01 February 2010

கூந்தலிலிருந்து வழியும் வாசனை...

Posted by Gunalan Lavanyan 12:34 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை -1

இப்போதுதான் முதன்முறையாக
அவளைப் பார்க்கிறேன்...
தோட்டத்திலிருக்கும்
பூக்களை கொய்கிறபோது
வருகிற வாசனையைப்போல்
மயிர் கற்றைகளை சரிசெய்கிறபோது
அவள் கூந்தலிலிருந்து
வாசனை வழிகிறது...



இதுவரை காணாத அழகு
இதற்குமுன் நுகராத வாசம்
புதிதாய் காதல் கசிய
கற்றுக்கொள்ளும் கண்கள்
முத்தம் செய்யாத இதழ்கள் என்று
பூப்படைந்து
இப்போதுதான் வெளியே வருபவள் போல்
இருக்கிறாள்.


அடையிலிருந்து வரும்
கோழிக்குஞ்சைப் போல்
நடக்கிறாள்...
சுடச்சுட உருட்டிய பஞ்சுமிட்டாய் போல்
சிரிக்கிறாள்...
இன்னும்
அவளை உங்களிடம் சொல்லமுடியாது
காதல் ரகசியமானது.

30 January 2010

காதலர் தினக் கொண்டாட்டம்

Posted by Gunalan Lavanyan 10:11 PM, under | No comments

வலைப்பூ உலகில் ஒரு புதிய முயற்சி - பிப்ரவரி 1 (திங்கள்) முதல் பிப்ரவரி 15 வரை காதல் ஸ்பெஷல்.



காதலித்து திருமணம் செய்தவர்கள் - இப்போது காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காதலில் வெற்றி பெறுவது எப்படி? காதலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு டிப்ஸ்களை தர இருக்கிறார்கள். தினம் ஒரு ஜோடியாக 15 நாட்களுக்கும் 15 ஜோடிகள் காதல் டிப்ஸ் அளிக்க இருக்கிறார்கள்... இன்னும் காதல் கவிதைகள்... காதல் கடிதங்கள்... கஜிராஹோ சிற்பங்கள், காதலர்களின் புகைப்படங்கள்... மறைந்த பிரபலங்களின் உன்னதமான காதல் சங்கதிகள்... இன்னும் இன்னும் ஏராளமான பதிவுகளை பதிவேற்ற இருக்கிறேன். காதலர்கள், காதல் மணம் புரிந்தவர்கள், காதலிக்க பிரயத்தனப்படுவர்கள் எல்லோரும் நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை படித்து உங்களது கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... விமர்சனங்கள், பாராட்டுகள், ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
காதலைக் கொண்டாடுங்கள்!

மிகுந்த அன்புடன்
சா.இலாகுபாரதி

28 January 2010

காதல் நதி

Posted by Gunalan Lavanyan 7:33 AM, under | No comments

பூத்த நாள்முதலாய்
வண்டுகளே மொய்க்காத
மலரைப்போல் இருந்தாய்.
நான் வந்து மொய்த்துவிட்டேன்.



உன்
மகரந்தத்திலிருந்து உறிஞ்சுகிறேன்...
ஆனாலும்,
வாற்றாது சுரக்கிறது
தேன்.

ஒரு கணம்
கண்களைப் பார்த்தேன்.
உன் கண்கள் சொன்னது...
‘நமது காதல் ஜீவநதி’ என்று...
என் கண்கள் நதியாகிவிட்டன...

என்ன செய்யப் போகிறாய்..?
முடிந்தால் கட்டிக்கொள்...
அல்லது
ஆனந்தப் பெருநதியை வழியவிடு...

26 January 2010

காதல் தோய்ந்த மனது

Posted by Gunalan Lavanyan 10:19 PM, under | No comments

கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...

இந்தியாவுக்கு வெற்றி!

Posted by Gunalan Lavanyan 6:53 AM, under | No comments

3,20,61,600 மணித்துளிகள், 5,34,360 மணிகள், 22,265 நாட்கள், 3,172 வாரங்கள், 732 மாதங்கள், 61 ஆண்டுகள் (1950 - 2010)!

இந்தியாவுக்கு வெற்றி.



இந்தியா குடியரசு நாடாகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினம் இன்று.
இந்த குடியரசு தினத்தில் இந்தியச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது முப்பாட்டன்களுக்கு வீரவணக்கம்!

இனியொருமுறை இந்திய மண்ணை அடிமைப்படுத்த எவனையும் அனுமதியோம் என்று உறுதிகொள்வோம்.

நாம் அனைவரும் இந்தியர்கள்.
இந்திய தேசம் நமது தாய்நாடு.
நமது தாய்நாட்டை காக்கவும்,
நம் தேசத்தின் ரகசியங்களை பாதுகாக்கவும்
நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று
இந்தியத் தாயின் மடியில் நின்று
இந்தியர்கள் அனைவரும் உறுதிகொள்வோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
வெற்றி நமதே!
இந்தியாவுக்கு வெற்றி!

24 January 2010

மழை வந்துவிட்டது இதயத்தில்!

Posted by Gunalan Lavanyan 7:54 PM, under | No comments


  • மழை வந்துவிட்டது இதயத்தில்
  • மெல்லிய இசை எழுப்பி
  • சில்லென்று பெய்கிறது...
  • தென்றல் விசும்புகிறது
  • குளிர் நடுங்குகிறது
  • செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன...
  • பச்சைப் பச்சையாய் புல்வெளிகள்
  • கால்களை வருடி சிலிர்க்கின்றன.
  • தெரு ஓடையில் மிதக்கிறது
  • காகிதக் கப்பல் - காதல் கடிதம்.
  • பறவைக் குஞ்சுகள்
  • சிறகுகளில் ஒளிந்துகொண்டு
  • கீச்ச்... கீச்ச்... கீச்ச்...
  • முளைக்கத் தொடங்கியிருந்தன
  • மழைக் குடைகள்...
  • டீசல் வழிந்த சாலைகளில் வானவில்
  • நெப்பந்தஸ் மழைத்துளிகளை
  • ஜீரணித்து ஏப்பம் விட்டது & டப்
  • ஆர்மோன் மாற்றத்தால்
  • மழை விட்டுவிட்டு பெய்தாலும்
  • தூவானம் இருக்கும்.
  • இதயம் நின்றுபோகும்சமயம்
  • ஓய்ந்தாலும்
  • வேறு இதயத்தில் பெய்யும்
  • மழை

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்...

நேற்று காலை முழுக்க
என் வீட்டு
தோட்டத்தையே
சுற்றிச்சுற்றி வந்த
பட்டாம்பூச்சி
இன்று அந்த
அடர்ந்த முட்புதரில் சிக்கி
உயிர் நீத்துக் கிடந்தது.

சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
போய் வந்துகொண்டிருந்த
நாய்க் குட்டி
ஏதோ வாகனத்தின்
டயர் பதிந்த
அடையாளத்தோடு
நசுங்கிக் கிடந்தது.

சிலந்தி பின்னிய
வலையின் இடையே
ஈயின் மரணம்.
பிறிதொரு நாளில்
வீட்டை ஒட்டடை அடித்ததில்
நசிங்கிப்போனது
ஈயும் வலையும்.

சாலையோர மரத்தை
வெட்டிச் சாய்ந்ததில்
கூடு உடைந்து
சிதறிப்போனதிலிருந்து
செத்துக் கிடந்தது
காக்கைக்குஞ்சு.

மகுடியின் நாதத்திற்கு
படமெடுத்து ஆடும் பாம்பு
ஒரு நாளில்
மரக்கிளையில் தொங்கியபடி
நாதமில்லாது ஆடிக்கொண்டிருந்தது
காற்றோடு.

இப்படி
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
ஏதோவொரு வகையில்
நிகழ்ந்துவிடுகிறது
மரணம்
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருப்பது இல்லை.
நாம் எல்லோரும்
காத்திருக்கிறோம்
மரணத்திற்காக.

- சா.இலாகுபாரதி

2005-ல் 'கூட்டாஞ்சோறு' சிறுபத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் தேர்வு பெற்ற கவிதை.

23 January 2010

திருமணம் முடித்த ஆண்கள் கவனத்துக்கு...

Posted by Gunalan Lavanyan 7:25 AM, under | 1 comment

இறக்க நேரிட்டால்...

காலம் சென்ற
என் நண்பரின் படத்திற்கு
பூவும் பொட்டும்
வைத்தார்கள்.
கணவனை இழந்த
அடையாளம் என்று சொல்லி
அவர் இணை
இனி அவையெதுவும்
இல்லாமல் வெறுமனேயே
இருக்கவேண்டும் என்றார்கள்.




நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...

அவையெதுவும்
நான் அவளை
மணந்ததற்கான
அடையாளச் சின்னங்கள் அல்ல.
அதற்கு முன்பாகவே
அவையாவும் அவளின்
பயன்பாட்டுப் பொருட்கள்.

- சா.இலாகுபாரதி

2004-ல் எழுதிய கவிதை.

அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.
ஆனால், இப்போது திருமணத்துக்குப்பின்னும் 
இதே கருத்தில்தான் இருக்கிறேன்.