேன். சூர்யா நடிக்கிற ஆதவன்’ படத்தில ஒரு பாட்டு பாடியிருக்கேன்.” என்கிற சுதா இதுவரைக்கும் சினிமாவுக்காக டஸன் பாடல்கள்தான் பாடியிருக்கிறாராம்!

டிசம்பர் சீஸன் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘ஸ்கூல், காலேஜ் டேஸ்ல ஸ்டூடன்ட்ஸ் பரீட்சைக்கு எப்படி தயாராவாங்களோ அப்படிதான். பரீட்சைக்கு பத்துநாள் முன்பாகத்தானே மாணவர்கள் படிக்கிறாங்க. நானும் அப்படித்தான். சீஸனுக்கு பத்துநாள் முன்புதான் பிரிபரேஷன்ல உட்காருவேன்.
டிசம்பர் வருதுன்னாலே எனக்கு கொஞ்சம் ஃபியர்தான். ரசிகர்களை திருப்திப்படுத்தணும். சபாக்காரர்களுக்கு ஏத்தாமாதிரி பாடணும். நான் பிரிப்பேர் பண்ணிவெச்சிருக்கிற பாடல்களைப் பாடணும். புதுசா சில ராகங்கள், கீர்த்தனைகள். இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். இதை எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சி கச்சேரியைக் கொண்டுபோகணும்.
முன்னாடியெல்லாம் டிசம்பர்ல இருபத்தஞ்சு கச்சேரிகள் வரை பாடிட்டிருந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி பதினஞ்சிலிருந்து இருபது கச்சேரிகள் வரை பாடுறேன். டிசம்பர்’ன்னாலே 180 பாடல்களாவது தயார் செய்யவேண்டியிருக்கு. தவிர, வருஷந்தோரும் சீஸனுக்கு என்னோட ஆல்பம் ரிலீஸ் பண்ணுவேன். அதுக்காகவும் பாட்டுகள் ரெடிபண்ணணும்.
இடையில விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி மாதிரி நிறை ஃபெஸ்டிவல்ஸ். அதுக்கும் நேரம் ஒதுக்கி ரெடியாகணும்; கச்சேரிகள் போகணும். தியாகராஜர், சியாமாசாஸ்திரி போன்ற இசை பிரம்மாக்கள் கடலளவு பாடல்கள் எழுதியிருக்காங்க. பாரதி, பாரதிதாசனின் தமிழிசைப் பாடல்களும் நிறைய இருக்கு. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும். இப்படி சீஸனுக்கு முன்னும் பின்னும் நிறை மெனக்கெடல் தேவையிருக்கு. அப்படி மெனக்கெடாட்டா கச்சேரி களைக்கட்டாது” என்கிற சுதா ரகுநாதனின் கச்சேரியில், ராகம்தான் ப்ளஸ். அவர் பாடும் பாடல்களில் ராகத்துக்குத்தான் மெயின் ரோல்.

உங்கள் கச்சேரியில் என்ன விசேஷம்?
‘‘என் பாட்டுதான். ரசிகர்களை எழுந்திரிக்காமல் உட்கார வைக்கணும்னா பாடுற ஒவ்வொரு பாட்டும் கலகலன்னு இருக்கணும். அந்தமாதிரி பாடல்களைத்தான் செலக்ட்பண்ணுவேன். என் கச்சேரிக்கு சோகமான மனநிலையில் ஃபேன்ஸ் வந்தாலும் போகும்போது மனம் நிறைய மகிழ்ச்சியோடுதான் போவாங்க. காரணம், என் பாடல்களில் ராகத்துக்கும் தாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கச்சேரியை கலகலன்னு கொண்டுபோவேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. நான் ஆலாபனைக்கு நேரம் அதிகம் ஒதுக்குறதில்லை. ஸ்ட்ரெயிட்டா ராகத்துக்கே போயிடுவதுதான் என் பாணி. அதுதான் விசேஷம்.”

எந்த ராகங்களை நீங்கள் அதிகம் பாடுகிறீர்கள்?
‘‘72 மேளகர்த்தா ராகத்துல பிரதிமத்திம ராகம் 36. சுத்தமத்திம ராகம் 36. நான் அதிகம் பாடுவது கல்யாணி, தர்மவதி, ஷண்முகப்ரியா மாதிரியான பிரதிமத்திம ராகங்கள்தான்.
ஒரு கூடுதல் தகவல்: நிறைய சினிமாப் பாடல்கள் பிரதிமத்திம ராகங்கள்லதான் பாடுறாங்க” என்கிற சுதா ரகுநாதன் தமிழ் உட்பட தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி என்று கிட்டத்தட்ட 10 பத்து மொழிகளில் பாடுவார்.

பாட்டுக்கு எது முக்கியமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
‘‘எமோஷன். ப்பாவம்தான். ப்பாவம் இல்லாம பாடினா உப்புச்சப்பு இல்லாத சாப்பாடுமாதிரிதான் பாட்டும். மேகத் திரள்கள் ஒன்றுகூடி மழை பொழிகிறமாதிரி எமோஷன் இருக்கணும். அப்படி பாடினா வராத மழையும் வரும்” வெளியில் மழை இன்னும் ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது.

உங்கள் குருவைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘இந்த இசைத் துறையில் நான் இவ்வளவு தூரம் வளர்ந்தது, புகழ் பெற்ற பல விருதுகள் பெற்றதெல்லாம் என் குரு இல்லாம நடந்திருக்காது. இசைத் தவிர, வாழ்க்கைக்கு எது நல்லது? எது தேவையற்றது’ன்னு எனக்கு சொல்லி கொடுத்ததும் என் குரு எம்.எல்.வி’தான். எனக்கு கிடைத்த புகழையும் விருதுகளையும் அவங்களுக்கு காணிக்கையாக்குறேன்.” அடக்கம் தெறிக்கப் பேசும் சுதா, இசைக்கு சேவை செய்யும்நேரத்தில், கொஞ்சம் சமுதாயத்துக்கும் சேவை பண்ணவேண்டும்’ என்கிறார். சமூகசேவைக்காகவே சமுதாய அறக்கட்டளை’ என்ற பெயரில் டிரெஸ்ட் நடத்தி வருகிறார்.

சமுதாய அறக்கட்டளைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘1999-ல் அறக்கட்டளை தொடங்கினேன். இப்போ பத்தாண்டு ஆகியிருக்கு. பல லட்சங்களை இந்த டிரெஸ்ட் மூலமா சமுதாயத்துக்கு வழங்கியிருக்கோம். அறக்கட்டளை மூலமா செய்ற உதவிகளுக்கு என்னோட நண்பர்கள்தான் அதிகம் உதவறாங்க. அவங்களோட உதவியை முக்கியமா குறிப்பிடணும். குழைந்தைகளுக்காகத்தான் நிறைய செய்றோம். மருத்துவ உதவி. ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உதவி, கல்வி உதவின்னு குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் தர்றோம். அவங்க நல்லா இருந்தாத்தானே நாடு நல்லா இருக்கும்.
கொளத்தூர்ல இருக்குற ‘அருணோதயம்’ ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துல ஒரு ரூம் கட்றதுக்காக கடந்த ஆண்டு ஐந்து லட்சம் வழங்கினோம். பெங்களூர்ல ‘உன்னத்தி’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அங்க வறுமையால பாதிக்கப்பட்டவங்க, படிப்பறிவு இல்லாதவங்க, ஏழைக் குழந்தைகள்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு உணவுக்கே மூவாயிரம் ரூபாய் செலவாகும். நாங்க அஞ்சு நாள் உணவு செலவுக்கு எங்களால் முடிஞ்ச உதவியை இந்த வருஷம் செஞ்சோம். கடந்த வருஷம் ராமச்சந்திரா மருத்துவமனை மூலமா 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய 50 லட்சம் தந்தோம். அதுல என் சொந்த பணம் 25 லட்சம். அந்த நிகழ்ச்சியில எஸ்.எம்.கிருஷ்ணா வந்து கலந்துகிட்டார். இதுவரைக்கும் 75 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சிருக்கு. இன்னும் பல மைல் தூரம் போகவேண்டியிருக்கு. இதெல்லாம் மக்களுக்கு தெரியணும்னு சொல்லலே. எல்லாரும் தங்களால முடிஞ்ச உதவியை சமுதாயத்துக்கு செய்யணும்னுதான் சொல்றேன்.” வெளியே மழை விட்டிருந்தது. சமுதாய அறக்கட்டளையின் சேவை சமுதாயத்துக்கு தேவை.

சந்திப்பு: சா.இலாகுபாரதி
(2009 – விகடன் தீபாவளி மலருக்காக எடுக்கப்பட்ட பேட்டி)

13 January 2010

எனக்குப் பிடித்த கவிதை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் வைரமுத்து பேச்சு!

Posted by Gunalan Lavanyan 12:20 AM, under | No comments

செவ்வாயன்று (12.01.2010) சென்னை பிலிம் சேம்பரில் தொடங்கிய சென்னை சங்கமத்தின் 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியில் 'கவிதைக் குற்றாலம்' நூல் வெளியிடப்பட்டது. இது 2009 தமிழ்ச்சங்கமத்தில் படிக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுப்பு. நூலின் முதல் படியை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். திருமதி இராஜாத்தி அம்மையார் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக கவிஞர் இளையபாரதி வரவேற்க, நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர் முத்தமிழ் விரும்பி நன்றி கூறினார்.
விழாவில் பேசியவர்கள் சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழியை பாராட்டு மழையிலும் வாழ்த்து மழையிலும் நனைத்துவிட்டார்கள்.
நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் வைரமுத்து புத்தகத்தில் உள்ள இரண்டுமூன்று கவிதைகளை மேற்கோள் காட்டி பாராட்டியும் பொருள் குற்றம் உள்ள கவிதையைச் சுட்டிக்காட்டியும் பேசினார்.

பாராட்டிய கவிதை:

புளி இருந்த பாணை

எனக்கு நன்றாய்
நினைவிருக்கிறது.
அந்த வீட்டுக்குப்
போகும்போதெல்லாம்
ஆச்சர்யத்தோடு பார்ப்பேன்.
வரிசையாய் இருக்கும்
பெரிசாய் பானைகள்.
பழம்புளிக்கு இரண்டு.
இனிப்புக்கு ஒன்று.
உருட்டி உருட்டி,
புளி எடுத்து
ஊரே மணக்க
அந்த அம்மாள்
புளிக் குழம்பு வைத்தால்
அதற்காகவே
ஒரு தட்டுச் சோறு
அதிகம் சாப்பிடலாம்.
ரசம்
இனிப்பாய் இருந்தால்தான்
இளையவனுக்கு பிடிக்குமென்று
தனியாய்ச் செய்வாள்.
மகன்
மறு வீடு போன அன்று
கட்டிக்கொடுத்த
புளிசாதம் சாப்பிட
சம்பந்தி வீட்டாரிடையே
சண்டையே நடந்ததாம்.
புருஷன் செத்துப் போக
பிள்ளைகள் கைவிட்டுப்போக
வீசியெறிந்த
புளிச் சக்கையாய் அவள்.
உள்ளூர்க் கோயிலின்
உற்சவத்தில்
இலவசமாய் வழங்கும்
புளிசாதப் பொட்டலங்களை
நடுங்கும் கைகளோடு
அவள்
வாங்குவதைப் பார்க்கையில்
மனசுக்குள்ளொரு கேள்வி.
‘‘அந்தப் பானைகள்
இப்போது
பரண்மேல் கிடக்குமோ?''
- ஜீவி

பொருள் குற்றம் உள்ள கவிதை:

கண்ணகி

ஏ பாண்டிய மன்னா!
பிழைப்புத் தேடி மதுரை வந்தேன்
இழந்துவிட்டேன் உன்னால்
என் கணவனை.
உயிரோடு ஒருத்திக்கு
ஒப்படைத்தேன் கணவனை
கட்டின தாலியோடு கன்னி கழியாமல்.
பொருளையெல்லாம் தொலைத்துவிட்டு
பெண்டாட்டியிடம் வந்தான்;
தருதலையை ஏற்றேன் சகிப்புத்தன்மையால்
அகமும் புறமும் அவலத்தில் ஓலமிட
அடக்கினேன் உணர்வுகளை.
ஆறுதல் அவனுக்குச் சொல்லி
காற்சிலம்பை விற்றுவா
கஞ்சியாவது குடிக்கலாம் என்று
கடைவீதி அனுப்பினேன்.
செய்யாத குற்றத்துக்கு
சாக அடித்துவிட்டாய்!
மாறாத மனதோடு மாதவி வீட்டில்
மாண்டிருந்தால்
ஊருக்காக ஒருகுரல் அழுதுவிட்டு
சுகம்தரா தாலியைத்
தூக்கி எறிந்துவிட்டு
சும்மாயிருந்திருப்பேன்.
மனம் மாறி வந்தவனை
மதுரையில் பறிகொடுத்து
துடியாய்த் துடிக்கிறேன்.
என்
துயர் நெருப்பு
சுட்டெரிக்கட்டும்
உன்னையும் உன் ராஜ்ஜியத்தையும்!
- பூரணி

இந்தக் கவிதையில் வரும் 'கன்னி கழியாமல்' என்ற வரிதான் பொருள் குற்றம் என்று கவிஞர் சுட்டினார்.
கண்ணகி கன்னி கழியாமல் இல்லை. இளங்கோவடிகள் கன்னகியையும் கோவலனையும் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இருவரும் பாம்பைப் போல் பின்னிப் பிணைந்து இருந்தனர். 'நாளை விடியுமோ விடியாதோ விடிந்தால் இருப்போமோ இல்லாதிருப்போமோ என்று நினைத்து அப்படி பிணைந்திருந்தார்கள்' என்று இளங்கோவடிகள் கூறுகிறார் என்று வைரமுத்து சுட்டினார்.
இந்தமாதிரி பொருட்பிழையைத் தவிர்க்க இலக்கியத்தில் பரிட்சயம் அதிகம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்திருக்கும் கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி வழி நடத்துகின்ற சென்னை சங்கமம் ஈரோட்டுப் பாதையில் செல்கிறது" என்று கூறினார். "தமிழரின் பாரம்பரியக் கலைகள் காணாமல் போய்விடுமோ ஒழிந்துவிடுமோ என்று வேதனையில் இருந்தபோது சென்னை சங்கமம் அதை மீட்டெடுத்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். வடமொழி பண்டிதர்கள் தமிழை எப்படியெல்லாம் அழிக்கப்பார்த்தார்கள் என்றும் சுட்டிகாட்டினார். மு.வ. எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலிலிருந்து அதை மேற்கோள் காட்டினார்.

கனிமொழி பேசும்போது, தமிழ்ச்சங்கமத்தை ஒருங்கிணைக்கும் கவிஞர் இளையபாரதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பரிதி இளம்வழுதி பேசும்போது, "நான் தலைவர் கலைஞர் வழி நடப்பவன். சொன்னதைத்தான் சொல்வேன்; செய்வதைத்தான் சொல்வேன். அதனால் சுருக்கமாக என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்" என்று கூறி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அதற்குமுன், கவிஞர் கனிமொழியை தங்கை என்று அன்புகாட்டி பாராட்டினார்.
கவிஞர் கனிமொழியை எத்தனை முறைவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம், மக்கள் கலைகளை மீட்டெடுக்க இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டிருப்பதற்காகவே...
நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
பாராட்டும் வாழ்த்தும்தான் கலைஞனை தீவிரமாக செயல்பட வைக்கும்!

நொறுக்ஸ்:

  • பிலிம் சேம்பர் மைக் அடிக்கடி மக்கர் செய்துகொண்டே இருந்தது. பேசுகிறவர்களைவிட கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு அது பெரும் தொல்லையைத் தந்தது.
  • "நிகழ்ச்சியில் தமிழைப் பற்றி பேசியதைவிட கனிமொழியை பற்றி பேசியதுதான் சற்று தூக்கலாக இருந்தது" - இது ஒரு கவிஞரின் குரல். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!

10 January 2010

சென்னை சங்கமம் கோலாகலத் தொடக்கம்

Posted by Gunalan Lavanyan 7:23 PM, under | No comments

கனிமொழி மற்றும் ஜெகத்கஸ்பார் இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி 4வது ஆண்டாக சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏராளமான மக்கள் ஆதரவு கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.
அதேபோல இந்த ஆண்டும் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை சங்கம நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கூறியிருக்கிறார்.
கிராமியக் கலைகள், நிகழ்த்துக் கலைகள் என்று காணாமல் போய்க்கொண்டிருக்கும் இந்தியக் கலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியை இந்த ஆண்டும் மக்கள் அமோகமாக வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாம் ஆண்டு (2007) இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றபோது பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கனிமொழி சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால், அந்த எல்லா சவால்களையும் சந்தித்த கவிஞர் கனிமொழி இப்போது 4வது ஆண்டை நோக்கி சங்கமம் நிகழ்ச்சியைக் கொண்டுவந்திருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். மக்களுக்கு மகிழ்ச்சியையும் மக்கள் கலைகளுக்கு வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் யார் முன்வந்தாலும் மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு இந்த சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஜனவரி 11 முதல் 15 வரை ஐந்து நாட்கள் நடக்க இருக்கின்றன.
சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் மொத்தம் 17 இடங்களில் நடக்க இருக்கிறது.
நடக்கும் இடங்கள்:
1. எலியட்ஸ் கடற்கரை - பெசன்ட் நகர்
2. கண்டோன்மெந்த் பள்ளி வளாகம் - பல்லாவரம்
3. அண்ணா நகர் டவர் பூங்கா
4. கோடம்பாக்கம் மாநகராட்சி மைதானம்
5. திரு.வி.க. பூங்கா - பெரம்பூர்
6. லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு - மெரீனா கடற்கரை
7. தீவுத் திடல் அரங்கு
8. நாகேஸ்வர ராவ் பூங்கா - மயிலாப்பூர்
9. சிவன் பூங்கா - கே.கே.நகர்
10. தந்தை பெரியார் அரங்கம் - வளசரவாக்கம்
11. அசோக் நகர் பூங்கா
12. அண்ணா பூங்கா, ராயபுரம்
13. சுதந்திர தின விழா பூங்கா - வள்ளுவர் கோட்டம்
14. திரு.வி.க.பூங்கா - ஷெனாய் நகர்
15. பாலவாக்கம் பல்கலைநகர்
16. நடேசன் பூங்கா - தி.நகர்
17.திருவொற்றியூர் பூங்கா - விம்கோநகர் கார்ப்பரேசன்
மற்றும்
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பரில் சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமான 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியும் நடக்கிறது.
இங்கு முழுக்க முழுக்க எழுத்து எழுத்துசார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேறும்.
இந்த விழாக்களை சென்னை மக்கள் கண்டுகளித்து, நம் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்க வேண்டுகிறேன்!

04 November 2008

தில்லுமுல்லு... தில்லுமுல்லு...

Posted by Gunalan Lavanyan 1:59 PM, under | No comments



நீண்ட நாட்களுக்குப் பிறகு 3.11.2008 திங்களன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
தலைவர் கட்சியைத் தொடங்குவாரா..? தொடங்கினால் அதில் தமக்கு ஒரு 'வால்' பதவியாவது கிடைக்குமா? என்ற ஏக்கங்களோடும், முகத்தில் பல கேள்விக் குறிகளோடும் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென்று ரஜினி கூட்டிய கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களை (ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கொடுத்து) கேள்வி கேட்கச் சொல்லி அந்தக் கேள்விகளுக்கு ரஜினி பதில்களை குழப்பினார்; மன்னிக்கவும் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் ஒரு ஆச்சரியமும் நடந்தது. எப்போதும் ரஜினி தான் சொன்ன கருத்துக்கு எதிராக ஒரு கருத்து எழும்போது தன்னுடைய கருத்துக்கு ஆதரவாகவே பேசி எதிர் கருத்தை மழுப்பிவிடுவார். மீண்டும் மன்னிக்கவும் மறுத்துவிடுவார். அல்லது தான் சொன்னது தப்பு என்று ஜகாவாங்கிவிடுவார். ஆனால், இந்தக் கூட்டத்தில் நடந்தது வேறு. ரஜினி தொடர்ச்சியாக தனது அரசியல் பிரவேச விஷயத்திலும், தமிழர் பிரச்சினைகளிலும் (குறிப்பாக கர்நாடகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில்) குழப்பமான அறிக்கைகளையும் தனது நிலைப்பாட்டையுமே அறிவித்து வருகிறார். இந்த விஷயத்தில் சில பத்திரிகைகளும் சில தனிநபர்களும் அப்பட்டமாகவே அவரை குழப்பவாதி என்று கூறிவருகின்றனர். இது சம்பந்தமான மகா ரசிகர் ஒருவரின் கேள்வி: 'எல்லோரும் உங்களை குழப்பவாதி என்கிறார்களே இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'
ரஜினி: குட்டையை குழப்பி அதுசரிதான் என்று ஒப்புக்கொண்டார்.
மற்றொரு மகா ரசிகர்: கடந்த 30 ஆண்டு காலமாக நாங்கள் உங்களோடேயே இருந்து வருகிறோமே நீங்கள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? (கட்சியை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று மறைமுகமாக கேட்கிறார்)
ரஜினி: (கட்சியைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் ஆரம்பத்துல குணச்சித்திர வேடங்கள்ல நடிச்சிட்டு வந்தேன். நீங்க, குடும்பப் படங்கள்ல நான் நடிக்கணும்னு கேட்டீங்க, நானும் நடிச்சேன். அப்புறம், நீங்க ஃபைட் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னீங்க, நானும் செஞ்சேன். அப்புறம், தொடர்ந்து நீங்க காமெடி செஞ்சாதான் நல்லா இருக்கும்னு சொன்னீங்க நானும் பண்ணேன். மறுபடியும் டான்ஸ் ஆடுனா உங்களுக்கு நல்லா இருக்கும்னு சொன்னீங்க நான் டான்ஸும் ஆடினேன். இதுவரைக்கும் நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சிருக்கேன். (அரசியல் கட்சி தொடங்காம ஏமாத்துறீங்களே தலைவரே?). நீங்க என்கிட்ட வேற என்ன எதிர் பார்க்குறீங்க. பேசிக்கலா நான் ஒரு நடிகன். என் ரசிகர்களோட ஆசையை அந்தவகையில பூர்த்தி செஞ்சிட்டு வரேன். (அப்படின்னா ரசிகர்கள்தான் தங்களைக் குழப்பிக் கொள்கிறார்களோ!) அதே சமயத்துல நான் ஒரு குடும்பத் தலைவன் என்கிற முறையில என் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துட்டு வரேன். இந்த விஷயத்துல அதையேதான் உங்களுக்கும் சொல்றேன். முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க... ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் அதெல்லாம் அப்பறம். கடமையை செய்யுங்க பலனை எதிர்பாருங்க! என்று தன்னுடைய ஸ்டைலிலேயே தன் தெளிவான முடிவை ரஜினி குழப்பமான தொனியில் தெரிவித்தார்.
இப்போதாவது அரசியல் ஆசை கொண்ட ரசிகர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமையில்லை; அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வந்துதான் தீரவேண்டும் என்று ரசிகர்கள் கோருவதும் நியாயமில்லை. அரசியல் ஆசையும் மக்கள் சேவையும் நினைப்பு வைத்திருக்கிற ரசிகர்கள் அரிதாரக்காரரின் பின்னால் சுற்றித் திரிந்து தங்களுடைய வாழ்க்கையை இழந்துகொண்டிருப்பதும் சரியில்லை. இனியொரு முறை ரஜினியை அரசியலுக்கு இழுப்பதும், அவர் பெயரை பயன்படுத்தி அவர் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், ஆரம்பித்துவிட்டதாகவும் வதந்திகளைப் பரப்புவதும் ரசிகர்களுக்கும் நல்லது அல்ல. ரஜினிக்கும் நல்லது அல்ல.

25 October 2008

இயக்குனர் அமீரும் இயக்குனர் சீமானும் தீவிரவாதிகளா..?

Posted by Gunalan Lavanyan 9:16 AM, under | No comments



இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ் இன மக்களுக்காக குரல் கொடுத்தால், காட்டு மிராண்டி ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்தால், இந்திய காங்கிரசின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கண்டித்தால்... கண்டிக்கும் தமிழ் இன உணர்வாளன் மீது இந்திய பிரிவினை வாதச் சட்டம் பாய்கிறது... இது எந்தவிதத்தில் நியாயம்? தெரியவில்லை.


சிங்கள இன வெறி அரசுக்கு ஆயுத சப்ளை செய்யும் காங்கிரஸ் தியாகிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மத்தியில் 'கூத்து' ஆட்சி புரியும் திராவிடர்கள்... இனத் தமிழனை சிறை பிடிக்கிறார்கள்..!


பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, ஒருபுறம் திரைப்பட இயக்குனர்களை ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, பின்னிருந்து காங்கிரஸ் போடும் தூபத்துக்கும் தலையசைத்துவிட்டு, தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் உலகத் தமிழ் இனத் தலைவரை என்ன சொல்ல... அவரை ஏதாவது சொன்னால் மானமுள்ள திராவிடர்கள் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.


இனியும் ஒருகணம் தாமதியோம் வரும் மத்திய பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் கற்பிப்போம்! பி.ஜி.பி. அல்லாத இடதுசாரி அணியான மூன்றாவது அணியை வெற்றி பெற செய்வோம். தமிழ் இனத்தை காப்போம்!

16 October 2008

தமிழில் கலை விமர்சன புத்தகங்கள் தனிநபர் துதிபாடிகளாக இருக்கின்றன

Posted by Gunalan Lavanyan 9:43 AM, under | No comments

ங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான கல்லூரி அது. சென்னையின் மிகப் பிரதான இடமான சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இது கலைகளை விதைத்து கலைகளை வளர்க்கிற -அரசு கவின் கலைக் கல்லூரி. சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தொய்ந்துப்போயிருந்த கல்லூரி, இன்று திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசுமையாகவும், ஓவியமாகவும் சிற்பமாகவும் தென்படுகிறது. அதற்குக் காரணமானவர்களில் மிக முக்கியமானவர் கல்லூரியின் முதல்வர் ஓவியர் சந்ரு (எனப்படுகிற சந்திரசேகரன்). ஓவியராகவும், சிற்பியாகவும் தொடர்ந்து தனது கலைப் பயணத்தில் மாணவர்களோடு திசையெங்கும் சுற்றித் திரிந்து, புராதணமான கலைப் பொங்கிஷங்களைக் கண்டு, அவற்றை மக்களிடம் அடையாளப்படுத்தி வருபவர். பழங்குடிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதையாவது செய்துவிட முடியாதா என்று எத்தனிப்பவர். தன்னை ஒரு எழுத்தாளனாகவும் அடையாளம் கண்டவர். அதேநேரத்தில் கலை மீதும், கலை மீது தான் வைத்திருக்கிற கருத்தின் மீதும் தீராத நம்பிக்கை கொண்டவர். அவரிடம் புத்தகங்கள் குறித்தும், கவின்கலை விமர்சனம், அதன் போக்கு குறித்தும் உரையாடியதிலிருந்து சில பகுதிகள் வலைப்பூ வாசகர்களுக்கு...
சந்திப்பு: சா.இலாகுபாரதி

கலைகளில் ஓவியத்தை நுண்கலை என்று சொல்கிறார்களே எப்படி?
சமூகம் & பாதுகாப்பு, மனித குல மேம்பாடு என பலவகை தொழில் துறைகளைக் கொண்டுள்ளது. உற்பத்தியாளர், உற்பத்திப்பொருள் என்பது அந்தந்த தொழில் துறைகளின் இயக்கம். இதில் உற்பத்தியாளரின் அனுபவம், உற்பத்திப் பொருளின் செய்நேர்த்தி என்பவை சார்ந்து அனைத்துத் தொழில் துறைகளும் ஑கலைஒ என்ற சொல்லை கொண்டுள்ளன.பிற துறைகளின் உற்பத்திப் பொருள் தகவலுக்கு உரியவை என்றும், கலை துறையாகக் கருதப்படும் மொழி, நடிப்பு, ஓவியம் என்பன தகவல் பரப்புக்கு உரியவை என்றும் வகைப்படுத்தப் படுகிறது. இதில் மொழி, நடிப்பு என்பவை யதார்த்த வகை பயிற்சிக்கு உரியது. ஓவியம் சிறப்பு வகை பயிற்சிக்கு உரியதாக மாறி ஑நுண்கலைஒ என்ற சொல்லை பெறுகிறது.
கலை அனுபவம் எது?
சைக்கிள் ஓட்ட பழகிய பின், சைக்கிளில் நாம் போய் சேர வேண்டிய இடம் நோக்கி பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் (நாம் என்றால் உடல்) அந்த இடத்துக்குப் போய் சேர்வதற்கு முன், நமது மனம் & அங்கு போய்விடுகிறது. சென்றபிறகு நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்து திட்டமிடத் தொடங்கிவிடுகிறது. இவை இரண்டில் கண்ணால், மனதால் கண்ட காட்சிகளை சித்திரமாக்கும் திறன் வலுப்பெற்ற நிலையில், காட்சி ஒரு தளத்தில் விரிந்து கொண்டிருக்க, நமது மனம் ஑நான்ஒ, ஑படைப்புஒ என அகப் புறங்களின் ஆழத்தில் பயணிக்கிறது. இதை சித்திரம் எழுதுவதிலிருந்து விடுபட்ட மன சஞ்சாரத்தை பாவனையாகக் கொள்ளும் வழித்தடமாகக் கருதலாம்.தன் நிலை & முன் நிலை & சார்பு நிலையாக நம்முடைய தகுதி பற்றிய கேள்வி ஒரு பூவை பார்த்து ஑நீ யார்?ஒ என கேட்கும்போது, நம்மில் ஏற்படும் விந்தையும், பயமும், நமது செயல் ஊக்கமும் ஆழ்ந்த அமைதியுடன் ஒரு தளத்தின் மீது ஑பூஒ காட்சியாக விரிவதே கலை அனுபவம்.
நவீன கலை -அதன் வளர்ச்சிப் போக்கு குறித்து கூறுங்கள்...
நவீன கலை படைப்புகள் வியாபாரம், விளம்பரம், அதிகாரம் என்பவைகளை முன்வைத்து சென்றுகொண்டிருக்கின்றன. அதனால், நவீன படைப்பாளிகள் கோரும் மனித உரிமை, படைப்புச் சுதந்திரம் என்பவை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக, நவீன கருத்து வடிவத்தை மதம் என்றும், படைப்பாளிகளை மதவாதிகள் என்றும் விமர்சிக்கிறார்கள். இந்தச் சூழலில் நவீன கலைமரபு தனி நபர் சுதந்திரத்தை கோருகிறது. ஆகவே, நிற்பது, நடப்பது, கீறுவது அனைத்தும் கவின்கலை படைப்புகள் என்று இன்றைய நவீன கலைவித்தகர்களாக தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க வர்த்தக உலகமய கூத்தே தவிர கலை வளர்ச்சிக்கான வழியாக தெரியவில்லை.
உங்களுக்குப் பிடித்தமான ஓவியர், சிற்பி யார்?
ஓவியர் சந்தானராஜ், மறைந்த சிற்பி கன்னியப்பன் இருவரும் என் ஆதர்சமான படைப்பாளிகள்.
ஓவியராக இருந்துகொண்டு எப்படி எழுத்திலும் கவனம் செலுத்துகிறீர்கள்...
஑சித்திரமும் கை பழக்கம்ஒ என்பதைப் போலவே மொழியின் வரிவடிவமும் (எழுத்தும்) பழக்கம் சார்ந்ததே. நாம் பழகிக் கொண்ட ஊடகங்கள் வாயிலாக யாவற்றின் பேரிலும் நட்பும் தயையும் வெளிப்படும் வழி வகைகளில் கலை - இலக்கியங்களை காண்கிறேன்.எனவே வரைவதைப் போலவே எழுதவும் செய்கிறேன்.
கவிதை எழுதுவதில் எப்படி நாட்டம் வந்தது?
காட்சி (ஓவியம் & சிற்பம்) ஊடகங்கள் அதனதற்குரிய பலம் மற்றும் பலகீனங்களோடு விளங்குகின்றன. இதில் கவின் கலைகள் மௌடீகத் தன்மை கொண்டதாக விமர்சிக்கப்படுவதில் உலக சந்தையும், படோ டோ பங்களும், மாய்மாலங்களும் கோலோச்ச ஏதுவாக இருக்கிறது. அத்தகைய போக்கை விமர்சிக்கவே கவிதையை ஓர் மாற்று ஊடகமாக கையாள்கிறேன்.
உங்களின் வெளிவந்த புத்தகங்கள், வர இருக்கிற புத்தகங்கள் என்னென்ன...
என்னுடைய நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு முதலில் இரண்டு நூல்களாக வெளிவந்தன. அதில் ஒன்று, ஑செப்படி தப்படிஒ, மற்றொன்று ஑உருவெளிஒ அதேபோல இன்னும் சில நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வர இருக்கிறது.அதேபோல, ஑ஓவியம் என்றொரு மொழிஒ என்ற தலைப்பில் மற்றொரு கலை விமர்சன நூலும் வெளிவர இருக்கிறது. இவற்றிலிருந்து மாறுபட்டு, ஑முறிந்த கிளையிலிருந்து பறக்கும் குருவிஒ என்ற தலைப்பில் என்னுடை வேறு சில அனுபவங்கள், விமர்சனங்களை கவிதைகளாக எழுதியிருக்கிறேன்.
கலை சார்ந்தே அதிகம் பயணிக்கிறீர்கள். பிறகு எப்படி வாசிக்கவும் எழுதவும் நேரம் ஒதுக்குகிறீர்கள்?
பருவச் சூழல் சார்ந்து அம்புலி மாமா, ஆனந்த விகடன், அம்பேத்கர், அன்னியன் என்று என்னை ஈர்த்த எழுத்துகள் ஏராளம். மீண்டும் மீண்டும் நொடிக்குள் நொடியாக அந்த விந்தையை தேடி நடப்பதும், படுத்து உறங்குவதும், பொழுதும் புத்தகமும் கிடைக்கும்போதெல்லாம் படிப்பதும் என் தொடர் நிகழ்வு.
விரும்பிப் படித்து வியந்த எழுத்தாளர்கள் யார்? என்ன புத்தகங்கள்?
அப்படி, நான் வியந்த புத்தகங்கள் பல உண்டு. அதில் தமிழ் சிறு கதைகளின் தந்தை புதுமைப்பித்தன் எழுதிய ஑கயற்றாறுஒ சிறுகதை என்னை மிகவும் ஈர்த்தது. அதேபோல உலக எழுத்தாளர்களில் காஃப்காவினுடைய ஑தீர்ப்புஒ (தி ஜட்ஜ்மென்ட்), சீன எழுத்தாளன் லூசூவினுடைய ஑பைத்தியக்காரனின் டைரிஒ, ரஷ்ய எழுத்தாளன் கார்க்கியின் ஑கிளவி இஸர்கிஒ இவையெல்லாம் நான் வியந்து படித்த எழுத்து தச்சர்களின் கைவண்ணங்கள். அதேநேரத்தில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் பிரமிளின் கவிதைகளையும் படிப்பதுண்டு. என்னை வியக்க வைத்த கவிஞர்களில் பிரமிள் மிக முக்கியமானவர்.

ஓவிய மாணவர்களை ஓவியம் பழக்குவிப்பதைத் தவிர வாசிப்பு பழக்கத்துக்கு எப்படி அழைத்துச் செல்கிறீர்கள்?
கவின்கலை (ஓவியம்) & இலக்கியம் இரண்டும் வெவ்வேறு தடங்கள் என்றபோதும் அவற்றின் இலக்கு என்ற வகையில் ஒப்பு நோக்கு, விமர்சனம் என கவின்கலையும் இலக்கியமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன.எனவே, ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் என்பது அவசியமானது என்று உணர்கிறேன். ஆகவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது சார்ந்த விவாதத்தை அவர்களோடு நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறேன்.
கலை - கவின்கலை குறித்து தெரிந்து கொள்வதற்கு எப்படிப்பட்ட புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன?
ஓர் உற்பத்திப் பொருள் அதன் உற்பத்தியாளரின் தேவை, நோக்கம், செய்திறன் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அடையாளமாக விளங்குகிறது. அத்தகைய தடையங்கள் தமிழ்ச் சூழலில் வரலாறு, மதம் என்ற அளவிலேயே ஆய்வுகளும் அதற்கான வெளியீடுகளும் நிகழ்கின்றன.ஆனால், படைப்பு - படைப்பாளி என்ற வகையில் மனோநிலை, மூலப் பொருள், பரப்பின் தன்மை, உருவத் தோற்றங்களின் அமைதி, அவற்றின் பின்புல அமைதி போன்ற நிலைகள் பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை.மேலும், இன்றைய சூழ்நிலையை விஸ்தரிக்கும் கலை விவரனை, கலை விமர்சன புத்தகங்கள் தனி நபர் துதிபாடிகளாகவும், பிற மொழி விஸ்தரிப்புகளை தமிழ் மொழியில் மறு பிரதி செய்ய முற்படுபவையாகவுமே அமைந்துள்ளன.ஆகவே, இங்கு ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. கவின்கலை மரபு, உலகு தழுவிய பல்வேறு முனைப்புகளில் ஆய்வு ரீதியாக விவரனைகளும், விமர்சனங்களும், வெளிவர வேண்டியது மிக அவசியமானது என கருதுகிறேன்.
காந்தியை நவீனமாக சித்திரம் வரைவதை, ஑சிதைவுஒ என்று தொடர்ந்து விமர்சித்தி வருகிறீர்களே அதற்கு என்ன காரணம் - அதை விளக்கமுடியுமா..?
கவின் கலையில் ஑சிதைவுஒ என்பதை காட்சி தோற்றச் சிதைவு - உருவத் தோற்றச் சிதைவு என வகைப்படுத்துகிறார்கள்.உதாரணத்துக்கு, பெரியாரிடமிருந்த பிள்ளையார் சிலைகள் வீதிகளில் உடைந்து சிதரின. இச்செயலில் நியா&அநியாய தற்கங்களுக்கு அப்பால், ஒரு உருவத் தோற்றத்தைச் சிதைப்பது என்பது அது சார்ந்த கருத்தியலை சிதைப்பது என்பது விளங்குகிறது.அதேபோல, மகாத்மா காந்தியின் உருவத் தோற்றத்தைச் சிதைத்து சித்தரித்தார்கள்; சித்தரிக்கிறார்கள். அப்படி சித்தரிப்பது என்பது காந்தியையும், காந்தியத்தையும் சிதைப்பதாக அல்லது மறுப்பதாக விளங்குகிறது.அப்படிப்பட்ட அந்தச் சித்திரங்கள், காந்தி - காந்தியம் அற்ற ஒரு வயோதிக உருவத் தோற்றம் என்ற அளவில் கவின் கலைக்கே உரிய ஆய்வு வழி உற்பத்திகளைச் செய்யும்.விலக்காக, பொழுதும் காரியமுமாக உற்பத்தியான பதிவுகளை ஒரு வயோதிக உருவ தோற்றமாகவோ அல்லது காந்தி உருவத் தோற்றமாகவோ அடையாளப்படுத்தலாம்.அதேநேரத்தில், 'work of art' என்பது தகவல் பதிவுக்கானது. அப்படி இருக்கையில் தகவலையே தவறாக பதிவு செய்வது எப்படி சரியாக இருக்கும்.ஒருவர் ஒரு ரோஜாப்பூ வரைகிறார் என்று வைத்துக்கொல்வூம். அவர், ரோஜாப்பூவை கருப்பாக போட்டுவிட்டு, அதை ரோஜாப்பூ என்றும், நான் ரோஜாப்பூவை வரைந்துவிட்டேன் என்றும் சொன்னால் எப்படி மடத்தனமோ, அப்படித்தான் காந்தியைப் போன்ற சாயலில்ஒரு முகத்தை கோணல் முகமாக போட்டுவிட்டு நான் நவீன வடிவில் காந்தியை வரைந்துவிட்டேன் என்பதும்.பன்முகப் பகுப்பு, சுவர் பதிவு, வினை உருவாக மணலை குவிப்பதும் அதை கலைப்பதும் கவின்கலை கூறுகளாக உலாவிக் கொண்டிருப்பது போலவே, தமிழ்ச் சூழலில் கோணல் முகமாக வரைவதையும் நவீனம் என்றும், படைப்புச் சுதந்திரம் என்றும் கருத்துகள் உலா வருவது விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியது.இந்தக் கருத்தைச் சொல்வதால் நான் அவர்களுக்கெல்லாம் எதிரானவன், ஆகாதவன் என்று சொல்கிறார்கள். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.
மாணவர்களோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று முகாமிடுகிறீர்கள்... அங்கு என்ன மாதிரியான வேலைகளைச் செய்கிறீர்கள்...
முகாம் செல்வதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, மாணவர்கள் மக்களோடு பழகுவதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தோடு ஒரு நல்ல தொடர்பு ஏற்படுகிறது. சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மற்றொன்று, நாங்கள் செல்கிற அந்தந்தப் பகுதி மக்களிடம், அங்கிருக்கிற புராதண மற்றும் தொல்லியல் கூறுகள் பற்றி பயிற்றுவிக்கிறோம். இதனால், அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுகிறது.அப்படி ஒருமுறை நாங்கள் சென்றிருந்த பகுதிகளில் படிமப் பாறைகளை காண நேர்ந்தது. அங்கிருக்கிற மக்கள், அவற்றை உடைத்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அதைப் பார்த்ததும், அதனுடைய புராதண தன்மை எங்களுக்கு புலப்பட்டது. அது பற்றி அந்த மக்களிடம் விளக்கி எடுத்துச் சொன்னபோதான் அவர்களால் அந்தப் பாறையின் முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. இதுபோலவே தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் அறியாமையால் தங்கள் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் வேலை மிகப் பெரியது. அதில் நாங்கள் செய்வது மிகச்சிறிய பணிதான்.
கல்லூரி சீர்கெட்டு விட்டதாக வரும் விமர்சனங்கள் பற்றி...
அப்படி சொல்கிறவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றுதான் என்னால் பதிலாக சொல்லமுடிகிறது. இந்தச் சீரழிவுகளுக்கும் சீர்க்கேடுகளுக்கும் யார் காரணம். இதற்குமுன் இருந்தவர்களின் உதாசினப்போக்கு, பொறுப்பற்றத்தன்மை இவைதான். முன் இருந்ததைக் காட்டிலும் இப்போது இந்தக் கல்லூரி பல மாற்றங்களையும் பல வளர்ச்சிகளையும் கண்டிருக்கிறது. இதற்குமுன் இருந்தவர்கள் விருதுகளுக்காகவும் தங்களின் சுய ஆதாயங்களுக்காகவும் கல்லூரியின் பழமையையும் அதன் புராதணத்தன்மையையும் அழித்து ஒழித்தார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா?
நன்றி: 'விகடன் புக்ஸ்'