Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

13 April 2011

பத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு!

Posted by Gunalan Lavanyan 6:54 AM, under | No comments

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.வி.சேகர் தன்னுடைய சொத்துக்கணக்கை தாமாகவே சென்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் மனைவி மற்றும் தன்னுடைய வருமானம் பற்றிய வருமானக் கணக்கை தேர்தல் ஆணையரிடம் அளித்தார். அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கிய இந்தச் செயல் பற்றி எஸ்.வி. சேகரிடமே கேட்டோம்.

எதற்காக திடீரென்று தேர்தல் ஆணையரை சந்தித்து சொத்துக்கணக்கு கொடுத்தீர்கள்..?

தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும் இப்படித்தான் கேட்டார். ‘நீங்கள்தான் போட்டியிடவில்லையே, எதற்காக என்னிடம் கொடுக்கிறீர்கள்’ என்று கேட்டார்? எம்எல்ஏ ஆகும்போது சொத்துக்கணக்கை தாக்கல் செய்த மாதிரிதான் இப்பவும் கொடுத்து இருக்கிறேன். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதனால், கடந்த 5 ஆண்டுகளில் என்னுடைய வருமானம், என் மனைவியுடைய வருமானம் மற்றும் எங்கள் சொத்து மதிப்புகளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் பிரவீன்குமாரிடம் கொடுத்தேன். தேர்தலில் நிற்கவில்லை என்பதற்காக கடந்த 5 ஆண்டுகள் 100 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு ஓடிவிடலாமா? எல்லோருமே இப்படி தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், யாரும் செய்வது இல்லை. செய்யவேண்டும் என்று விதியும் இல்லை. ஆனால், நான் செய்திருக்கிறேன். நான் எம்.எல்.ஏவாக இருக்கும்போது பதவியைப் பயன்படுத்தி எதையும் சம்பாதிக்கவில்லை என்பதை சொல்வதற்காகத்தான் அப்படிச் செய்தேன். எல்லாருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.

சொத்துக்கணக்கு தாக்கல் செய்தபோது...


காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு கொடுத்து இருந்தீர்களே என்ன ஆனது?

ஆமாம் கொடுத்தேன். ஆனால், அது நடக்கக் கூடாது என்று எப்படியோ தடுத்துவிட்டார்கள். ஆனால், நான் யாரையும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை. தார்மீக அடிப்படையில் கேட்டேன்; கொடுக்கவில்லை. ஆனால், எனக்கு காங்கேயத்தில் ஒதுக்கியிருப்பதாக தகவல் வந்தது. அது நடக்கும் என்று இருந்தேன். ஆனால், வேட்பாளரை அறிவிப்பதற்கே இழுபறி நீடித்து வந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத தங்கபாலு போட்டியிடுகிறார். தங்கபாலு யார் என்றுகூட மக்களுக்குத் தெரியாது. மெகா டிவி வெச்சிருக்காங்களே அந்த அம்மாவோட புருஷனா... வேட்புமனு நிராகரிச்சாங்களே அந்த அம்மாவோட புருஷனா... என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; காங்கிரஸுக்குத்தான் நஷ்டம். 10 சீமான் செய்ய வேண்டிய வேலையை தங்கபாலுவே செய்துவிட்டார்.

விருப்பமனு தாக்கல் செய்தபோது...
தலைவரே மாற்று வேட்பாளர் என்பது கேலிக்குரியதாகிவிட்டதே?

ஒரு கட்சித் தலைவர் டம்மி புருஷனாக இருக்கலாம்; ஆனால், டம்மி வேட்பாளராக இருக்கக் கூடாது. ஆனால், தங்கபாலு டம்மி வேட்பாளராக இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. (சிரிக்கிறார்)

எதற்காக வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்து வந்தது?

எல்லாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாரை அறிவிப்பது, யாரை தவிர்ப்பது என்று தெரியாமல் குதிரை பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அதுதான் காரணம். இதுபற்றி ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறேன்.

என்ன பேசினீர்கள்?

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே எல்லாத் தொகுதிகளிலும் தகுதியுடையவர்களை பட்டியலிட்டு வைத்துக்கொண்டு, கூட்டணி பிரச்னை, இட ஒதுக்கீட்டுப் பிரச்னை எல்லாம் தீர்ந்தபிறகு ஏற்கெனவே முடிவுசெய்து வைத்திருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தேன். அப்படி செய்திருந்தால், இந்த இழுபறிக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அதை கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல், டெல்லியில் உள்ள தலைவர்களின் மனநிலையே வேறு. தமிழ்நாட்டில் தலைமையில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்கள் கேட்பார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்தே தூக்கினாலும் தூக்கிவிடுவார்கள்!

தங்கபாலு வேண்டுமென்றே சதி செய்துதான் தன் மனைவியை வேட்பாளராக அறிவித்து, இப்போது தானே போட்டியிடுகிறார் என்று கூறுகிறீர்களா..?

அவர் சதி செய்தார் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு கட்சித் தலைவர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் தங்கபாலு. இவருடைய நடவடிக்கையால் கட்சிக்குத்தான் மரியாதைக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

தங்கபாலு நடவடிக்கையால் மயிலாப்பூரில் காங்கிரஸ் ஜெயிக்காது என்று சொல்கிறீர்களா..?

நான் அப்படி சொல்லவில்லை. வெறும் பிராமணர்கள் மட்டும் இருக்கிற தொகுதி இல்லை மயிலாப்பூர். இங்கே குடிசைவாழ் மக்கள் இருக்கிறார்கள்; மீனவ மக்கள் இருக்கிறார்கள்; படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்று எல்லாதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தங்கபாலு இப்படி நடந்துகொண்டதால், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதுவும் இல்லாமல் குரங்கு கையில் கிடைத்த அப்பம் மாதிரிதான் மயிலாப்பூர் நிலைமை இருக்கிறது. பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர், ஆடிட்டர் எல்லாரையும் வைத்து மனுவை பரிசீலனை செய்துதான் பூர்த்தி செய்து கொடுப்பார்கள். அப்படி எதுவுமே செய்யாமல் தங்கபாலு இப்படி செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தலைவருக்கு வேண்டிய எந்தத் தகுதியும் அவரிடம் இல்லை. யார் கையில் கிடைக்கக் கூடாதோ, அங்கே மயிலாப்பூர் தொகுதி போயிருக்கிறது.
பொதுவாக இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்கிறீர்களா?

திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும். தேர்தலில் நிற்பவர்கள் வெற்றி பெறுவதற்காகத்தானே போட்டியிடுகிறார்கள். தோற்பதற்காக யாரும் போட்டியிடமாட்டார்கள். அதனால், இந்தக் கூட்டணி தோற்கும் என்று நான் எப்படி சொல்வேன். எப்பவும் நெகடிவாக யோசிக்கக் கூடாது. ஆனால், மக்கள் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?
மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றேன். அவர்கூட சொன்னார், ‘என்னாய்யா உனக்குத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். இப்படி ஆகிவிட்டதே...’ என்றார். நான் என்ன சொல்வது.

கருணாநிதியை சந்தித்தபோது...

அதிமுகவில் இருந்திருந்தால் சீட் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாகக் கிடைத்திருக்கும். ஆனால், அதை வேண்டாம் என்று நான் மறுத்திருப்பேன். காங்கிரஸில் எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன? எம்பி.யாக வேண்டும் என்று என் ஜாதகத்தில் எழுதியிருக்கும். அதனால், நான் எம்.பியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எப்பவும் உயர்வாக சிந்திக்க வேண்டும். எம்.எல்.ஏ பதவி போயிடுச்சேன்னு அழக்கூடாது. பதவிக்காக ஆசைப்படுற ஆள் நான் கிடையாது. அப்படி இருந்திருந்தால், திமுகவில் போய் சேர்ந்திருப்பேனே!

பலே பாசிட்டிவ் யோசனைதான்

பேட்டி: சா.இலாகுபாரதி

09 March 2011

பெண்ணுரிமையைப் போற்றும் நாடு!

Posted by Gunalan Lavanyan 10:37 PM, under | No comments

படிப்பதற்காக நியூஸிலாந்துக்கு போனார் சென்னை தமிழ்ப் பொண்ணு புவனா. அங்கு போனபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங் களையும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

07 March 2011

தலைவர் ஜீவா மருமகளின் சேவை

Posted by Gunalan Lavanyan 11:18 PM, under | No comments


மாமா மாணவர்களுக்காக ஆசிரமம் நடத்தினார். மருமகள் முதியோர் களுக்காக ஆசிரமம் நடத்திவருகிறார். சென்னை, தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ரோடு வழியாகப் போனால் வருகிறது மண்ணிவாக்கம். இந்த ஊரில்தான், அமரர் ஜீவா நினைவு அறக்கட்டளையின் சரணாலயம் செயல்படுகிறது. நிர்க்கதியாக வருகிற முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, இந்த ஆசிரமத்தில் பாதுகாத்து வருகிறார், சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீவாவின் மருமகள் விஜயலட்சுமி மணிக்குமார்.



இவர் நடத்திவரும் அந்தச் சரணாலயத்துக்குச் சென்றபோது, அங்கு இருக்கும் முதியோர் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு இருந்தனர். நம்மைப் பார்த்ததும் மரியாதையோடு கையெடுத்துக் கும்பிட்டார்கள். ‘‘இவங்க எல்லாரையும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் கவனிச்சிக்கிறோம்’’ என்று சாந்தமான குரலில் சொன்னார் விஜயலட்சுமி.

ஆசிரமம் நடத்தவேண்டும் என்பது இவர் திட்டம் போட்டுச் செய்த காரியம் அல்ல. ஜீவா காங்கிரஸ் தொண்டனாக இருந்தபோது நாகர்கோயில் அருகே சிராவயலில் காந்தி ஆசிரமம் அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். அந்த ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்தபோது ஜீவாவைப் பார்த்து, ‘நீ இந்தியாவின் சொத்து’ என்று பாராட்டினார். ஆனால் அந்த ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை.

‘‘ஆசிரமம் நடத்த வேண்டும் என்பது மாமாவுடைய கனவு. ஆனால் சிராவயல் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்த முடியலேங்கிற வருத்தம் அவருக்கு இருந்ததுன்னு கேள்விப்பட்டோம். அதனாலே, எங்க திருமண நாள், குழந்தைகளோட பிறந்த நாள்களில் ஆசிரமங்களுக்கு போய் அங்கே இருக்குற வங்களோடு இனிப்பு பலகாரங்களை பகிர்ந்துகிட்டு, மகிழ்ச்சியை வெளிப் படுத்திட்டு வருவோம். இதைப் பார்த்துட்டு அந்த ஆசிரமத்தை நடத்துறவங்க ளே, ‘உங்க மாமா ஜீவாவே ஆசிரமம் நடத்தின-வர்தானே, நீங்களே ஏன் ஆசிரமம் ஆரம்பிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. ஆனா, நிதி ஆதாரம் இல்லாம எப்படி ஆரம்பிக்கிறதுங்கற கவலை எனக்கும் என் கணவருக்கும் வந்தது. இதை நண்பர்களிடம் சொன்னபோது, ‘அதுக்காகவா தயங்கறீங்க... நல்லது செய்ற துக்கு நீங்க இருக்கீங்க... உதவி செய்றதுக்கு நாங்க இருக்கோம்’னு சொன் னாங்க... மனசுக்கு நிறைவா இருந்தது.

2005இல் மாமா பெயர்லயே அறக்கட்டளையை ஆரம்பிச்சு ஆசிரமத்தை தொடங்கினோம். இடையிலே மேல்மருவத்தூர் பக்கத்-துலே இருக்கிற சோத்துப் பாக்கம் கிராமத்துலே அறக்கட்டளைக்காக ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலத்-துலே விளையிற அரிசி, பயிர்களை ஆசிரமத்துக்காகப் பயன் படுத்திக்கறோம்.

அதேநேரத்துல, ஸ்டேட் பாங்க் பென்ஷனர்ஸ் அசோஸி யேஷன், கனரா பாங்க் எம்ப்ளாயீஸ் அசோஸியேஷன் எல்லா உதவியும் செய்றாங்க. இந்து மிஷன் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கருணை உள்ளத்தோடு முதியோர்களுக்காக இலவச சிகிச்சை அளிக்கிறதுக்கு, தன்னோட ஹாஸ் பிடல்லே ஏற்பாடு செய்திருக்கிறார். அதனாலே, எந்த பிரச்னைன்னாலும் இந்து மிஷன் ஹாஸ்பிடல்லே முதியோர்களை அட்மிட் பண்ணுவோம்.

ஆனா, மருந்து மாத்திரை வாங்குறதுக்கு மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கு. அப்படி நிதி பற்றாக்குறை வர்ற நேரத்துலே நானும், என் கணவரும் எங்க சம்பள பணத்திலேருந்து எடுத்து செலவு செய்யறதுக்கு தயங்குனது இல்லை. ஆனா, எங்க ரிடயர்ட்மென்ட்டுக்குப் பிறகு இந்தமாதிரி செலவுகளை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலை.

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துட்டே போறதாலே, நிதி பற்றாக்குறையை சமாளிக்க கஷ்டமா இருக்கு. சிலர் பெட்ஷீட், முதியோர்களுக்கான துணி மணின்னு உதவி செய்றாங்க. சிலர் தானே முன்வந்து அரிசி, பருப்புன்னு வாங்கி கொடுப்பாங்க. பரிபூர்ண சந்தோஷத்தோட அவங்க உதவுறதை பார்க்கும்போது ஆசிரமத்தை நடத்துறதுலே இருக்குற சிரமங்கள் பனி போல விலகிடும்.

சிரமங்கள் வரும்போது ஆதரவற்ற முதியோர்களோட வாழ்க்கையை நினைச்சு பார்ப்போம். அதோட ஒப்பிட்டா எங்க சிரமம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது. சிலர் பெத்தவங்களை பாத்துக்கக்கூட மனசு இல்லாமே இங்க வந்து விட்டுட்டு போயிடுவாங்க. காரணம் கேட்டா... ‘‘அப்பாவுக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆகமாட்டேங்குதுமா... எனக்கு அப்பாவை என்னோட வெச்சுக்கணும்னுதான் ஆசை. ஆனா, என் பொண்டாட்டியை நினைச்சா மனசு பதறுது. அவளை சமாதானப்படுத்தி அப்பாவை பாத்துக்கச் சொன்னா... ‘உன் அப்பன் சம்பாதிக் கும்போது பொண்ணுக்கு கொடுத்தான், இப்ப நிலைதப்பி போனபிறகு நான் கஞ்சி ஊத்தணுமா’’னு கேக்குறா... என்ன பண்றதுன்னே தெரியாத நேரத்துலே தான் இந்த அட்ரஸ் கிடைச்சது. அதுவும் எனக்கு சம்பளம் வேற குறைச்சலா இருக்கிறதாலே பணம் கட்டி அவரை முதியோர் இல்லத்துலே விடமுடியலே... அதனாலேதான் ஜீவா சரணாலயத்துலே இலவசமா விட்டுட்டு போறேன். அவரை பார்த்துக்கோங்கம்மா... பணம் கிடைக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துட்டு போறேம்மா’’ன்னு சொல்வாங்க.

மனசு துடிக்கிற மாதிரியான இந்தக் கதைகளை கேட்கும்போது, எங்களுக்கு ஒரே கேள்விதான் தோணும். ‘எங்களால பார்த்துக்க முடியலேன்னு பிள்ளை களை பெத்தவங்க கைவிட்டிருந்தா பிள்ளைகளோட கதி என்ன ஆகுறது..?’ மாமா இருந்திருந்தா, இப்படிப்பட்ட பிள்ளைகளை நினைச்சு என்ன பாடு பட்டிருப்பார்..? இந்த முதியோர் இல்லத்தை நடத்துறதுலே எங்களுக்கு பணத்துலேதான் சிரமமா இருக்கே தவிர, மனசுலே சிரமம் இல்லை. பிள்ளைகளும் இதை உணர்ந்தாங்கன்னா பெத்தவங்களை கைவிடுவாங் களா..?’’ விஜயலட்சுமியின் கேள்வி மனதைக் கனக்கச் செய்கிறது. இளைய தலைமுறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

- சா.இலாகுபாரதி,

படங்கள்: கமல்

நம் தோழி, பிப்ரவரி, 2011

25 February 2011

பட்டுப்புடவை, மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை

Posted by Gunalan Lavanyan 7:27 AM, under | No comments



ஐயய்யோ பிடிச்சிருக்குஎன்ற தன் பாட்டின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஹதி, சினிமா, கர்நாடக இசை மேடை ஆகிய இரண்டிலும் பிசியாக இருக்கிறார். சங்கீதக் குடும்பத்தைச் சேர்ந்த மஹதியை சந்தித்தபோது நல்ல மழை. மஹதி அகாடமி ஆஃப் மியூஸிக் அண்ட் டான்ஸ்பள்ளியில் நடந்தது இந்த மழை நாள் சந்திப்பு.


‘‘நாங்க இசைக் குடும்பம். அப்பா திருவையாறு சேகர். பாடகர்; இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யர். அம்மா, புல்லாங்குழல் வித்வான் வசந்தி. புல்லாங்குழல் வித்வம்சினி திருமதி கேசியின் சிஷ்யை. அப்பா, அம்மா சேர்ந்துதான் இந்த அகாடமியை நடத்திட்டு இருக்காங்க. இது ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. இங்கே, 600 ஸ்டூடன்ட்ஸுக்கு மேலே மியூஸிக் கத்துக்குறாங்க. பாட்டு, வீணைவயலின், கிடார், ஃப்ளூட், மிருதங்கம்னு எல்லாமே சொல்லித் தர்றாங்க. என் பெயர்லே அகாடமி நடக்கிறதாலே அப்பப்போ ஸ்கூல்லே என்ன நடக்குதுன்னு அம்மாகிட்டே தகவல் கேட்டுப்பேன். மத்தபடி எல்லாத்தையும் அப்பா அம்மாதான் கவனிச்சிக்கிறாங்க. நான் கச்சேரி, ரெக்கார்டிங்னு பிஸி ஷெட்யூல்லே இருப்பேன்.

இதோ வந்தேன்... வந்தேன்னு டிசம்பர் வந்துடுச்சு. மியூஸிக் ஃபெஸ்டிவெல் தொடங்கப்போகுது. அந்த மூடுலே இருக்கேன். அதே மூடுலே இருந்தாகணும். அப்பதான் எனக்கு ஃபெஸ்டிவெல் நல்லா போகும். என் கச்சேரிகள் நல்லா நடக்கணும்னா,  யூஸிக் தவிர, மத்த எல்லாத்தையும் நான் மறந்தாகணும். சில நேரங்கள்லே டிசம்பர் சீஸன்லே நிறைய ரெக்கார்டிங்கும் வந்துடும். அதுக்கும் போயாகணும். டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சிருக்கிறது இதையெல்லாம் சமாளிக்க ரொம்ப சௌகரியமா இருக்கு. அந்த மாதிரி சமயங்கள்லே அம்மா, அப்பாவைக்கூடக் கண்டுக்கமாட்டேன். ஆனா,  அவங்க எனக்கு உதவியா இருப்பாங்க. இப்ப கணவர் வ ந் து ட் டா ர் . அவ ரு ம் அப்பா, அம்மா மாதிரியே இருக்கார். வாழ்க்கை ரொம்ப ச ந் தோஷமா அமைஞ்சிருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் சீஸன்லே பதினஞ்சு கச்சேரியாவது பண்ணுவேன். போனவருஷம் பாடுன கீர்த்தனைகளை இந்த வருஷம் பாடமாட்டேன். சீஸன்லே ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு கீர்த்தனைகளை பி ரி ப் பே ர் ப ண் ணி வெச்சுக்குவேன். ராகத்துலே பு து சா கண்டு பி டி க் க எதுவும் இல்லே! அதனாலேஅபூர்வ ராகங்களாப் பார்த்து செலக்ட் பண்ணி வெச்சிருப்பேன். என்னோட கச்சேரியிலே எட்டு, ஒண்பது அயிட்டமாவது இருக்கும். இதையெல்லாம் ஒரு ரூலாவே கடைப்பிடிக்கிறேன். இந்த ரூல்ஸ்படிதான் இந்த சீஸனையும் தொடங்கப் போறேன். ஆனா, இந்த வருஷம் என்னோட ஒரு கச்சேரியிலே டபுள் ராகா - பல்லவி பாடுறதுக்கு ஸ்பெஷல் பிரிபரேஷன்ஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதேமாதிரி தமிழ்க் கீர்த்தனைகளையும் நிறைய பாடப்போறேன். அம்மாவும் நிறைய ஐடியாஸ் கொடுத்துருக்காங்க. அதையும் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

எப்பவும் சீஸன் ஆடியன்ஸ், எல்லா கச்சேரிக்கும் வருவாங்க. அதனாலே ஒவ்வொரு கச்சேரியும் வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அதை நிறைவேத்துறது கச்சேரி செய்றவங்களோட கடமை. என் கடமையை நான் எப்பவும் சரியா செய்ய முயற்சி பண்றேன். அதுக்கு என்னோட ரோல் மாடலா இருக்கிற குரு, மதுரை டி.என். சேஷகோபாலன் அவர்களும் ஒரு காரணம். அதேமாதிரி கேரளாவில் இருக்கிற குரு, மங்காட்டு நடேசன் அவர்களும். இவங்க, என் இசைப் பயணத்துக்கு கிடைத்த நல்ல வழிகாட்டிகள்! (மஹதியின் முதல் குரு அவருடைய மாதாவும்
பிதாவும்தான்.)

சீஸன்லே மியூஸிக் பிரிபரேஷன் எப்படியோ, அப்படிதான் என் காஸ்ட்யூமும்! டிசம்பர்னா பட்டு நிச்சயம் உண்டு. மத்த சேலைகளுக்கு இப்ப வேலையே இல்லை. பட்டுப் புடவையோடு மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை அவசியம்
இருக்கணும். இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். போன வருஷம் கட்டுன சேலையை இந்த வருஷம் கட்டமாட்டேன். இந்த வருஷம் கட்டுன சேலை அடுத்த வருஷம், நோ சான்ஸ். இதையெல்லாம் வியூவர்ஸ் (பெண்கள்) கண்கொட்டாமே கவனிக்கிறாங்க! அதனாலே சீஸனுக்கு பிரிப்பேர் ஆகும்போது சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கு.

இன்னொரு முக்கியமான ச ங் கதி! ச ங் கீ த சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சாரீரத்தை கவனிச்சுக்கணும். என்னோடது சென்சிடிவான வாய்ஸ்ங்கிறதாலே யார் கிட்டேயும் அநாவசியமா பேசமாட்டேன். வாய்ஸ் ரெஸ்ட் கொடுப்பேன். போன்லேயும் அதிகமா பேசமாட்டேன். மேக்ஸிமம் எஸ்.எம்.எஸ்.தான்! அதே நேரத்துலே சரீரத்துக்கும் எதுவும் வந்துடக் கூடாது. அதனாலே ஹாட் வாட்டர்ட ய ட்னு இ ரு ப்பேன்.  சங்கீதத்துக்கு சாரீரமும் மு க் கி ய ம் , ச ரீ ர மு ம் முக்கியம்னு அப்பா சொல்லுவாங்க. அதை எப்பவும் ஃபாலோ பண்றேன். (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!)

இப்ப இருக்கிறமாதிரி நான் பாட வரும்போது நிறைய வாய்ப்புகள் இல்லை. எங்காச்சும் ஒண்ணு, ரெண்டு வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது டி.வி. சானல்லே மியூசிக் புரோக்ராம் பண்ணுவாங்க. அந்த புரோக்ராம்லே கலந்துக்க ரொம்ப பிரயத்தனப்பட  வேண்டியிருக்கும். சில நேரங்கள்லே என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லே! (காலம் மாறிப்போச்சு!) திறமை வெளியே வர்றதுக்கு நிறைய வழி இருக்கு. ஒவ்வொரு சீஸனுக்கும் புதுசு புதுசா ஆர்டிஸ்ட் வர்றாங்க. பத்து, பன்னிரெண்டு வயசுலேயே ரொம்ப ஃபேமஸ் ஆயிடுறாங்க. விஜய் டி.வி. மாதிரி நிறை சானல்ஸ் அவங்களுக்கு ஏர் டெல் சூப்பர் சிங்கர்மாதிரி புரோக்ராம்லே வாய்ப்பு கொடுக்கறாங்க. அவங்களே வீடு தேடி வந்து அழைச்சிட்டு போறாங்க. கூடவே கிஃப்ட், சினிமா சான்ஸ்னு நிறைய கிடைக்குது.

இந்தமாதிரி நேரத்துலே இவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப கடுமையா உழைக் கணும். வெற்றி கிடைச்சிடுச்சுங்கிறதாலே இதுவே முடிவுன்னு நினைச்சிடக்கூடாது. இதைவிட சாதிக்க இன்னும் நிறைய இருக்குங்கிற உண்மையை தெரிஞ்சுக்கணும். இந்த நேரத்துலே குருவோட வழிகாட்டுதல்படி நடக்குறது ரொம்ப முக்கியம்.

இன்னும் முக்கியமான விஷயம், கர்வம் வெச்சிக்கக் கூடாது. இதெல்லாம் என் அப்பா சொல்லிக் கொடுத்த பாடம். இதை என் ஜூனியர்ஸுக்கு சொல்றது என் கடமை. அதனாலே, கர்வம் வேணாம், புகழுக்கு மயங்கவேணாம், குரு பக்தி தேவை. இதெல்லாம் இருந்தா இன்னும் இன்னும் சாதிக்க முடியும். இசைச் சிகரத்தை அடையமுடியும்.’’
- சா.இலாகுபாரதி

நம் தோழி, டிசம்பர் 2010


14 February 2010

குண்டு வெடிக்கும் பாடலாசிரியர்.

Posted by Gunalan Lavanyan 6:17 AM, under | 1 comment

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் சமீபத்திய பல பாடல்கள் செம ஹிட். கடந்த ஆண்டு ‘டாப் 10’ பாடல்கள் வரிசையில் இவரது இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ன்னு இவர் எழுதிய ‘வேட்டைக்காரன்’ படப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் நல்ல பிரபலம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இவர் எழுதிய ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’ பாட்டும் மெகா ஹிட். அதேபோல ‘என் பேரு முல்லா...’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்...’ பாடல்களும் ஹாட் டாக். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில்., தமிழ் இலக்கியம் படித்துவிட்டுப் பாடல் துறையில் இறங்கியிருப்பவர். இவர் பாடலாசிரியராக பரிணாமம் அடைவதற்கு முன்பே ழ, விருட்சம், அரும்பு என பல சிறு பத்திரிகைகளில் 50 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். தவிர ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் 50க்கும் அதிகமாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் நமது doordo (செய் அல்லது செய்) ப்ளாகுக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் பேட்டி. தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 'ரசிக்கும் சீமானே' படத்தில் ரீமிக்ஸிய 'ரசிக்கும் சீமானே பாடலுக்கு இவர், வரிகள் எழுதும் போது குண்டுவெடிக்கும் நெஞ்சுவெடிக்கும் என்று எழுதி ரசிகர்கள் மனசை வெடிக்க வைத்திருக்கிறார்... அவரிடம் நிறைய பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.

அணுகுண்டு சோதனையில்
அத்தனை சேதமில்லை
பெண்கொண்ட பேரழகில்
பிழைத்தவன் யாருமில்லை!
- கவிஞர் அண்ணாமலை

‘‘நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை. என் தாய்வழித் தாத்தா வெச்ச பேரு அண்ணாமலை. எனக்கு சொந்த ஊர், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கீழப்பட்டு கிராமம். கீழப்பட்டு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். திருவண்ணாமலையில் பத்தாவது வரைக்கும் படிப்பு. மேல்நிலை படிப்பை சங்கராபுரத்துல முடிச்சேன்.
பள்ளிக் காலத்திலேயே எனக்கு கவிஞர் வைரமுத்துன்னா உயிர். குறிப்பா, அவர் குங்குமத்துல எழுதுன ‘இதுவரை நான்’ தொடர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தத் தொடர் வரும்போது கீழப்பட்டு கிராமத்தில் இருந்தால், பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் மிதித்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்குப் போய், குங்குமம் வார இதழை வாங்கி முதல் ஆளா படிப்பேன். அத படிக்கலன்னா அன்னிக்கு சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவுக்கு வைரமுத்து என்னை பாதிச்சார். தவிரவும், நான் சினிமா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்க ஆரம்பிச்ச பன்னிரெண்டு வயசுல வைரமுத்து பாட்டுதான் எங்க பாத்தாலும் கேட்கும். ‘இளையநிலா பொழிகிறது...’, ‘பனிவிழும் மலர்வனம்...’ எல்லாம் என்னை எங்கோ அழைச்சுட்டுப் போகும்.
அந்த ஈர்ப்பால, பள்ளி முடிச்சதும் வைரமுத்து படிச்ச கல்லூரியிலேயே படிக்கணும்னு நினைச்சிதான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில சேர்ந்தேன். அப்புறம் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில். ஆய்வு படிப்புன்னு ஏழு வருஷம் பச்சையப்பன் கல்லூரியிலேயே போச்சு. கல்லூரி காலத்துல நிறைய கவிதை போட்டிகள், ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும். எல்லா கவிதை போட்டியிலும் கலந்துக்குவேன். பாடலாசிரியர் கபிலன் அப்போ என்னுடைய வகுப்புத் தோழர். நானும் கபிலனும்தான் கவிதைப் போட்டியில எங்க கல்லூரி சார்பா கலந்துக்குவோம். 
அப்படி கவிதை போட்டிகள்ல நிறைய முதல் பரிசு வாங்கியிருக்கேன். அநேகமா, போட்டியில கலந்துகிட்டா, பரிசு வாங்காம வந்த தருணங்கள் மிகவும் குறைச்சல்!
அப்போ இயக்குநர் செல்வா, எனக்கு சீனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அந்த நேரத்துல அவர் ‘சித்திரப் பாவை’ன்னு ஒரு தொடர் எடுத்தார். பாலபாரதி இசை அமைச்சாரு. அந்தத் தொடருக்கு ஒரு டைட்டில் சாங் தேவை. அதுக்கு ‘பிரபலமான பாடலாசிரியர்களை வெச்சி பாடல் எழுத வேணாம். நம்ம கல்லூரியில் இருக்கிற திறமையான மாணவர் யாரையாவது வெச்சி எழுதிக்கலாம்’னு செல்வா முடிவு பண்ணியிருந்தார். நிறைய கவிதைப் போட்டிகள்ல நான் பரிசு வாங்கியிருந்ததால என்னை அழைத்து அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். அப்புறம் ‘நீலா மாலா’ன்னு ஒரு சீரியல் எடுத்தார். அதுலயும் நான் பாட்டு எழுதினேன். எனக்கு பாட்டு எழுதணுங்கிற ஆசை இல்லாத காலத்துலேயே, இயக்குனர் செல்வா எனக்கு வாய்ப்பு கொடுத்து எழுத வெச்சாரு. 
அதுக்கப்புறம் இசையமைப்பாளர் காந்திதாசன், எனக்கு ஜூனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அவர் தினமும் ஏதாச்சும் டியூன் போட்டுட்டே இருப்பார். அந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு ரெண்டு வருஷம். அதுல டியூனுக்கு எழுதறதுல எனக்கு நல்ல பயிற்சி கிடைச்சுது.
பச்சையப்பன் கல்லூரியில எம்.ஃபில் முடிச்சுட்டு, வெளியே வந்தப்ப, செல்வாகிட்ட உதவியாளரா இருந்த சுகி.மூர்த்திங்கறவர் ‘கும்மாளம்’ படத்தை இயக்கினாரு. அதுக்கு காந்திதாசன்தான் இசை. அதுல மூணு பாட்டு எழுதச் சொன்னாங்க. ‘திம்சுகட்ட அடடா திம்சுகட்ட...’ன்னு அதுல நான் எழுதினதுதான் என் முதல் சினிமா பாட்டு. ‘சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறதே’, ‘ஒவ்வொரு நாளும் உன்முகம் பார்த்து’ன்னு மீதி ரெண்டு பாட்டும் அதுல வரும்.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ‘சேனா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘மச்சி’ ‘ஜோர்’, ‘காற்றுள்ள வரை’, ‘ஜங்ஷன்’ போன்ற 10 படங்களுக்கு எழுதினேன். அப்படி நான் எழுதிய எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். ‘திம்சு கட்டை’ பாட்டுல, 
‘செவப்பா செவப்பா ஒரு ஃபிகரு...
சிரிச்சா சிரிச்சா அட ஃபயரு!
அவ காம்ப்ளான் வாங்கிக் குடிச்சா 
ஹார்லிக்ஸ் மனசு நோகும்...
ஹெச்.எம்.டி. வாச்சு போட்டா, 
டைட்டான் ரொம்ப பாவம்...’
- இப்படி எழுதின எல்லா வரிகளும் நிறைய பேருக்கு பிடிச்சது. ‘சேனா’ படத்துல,  ‘பூச்செடிக்குகூட இந்த வீட்டில் 
காதல்தான் உண்டாச்சா... 
நீ போன பின்பு பூக்கவில்லை செடிகள் 
ஏன் என்று சொல்வாயா?
இதோ இந்த பூந்தொட்டி 
உன்னைக் கண்டால் பூப்பூக்கும்... 
அதோ அந்த நாய்க்குட்டி 
நீதான் வந்தால் வாலாட்டும்...’ என்பது போல எல்லா பாட்டிலும் நல்ல கற்பனை, புதுமை இருந்தாலும் எல்லாரையும் என் பாடல்கள் போய் சேரலை.
இப்படி போய்கிட்டிருந்த என் பாடல் பயணத்தில் முக்கியமான திருப்பம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்ததுதான். அவரை தொடர்புகொண்டதும், என் திறமையை பரிசோதிக்க பாடல் மற்றும் மெட்டு சார்ந்த ரெண்டுவிதமான டெஸ்ட் வைத்தார். அதுல அவர் திருப்தியானதும் எனக்கு, அடுத்தடுத்து வாய்ப்பளித்தார். 
ஏவி.எம்-;மின் ‘அ ஆ இ ஈ’ படத்துல ‘நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்’னு வரும் பாட்டு, ஓரளவு ஹிட் ஆச்சு. விஜய் ஆண்டனியோட இசையில ‘ரசிக்கும் சீமானே’, ‘பந்தயம்’னு தொடர்ந்து எழுதினேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துல மூணு பாட்டு... ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’, ‘என் பேரு முல்லா’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’னு மூணுமே ஹிட். ‘பண்ணாரஸ்’ மெகா ஹிட். அடுத்து, விஜய் ஹீரோவா நடிச்ச ‘வேட்டைக்காரன்’ படத்துலயும் விஜய் ஆண்டனிதான் என் பேரை இயக்குநர் பாபுசிவனிடம் முன்மொழிந்து, என்னை எழுத வெச்சார். அப்படி எழுதின ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டும் மெகா ஹிட்! 
அந்த பாட்டை ரொம்ப திட்டமிட்டு எழுதினேன். ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது உன்னை நான் பாக்கையில கிர்ருங்குது... கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது’ன்னு பல்லவி எழுதினேன். குழந்தைகளுக்கு பிடிக்கணுங் கிறதுனால சரணத்துல, ஆட்டுக்குட்டி, பூனை யானை, பேனா, இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பயன்படுத்தி இருப்பேன். அப்புறம் கிராமத்து வார்த்தைகளான ‘கம்மாங்கர காடு, சுட்ட கருவாடு’ன்னு வார்த்தைகள் வரும். இதுல விஜய்க்கு பொருத்தமா எழுதணும்னு ‘அப்பாவியா மூஞ்ச வெச்சி அங்க இங்க கைய வெச்சி, நீயும் என்னை பிச்சி தின்ன கேக்குறியேடா’ன்னு எழுதினேன். அனுஷ்காவுக்கு மூக்கு நீளம்ங்கறதால ‘துப்பாக்கியா மூக்க வெச்சி, தோட்டா போல மூச்ச விட்டு நீயும் என்னை சுட்டுத் தள்ள பாக்குறியேடி’ன்னு எழுதினேன். இப்படி எல்லாருக்கும் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டு எழுதுன பாட்டு, குழந்தைகளுக்கும் புடிக்கணும்னுதான் அதுல... காகிதம், பேனா, யான, பூன, ஆட்டுக்குட்டி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினேன். இப்ப அந்த பாட்டுதான், சினிமா துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலயும் ‘அண்ணாமலைன்னு ஒருத்தர் பாடல் எழுதிட்டு இருக்கார்’னு என்னை பிரபலப்படுத்தியிருக்கு!
அப்புறம் நடிகர் விஜய், வேட்டைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் சமயத்துல ‘பண்ணாரஸ் பட்டு கட்டி பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு மேடையில சொன்னதிலும் எனக்குப் பெருமை. ‘என் உச்சி மண்டைல’ பாட்டும் அவருக்குப் ரொம்ப புடிச்சதுதான்!
‘வேட்டைக்கார’னுக்குப் பிறகு 17 பாட்டு எழுதிட்டேன். மேக்சிமம் குத்துதான். சினிமால அப்படித்தானே... ஒரு குத்து ஹிட்டானா, அப்புறம் குத்தோ குத்து, கும்மாங்குத்துதான்!
‘ரசிக்கும் சீமானே’ படத்துல ரெண்டு பாட்டு எழுதியிருக்கேன். ‘ஓ ரசிக்கும் சீமானே’ன்னு வர ரீமிக்ஸ் பாட்டுல ‘உன் கெண்டைக்கால் அழகுல என் கண்ணு வழுக்கும்... நீ குணியும்போது மனசுக்குள்ள குண்டு வெடிக்கும்’னு  ரெண்டு வரி வரும். இது கிளப்ல ஆடற மாதிரியான சூழல்ல வர்ற பாட்டு. கொஞ்சம் அசைவமாவும் யோசிக்கவேண்டியிருந்துச்சு. 
‘ரெட்டைச்சுழி’ படத்துல கார்த்திக் ராஜா இசையில, சுந்தர்.சி பாபு இசையில ‘அகராதி’, நடிகர் ஜீவா ரெட்டை வேடத்துல நடிக்கிற ‘சிங்கம் புலி’ங்கிற படத்துல, பிரசாந்த் ஹீரோவா நடிக்கிற ‘மம்முட்டியான்’ படத்துல, எஸ்.ஏ.சி-யோட ‘வெளுத்துக்கட்டு’ படத்துல, மணிஷர்மா இசையில ஒரு பாட்டுன்னு இந்தப் பட்டியல் இன்னும் நீளுது...
நான் எழுதுற ஒவ்வொரு பாடலும் ‘வெறும் வெற்று வார்த்தைக் கூட்டங்களாக இருக்கக்கூடாது. அதுல நம்ம வாழ்ந்த வாழ்கையின் அடையாளம் இருக்கணும்’னு நெனைக்கிறேன். சன் டி.வி.யில வர்ற ‘தங்கம்’ சீரியல்ல டைட்டில் சாங்லகூட ‘துன்பம் உன்னை செதுக்கும், நீ சிந்தும் வியர்வைத் துளிகள்... எல்லாம் வெற்றிப் படிகள்’னு எழுதியிருப்பேன். பாடல் துறையில் என் வியர்வைத் துளிகள் அத்தனையும் எதிர்காலத்தில் நிச்சயம் வைரக் கற்களாக மாறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை!’’
சந்திப்பு: சா.இலாகுபாரதி புகைப்படங்கள்: ஜான்

15 January 2010

‘கவிஞர் அறிவுமதி இயக்கும் படத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான் பாடல்கள்’

Posted by Gunalan Lavanyan 1:45 PM, under | 4 comments

தாய்க் கோழியின் கால்கள் போகிற திசையெல்லாம் ஓடித் திரியும் கோழிக்குஞ்சு போல 80-களின் தொடக்கத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமானின் விரல் பிடித்து நடந்தவர் கவிஞர் அறிவுமதி. இருவருக்கும் இடையில் தாய்க்கும் சேய்க்குமான உறவு இருந்தாலும், ஒரு குருவிடம் சிஷ்யன் கொண்டிருக்கிற பயத்தையும் பக்தியையும் ஒன்றாகக் கலந்து கவிக்கோ மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தார் அறிவுமதி. இந்த இரண்டு கவிமனசுகளையும் இணைக்கும் உணர்வு இழையைப் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு நெகிழப் பேசுகிறார்கள் இருவரும்.
முதலில் கவிக்கோ தொண்டையை கனைத்தபடி, கண்கள் விரித்துப் பேசத் தொடங்கினார்...

“அது 1982. அதிகமாக நான் கவியரங்கங்கள் நடத்தி வந்த காலம். அந்தச் சமயத்தில்தான் நானும் தொழிற்சங்கத் தலைவர் சு.வெங்கடேசனும் இணைந்து பாரதி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவுக்கு கலைஞர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முந்தான் அவர் திருச்செந்தூர் நடைபயணம் போய்விட்டு களைப்போடும், கால்களில் கொப்பளத்தோடும் வந்திருந்தார். அதைப் பார்த்தபிறகு அதற்குமேல் அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் கவியரங்கத்துக்கு சிற்பி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் அறிவுமதியோடு இன்னும் சிலர் கவிதை வாசித்தனர். வாசித்தவர்களிலேயே அறிவுமதியின் கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. விழா முடிந்து அறிவுமதியை சந்தித்து, ‘இனி நான் நடத்துகிற எல்லா கவியரங்கங்களிலும் நீ தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டு போய்விட்டேன்.

சில நாட்கள் ஓடின. வாணியம்பாடியில் நான் நடத்தி வந்த ஹைக்கூ கவிதைகளுக்கான ‘ஏதேன்’ இலக்கிய அமைப்பில் கவிதை வாசித்தார். அதில் நான் சில திருத்தங்கள் செய்தேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே தொடர்ந்து நடக்கிற ஹைக்கூ வகுப்பில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதேபோல நான் நடத்துகிற கவியரங்கங்களிலும் தவறாமல் வந்து கலந்துகொள்வார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்துவிடுவார். சில சமயம் குடும்பத்தோடு வருவார்; வருகிறார் என்றால் சும்மா வரமாட்டார். கவிதை பற்றி ஏதாவது யோசனையோடு வருவார். சந்தேகங்களை அடுக்குவார். ஒவ்வொன்றாய் நான் உடைத்து, எளிதாக தெளிவுபடுத்துவேன். இந்த இடத்தில் ஒன்று சொல்லிவிடுகிறேன்... அதாவது எதைச் சொன்னாலும் கற்பூரத்தைப் போல பிடித்துக்கொள்வார்.

பொதுவாக இரவு நேரத்தில்தான் எல்லோரும் தூங்குவார்கள். ஆனால், அவர் வந்துவிட்டால் விடியவிடிய என்னிடம் கவிதை கேட்பார். நான் ஜப்பானிய ஹைக்கூக்களையும், உருது கஜல்களையும், பாரசீகக் கவிதைகளையும் அந்த நட்ட நடு நிசியில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருப்பேன். சில மார்கழி இரவுகளில் கவிதையே எங்களுக்குப் போர்வையாகிவிடும். மதி தொடர்ந்து எழுதுவார். அவர் கவிதைகளில் இருந்த கவித்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் அவர் கவிதைகளின் ரசிகனாகிவிட்டேன்.

ஒருமுறை என்னிடம் இருந்த ஜப்பானிய ஹைக்கூ புத்தகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் என்னோடு படித்த தி.லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். அப்போது அவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அவரும் அதை ஆர்வத்தோடு வாங்கி மொழிபெயர்த்துக் கொடுத்தார். அந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் அறிவுமதியிடம் படிக்கச் சொல்லி கொடுத்தேன். அவரும் கவிதைகளைப் படித்தார். அந்தக் கவிதைகளின் ஈடுபாட்டால் ஹைக்கூ கவிதைகள் எழுதி வந்து என்னிடம் காண்பிக்கவும் செய்தார்.

கவிதைகளைப் பார்த்து மகிழ்ந்துபோய், ‘மதி! இன்னும் சில கவிதைகளை எழுது, ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பாக போட்டுவிடலாம். அப்படி அந்த தொகுப்பு வரும்போது அது உனக்குப் பெருமை சேர்க்கும். இதுவரை தமிழில் யாருமே செய்யாத இந்த வேலையை நீ செய். தமிழில் முதன் முறையாக ஹைக்கூ கவிதைகள் எழுதிய பெருமை உன்னைச் சேரட்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இவரோ ஆர்வத்தில், தான் படித்தது மட்டுமின்றி மற்றவர்களும் பயன் பெறட்டுமே என்ற நல்ல நோக்கில் வேறொரு கவிஞரிடம் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புத்திசாலிக் கவிஞரோ, லாட்ஜில் ரூம் போட்டு அந்தக் கவிதைகளிலிருந்து தான் பெற்ற தாக்கத்தால் ஒரு ஹைக்கூ தொகுப்பையே எழுதிவிட்டார். எழுதியது மட்டுமல்லாமல், ‘தமிழில் முதன் முறையாக ஒரு ஹைக்கூ தொகுப்பு’ என்று அச்சடித்து, அறிவுமதி வெளியிடுவதற்கு முன்கூட்டியே அதை வெளியிட்டுவிட்டார். நாகரிகம் கருதி அந்தக் கவிஞர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஒருமுறை தி.நகரில் அலுவலகம் போட்டு, படம் இயக்கப் போவதாக அறிவுமதி சொன்னார். அதில் நான் பாடல் எழுத வேண்டும் என்றும் கேட்டார். அந்த நேரத்தில் படத்தின் தலைப்பு, இசையமைப்பாளரின் பெயரோடு என் பெயரையும் சேர்த்து போஸ்டரில் அடித்திருந்தார். அதில் பலருக்கு ஆச்சர்யம்! ‘எப்படி அப்துல்ரகுமானை சம்மதிக்க வைத்தாய். இதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ள மாட்டாரே’ என்று ஆச்சர்யப்பட்டவர்கள் கேட்டனர். அவர்கள் சொன்னதைப் போலவே நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஏனோ படமும் நின்றுபோனது.

அறிவுமதி நிறைய இடத்தில் என்னை குருவாக சொல்லுவார். ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அவர்தான் எனக்கு குரு. ‘ரொம்பவும் நல்லவனாக இருந்தால் வாழ முடியாது’ என்பதை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்” என்று நிறுத்தியவர் சிஷ்யனின் தோளில் கை போட்டு, “தம்பி பேசு” என்று தட்டிக் கொடுத்தார்.

அன்பின் பெருங்கரங்கள் தன்னைத் தழுவியதும் நெகிழ்ந்துபோன அறிவுமதி மெல்லிய குரல் எடுத்துப் பேசத் தொடங்கினார்.




“என்னை அய்யாவிடம் அறிமுகப்படுத்தியது அண்ணன் மீராதான். மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் நான் படித்த கவியரங்கக் கவிதையைக் கேட்டுவிட்டு அங்கிருந்த மீரா அண்ணன் ஏராளமான பார்வையாளர்களையும் கடந்து வந்து என் கைகளைப் பிடித்து குலுக்கினார். பிறகு, அய்யாவுக்குத் தொலைபேசி செய்து, ‘மாநாட்டில் அறிவுமதி என்கிற பையன் சிறப்பாக கவிதை வாசித்தான். நீங்கள் அவனை வாணியம்பாடிக்கு அழைத்து உங்கள் கவியரங்கங்களில் பயன்படுத்தினால், சிறப்பாக வருவான்’ ” என்று உரிமைமையோடு கூறினார். இருவரும் தியாகராயர் கல்லூரியில் வகுப்புத் தோழர்களாக இருந்ததும் அந்த உரிமைக்குக் காரணம்.

இதை மனதில் வைத்திருந்த அய்யா, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பாக நடைபெறும் ‘கவிராத்திரி’க்கு என்னையும் வந்து பங்குபெறுமாறு அன்போடு அழைத்தார். அதில் எனது கவிதைகளையும் கவிதை வாசிப்பு முறையையும் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ந்தார்.

அதேபோல, சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரில் உள்ள பஞ்சாப் நிறுவன பள்ளியொன்றில் ஆண்டுக்கு ஒருமுறை ‘முஷைரா’ என்கிற ‘கவிராத்திரி’ விடியவிடிய நடக்கும். அதற்கு என்னை அழைத்துச் சென்று பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு, இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்த கவிஞர்களின் கவிதைகளை ‘அடடே...’ போட்டு வியந்து ரசித்தபடியே எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் அழகே அழகு. அந்த ரசனைக்காரர் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்ன ஒரு ரசமான கவிதை இப்பவும் நெஞ்சில் அப்படியே ஒட்டிக்கிடக்கிறது...
‘அவளது கண்களின்
ஆழத்துக்குள்
எட்டிப்
பாருங்கள்...
சமுத்திரத்தின் ஆழத்துக்குள்
ஒரு சமுத்திரம்
கிடைக்கலாம்!’
இப்படி இனிக்க இனிக்க அவர் சொல்லச் சொல்ல, கை வலிக்க வலிக்க நான் எழுதிக்கொண்ட பக்கங்கள் ஏராளம்.

பல சிரமங்களுக்கு இடையில் உதவி இயக்குநராக திரைத்துறையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒருநாள் எனக்குத் தந்தி வந்தது. அதில் ‘உடனே வாணியம்பாடிக்கு புறப்பட்டு வரவும்’ என்று மட்டும் அய்யா எழுதியிருந்தார். நான் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடினேன். என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஒரு தோழனைப் போல் தோள்களை அணைத்துச் சொன்னார்... ‘உனக்கு திரைப்படத் துறை சரிப்பட்டு வராது. அதனால், ஆம்பூர் இசுலாமியா கல்லூரியில் நாளை முதல் நீ தமிழ்ப் பேராசிரியராக பணியாற்று’ என்று கட்டளையிட்டார். அன்று மாலையே என்னை வாணியம்பாடி நகருக்கு அழைத்துச் சென்று, ஒரு மகள் தனிக்குடித்தனம் போவதற்கு ஒரு தாய் என்னென்ன செய்வாளோ அவை அத்தனையும் அய்யா எனக்குச் செய்தார். பாய், தலையணை, பானை, துடைப்பம் என்று சகலத்தையும் விலைபேசி வாங்கி, அதை என் கையில் கொடுத்து, பின்னிருக்கையில் பிடித்துக்கொண்டு உட்காரச் சொல்லிவிட்டு அவரது செல்ல டி.வி.எஸ்.50-ல் அழைத்துச் சென்று ஓர் அறை எடுத்து என்னை தங்க வைத்த நினைவு இப்பவும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.

எந்த ஊர், எந்தச் சாதி, எந்த மதம் என்று எதுவுமே பார்க்காமல் என்னிடமிருந்த தமிழை மட்டுமே பார்த்து, ‘முன்னா... முன்னி...’ என்று அவர் செல்லமாக அழைக்கிற இரண்டு பிள்ளைகளோடு என்னையும் ஒரு மூன்றாவது பிள்ளையாக ஏற்று வளர்த்த அந்த உயர்ந்த மனது அய்யாவுக்கே உரியது.

அய்யாவுக்குத் திரைத் துறையில் படைப்பாளிகளை தரம் தாழ்த்தி நடத்துவதைத்தான் பிடிக்காதே ஒழிய, மற்றபடி திரைப்படங்களில் வருகிற பாடல்களில் அவர் கேட்ட நல்ல வரியைப் பற்றி என்னோடு பேசுவார். ‘மதி இந்த வரியை யார் எழுதியது. இந்தப் பாட்டு யாருடையது’ என்று ஆர்வத்தோடு கேட்கும்போது, மிகப் பெரிய கவிஞன், ‘ஒரு திரைப்பாடலில் ஒளிந்துகொண்டிருக்கிற நல்ல வரிகளை எப்படித்தான் தேடிப் பிடிக்கிறாரோ’ என்று வியந்துகொள்வேன்.

அவர் கற்பனைகளில் பயணம் செய்யும் கலாரசிகன் மட்டுமல்ல, களத்திலும் தன்னை நிரூபிக்கும் நெஞ்சுறுதிக்காரர்.தமிழீழப் பிரச்னை தொடங்கிய காலத்தில் மூன்றே நாட்களில், வாணியம்பாடியைச் சுற்றிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து, ஈழக் கவிஞர் காசி ஆனந்தனை அழைத்து, அவரை மேடையில் பேசச் செய்து, ஈழத் தமிழர்களுக்கு அந்தத் தொகையை நன்கொடையாக வழங்கினார். கடல் கடந்து வாழும் தமிழர்கள் மீதும் அவர் வைத்திருக்கிற அபிமானத்தை அப்போது என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட என் குருநாதர், என் தாய், என் தோழர், என் கவிக்கோவுக்கு ‘கண்ணதாசன்’ இதழைப்போல ‘அப்துல்ரகுமான்’ என்ற இலக்கிய இதழ் நடத்த விரும்பி தொடங்கினேன். பிறகு அது ‘கவிக்கோ’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அவரது உடல்நிலை காரணமாக அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.

அவர் என்னை வளர்த்தாரே தவிர, என் கொள்கைகளைக் கேள்வி கேட்கவில்லை. என் பயணத்துக்கு வழி காட்டினாரே தவிர, என் பாதையை மாற்றவில்லை. இதுபற்றி அவரே ஒருமுறை கூறியிருந்தார்...
‘அறிவுமதி
என் வளர்ப்பு.
ஆனால்,
என் வார்ப்பு
அல்ல!’
அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை”
ஆமாம். அவரவர் சுயம் அவருக்கன்றோ!

சந்திப்பு: சா.இலாகுபாரதி


photo courtesy: vikatan deepavali malar 2009

14 January 2010

சமுதாயத்துக்கு உதவி செய்யுங்கள்... - சுதா ரகுநாதன் பேட்டி

Posted by Gunalan Lavanyan 1:50 AM, under | No comments

கர்நாடக இசை உலகில் சுதா ரகுநாதனுக்கு என்று தனியிடம் உண்டு. இவர் குரலுக்கு உருகாத இசை ரசிகர்களே இல்லை. கார்மேகம் சூழ்ந்து ஜில்லென்று மழை பெய்தால் உடல் எப்படி குளிருமோ, அப்படி இவர் பாடக் கேட்டால் காதும் குளிரும். டிசம்பர் சீஸன் வந்தால், இவர் பாட்டு இல்லாமல் சீஸன் களைகட்டாது. ‘திரை இசையிலும், கர்நாடக இசை உலகிலும் கொடிகட்டிப் பறந்த எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையாக இருக்கிறது’ என்று சொல்லும் சுதா ரகுநாதனை பேட்டிக்காக அபிராமபுரத்தில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம். சுதாவின் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட விருதுகள் நம்மை வரவேற்கின்றன. விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது வீட்டின் வரவேற்பறை. ‘கிட்டத்தட்ட இசைக்காகக் கொடுக்கப்படும் எல்லா விருதுகளையும் வாங்கிவிட்டீர்களோ’ என்று சந்தேகத்தோடு கேட்டால் ‘கொல்’லென்று இசையாகவே சிரிக்கிறார். டெல்லியில் ‘இந்திர பிரஸ்தா’ இசைப் பண்டிகைக்கு போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவரிடம், பயணக்களைப்பு என்பதே இல்லை.

இந்திர பிரஸ்தாவைப் பற்றிச் சொல்லுங்கள்...
டெல்லி மாநில அரசும், சாகித்திய கலா பரிஷத்தும் இணைஞ்சி நடத்துறதுதான் இந்திர பிரஸ்தா. இது இசைக்கான முழு திருவிழா. இந்தியாவின் முக்கியமான மொழிகளின் இசைச் சங்கமம். இந்திய அளவுல புகழ்பெற்ற நிறைய கலைஞர்கள் வந்து பாடுவாங்க. இந்த வருஷம் நான்தான் தமிழகத்தோட பிரதிநிதி. ஒருபக்கம் இந்துஸ்தானி, மறுபக்கம் கர்நாடிக்’ன்னு இசைத் திருவிழா ரொம்ப ஜோர்” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த கேள்விக்கு முன்னோட்டமாக எங்கிருந்தோ அனல் மேலே பனித்துளி’ பாடல் வந்து காதில் விழுந்தது.

வாரணம் ஆயிரம்’ படத்தில், அனல் மேலே பனித்துளி’ பாடல் பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
‘‘இந்தப் படத்துக்கு முன்புவரைக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணிக்கு பாம்பே ஜெயஸ்ரீதான் ஸ்லோ மெலடி பாடல்களைப் பாடிட்டு இருந்தாங்க. ஏனோ, இந்தப் படத்துல ஒரு வித்தியாசத்தை அவங்க எதிர்பார்த்தாங்க. ரெக்கார்டிங் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்துச்சு. மிட் நைட்லதான் ரெக்கார்டிங். பாடல் வரிகள் பார்த்தேன், அசத்தல். கவிதையா தாமரை எழுதியிருந்தாங்க. தூக்கம் போயேபோச்சு! ஹாரிஸ் சொன்னபடி பாடினேன். புதிய காம்பினேஷன் கிளிக்!”
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவைதானே இவள் இனி’
- சுதாரகுநாதனின் குரலில், மனசு மழையில் நனைகிறது. வெளியேயும் மழை கொட்டத்தொடங்கியதுதான் ஆச்சரியம்! மழை வந்ததால் இந்தப் பாடல் வந்ததா? இந்தப் பாடல் பாடியதால் மழை வந்ததா?

அனல் மேலே பனித்துளி’க்குப் பிறகு சினிமாவுக்கு நிறைய பாடுகிறீர்களா?
‘‘வாய்ப்பு நிறைய வருது. ஆனா, கச்சேரி இருப்பதால் ஒப்புக்கொள்ள முடியலை. இருந்தும் இடையிடையே மூணு பாட்டு பாடிட்டேன். சூர்யா நடிக்கிற ஆதவன்’ படத்தில ஒரு பாட்டு பாடியிருக்கேன்.” என்கிற சுதா இதுவரைக்கும் சினிமாவுக்காக டஸன் பாடல்கள்தான் பாடியிருக்கிறாராம்!

டிசம்பர் சீஸன் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘ஸ்கூல், காலேஜ் டேஸ்ல ஸ்டூடன்ட்ஸ் பரீட்சைக்கு எப்படி தயாராவாங்களோ அப்படிதான். பரீட்சைக்கு பத்துநாள் முன்பாகத்தானே மாணவர்கள் படிக்கிறாங்க. நானும் அப்படித்தான். சீஸனுக்கு பத்துநாள் முன்புதான் பிரிபரேஷன்ல உட்காருவேன்.
டிசம்பர் வருதுன்னாலே எனக்கு கொஞ்சம் ஃபியர்தான். ரசிகர்களை திருப்திப்படுத்தணும். சபாக்காரர்களுக்கு ஏத்தாமாதிரி பாடணும். நான் பிரிப்பேர் பண்ணிவெச்சிருக்கிற பாடல்களைப் பாடணும். புதுசா சில ராகங்கள், கீர்த்தனைகள். இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். இதை எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சி கச்சேரியைக் கொண்டுபோகணும்.
முன்னாடியெல்லாம் டிசம்பர்ல இருபத்தஞ்சு கச்சேரிகள் வரை பாடிட்டிருந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி பதினஞ்சிலிருந்து இருபது கச்சேரிகள் வரை பாடுறேன். டிசம்பர்’ன்னாலே 180 பாடல்களாவது தயார் செய்யவேண்டியிருக்கு. தவிர, வருஷந்தோரும் சீஸனுக்கு என்னோட ஆல்பம் ரிலீஸ் பண்ணுவேன். அதுக்காகவும் பாட்டுகள் ரெடிபண்ணணும்.
இடையில விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி மாதிரி நிறை ஃபெஸ்டிவல்ஸ். அதுக்கும் நேரம் ஒதுக்கி ரெடியாகணும்; கச்சேரிகள் போகணும். தியாகராஜர், சியாமாசாஸ்திரி போன்ற இசை பிரம்மாக்கள் கடலளவு பாடல்கள் எழுதியிருக்காங்க. பாரதி, பாரதிதாசனின் தமிழிசைப் பாடல்களும் நிறைய இருக்கு. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும். இப்படி சீஸனுக்கு முன்னும் பின்னும் நிறை மெனக்கெடல் தேவையிருக்கு. அப்படி மெனக்கெடாட்டா கச்சேரி களைக்கட்டாது” என்கிற சுதா ரகுநாதனின் கச்சேரியில், ராகம்தான் ப்ளஸ். அவர் பாடும் பாடல்களில் ராகத்துக்குத்தான் மெயின் ரோல்.

உங்கள் கச்சேரியில் என்ன விசேஷம்?
‘‘என் பாட்டுதான். ரசிகர்களை எழுந்திரிக்காமல் உட்கார வைக்கணும்னா பாடுற ஒவ்வொரு பாட்டும் கலகலன்னு இருக்கணும். அந்தமாதிரி பாடல்களைத்தான் செலக்ட்பண்ணுவேன். என் கச்சேரிக்கு சோகமான மனநிலையில் ஃபேன்ஸ் வந்தாலும் போகும்போது மனம் நிறைய மகிழ்ச்சியோடுதான் போவாங்க. காரணம், என் பாடல்களில் ராகத்துக்கும் தாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கச்சேரியை கலகலன்னு கொண்டுபோவேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. நான் ஆலாபனைக்கு நேரம் அதிகம் ஒதுக்குறதில்லை. ஸ்ட்ரெயிட்டா ராகத்துக்கே போயிடுவதுதான் என் பாணி. அதுதான் விசேஷம்.”

எந்த ராகங்களை நீங்கள் அதிகம் பாடுகிறீர்கள்?
‘‘72 மேளகர்த்தா ராகத்துல பிரதிமத்திம ராகம் 36. சுத்தமத்திம ராகம் 36. நான் அதிகம் பாடுவது கல்யாணி, தர்மவதி, ஷண்முகப்ரியா மாதிரியான பிரதிமத்திம ராகங்கள்தான்.
ஒரு கூடுதல் தகவல்: நிறைய சினிமாப் பாடல்கள் பிரதிமத்திம ராகங்கள்லதான் பாடுறாங்க” என்கிற சுதா ரகுநாதன் தமிழ் உட்பட தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி என்று கிட்டத்தட்ட 10 பத்து மொழிகளில் பாடுவார்.

பாட்டுக்கு எது முக்கியமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
‘‘எமோஷன். ப்பாவம்தான். ப்பாவம் இல்லாம பாடினா உப்புச்சப்பு இல்லாத சாப்பாடுமாதிரிதான் பாட்டும். மேகத் திரள்கள் ஒன்றுகூடி மழை பொழிகிறமாதிரி எமோஷன் இருக்கணும். அப்படி பாடினா வராத மழையும் வரும்” வெளியில் மழை இன்னும் ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது.

உங்கள் குருவைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘இந்த இசைத் துறையில் நான் இவ்வளவு தூரம் வளர்ந்தது, புகழ் பெற்ற பல விருதுகள் பெற்றதெல்லாம் என் குரு இல்லாம நடந்திருக்காது. இசைத் தவிர, வாழ்க்கைக்கு எது நல்லது? எது தேவையற்றது’ன்னு எனக்கு சொல்லி கொடுத்ததும் என் குரு எம்.எல்.வி’தான். எனக்கு கிடைத்த புகழையும் விருதுகளையும் அவங்களுக்கு காணிக்கையாக்குறேன்.” அடக்கம் தெறிக்கப் பேசும் சுதா, இசைக்கு சேவை செய்யும்நேரத்தில், கொஞ்சம் சமுதாயத்துக்கும் சேவை பண்ணவேண்டும்’ என்கிறார். சமூகசேவைக்காகவே சமுதாய அறக்கட்டளை’ என்ற பெயரில் டிரெஸ்ட் நடத்தி வருகிறார்.

சமுதாய அறக்கட்டளைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘1999-ல் அறக்கட்டளை தொடங்கினேன். இப்போ பத்தாண்டு ஆகியிருக்கு. பல லட்சங்களை இந்த டிரெஸ்ட் மூலமா சமுதாயத்துக்கு வழங்கியிருக்கோம். அறக்கட்டளை மூலமா செய்ற உதவிகளுக்கு என்னோட நண்பர்கள்தான் அதிகம் உதவறாங்க. அவங்களோட உதவியை முக்கியமா குறிப்பிடணும். குழைந்தைகளுக்காகத்தான் நிறைய செய்றோம். மருத்துவ உதவி. ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உதவி, கல்வி உதவின்னு குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் தர்றோம். அவங்க நல்லா இருந்தாத்தானே நாடு நல்லா இருக்கும்.
கொளத்தூர்ல இருக்குற ‘அருணோதயம்’ ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துல ஒரு ரூம் கட்றதுக்காக கடந்த ஆண்டு ஐந்து லட்சம் வழங்கினோம். பெங்களூர்ல ‘உன்னத்தி’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அங்க வறுமையால பாதிக்கப்பட்டவங்க, படிப்பறிவு இல்லாதவங்க, ஏழைக் குழந்தைகள்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு உணவுக்கே மூவாயிரம் ரூபாய் செலவாகும். நாங்க அஞ்சு நாள் உணவு செலவுக்கு எங்களால் முடிஞ்ச உதவியை இந்த வருஷம் செஞ்சோம். கடந்த வருஷம் ராமச்சந்திரா மருத்துவமனை மூலமா 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய 50 லட்சம் தந்தோம். அதுல என் சொந்த பணம் 25 லட்சம். அந்த நிகழ்ச்சியில எஸ்.எம்.கிருஷ்ணா வந்து கலந்துகிட்டார். இதுவரைக்கும் 75 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சிருக்கு. இன்னும் பல மைல் தூரம் போகவேண்டியிருக்கு. இதெல்லாம் மக்களுக்கு தெரியணும்னு சொல்லலே. எல்லாரும் தங்களால முடிஞ்ச உதவியை சமுதாயத்துக்கு செய்யணும்னுதான் சொல்றேன்.” வெளியே மழை விட்டிருந்தது. சமுதாய அறக்கட்டளையின் சேவை சமுதாயத்துக்கு தேவை.

சந்திப்பு: சா.இலாகுபாரதி
(2009 – விகடன் தீபாவளி மலருக்காக எடுக்கப்பட்ட பேட்டி)